“இராணுவ ஆட்சியொன்று ஏற்படலாம்” – சந்திரிகா எச்சரிக்கை!
தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டெனவும் மக்கள் தமது திறமைகளைப் பாவித்து அதைத் தடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
காலிமுகத் திடல் சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவிவரும் அசம்பாவிதங்களைக் காரணம் காட்டி இராணுவ ஆட்சியொன்றை நிறுவுவதற்கு தற்போதைய ஆட்சியாளர் முனையலாம் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் வேண்டுமென்றே குழப்பங்களை உருவாக்க எத்தனிக்கலாம் எனவும் மக்கள் விழிப்போடு இருந்து தங்கள் ஒழுங்கமைப்பு திறமைகளைப் பாவித்து இவற்றைத் தடுக்க வேண்டுமெனவும் அவர் தனது ருவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
“நீதியையும், ஜனநாயக ஆட்சியையும் கோரி நீங்கள் இதுவரை மகத்தானதும் அமைதியானதுமான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறீர்கள். ஆனாலும் அதைக் குழப்பி வன்முறையைத் தூண்டுவதன் மூலம் இராணுவ ஆட்சியை நிறுவலாம் எனச் சிலர் திட்டமிடலாம். எனவே நீங்கள் அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டுமென நான் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.