இராணுவத் தளபதியின் நியமனம் மூலம் அரசாங்கம் சகல பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளையும் மீறிவிட்டது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் -

இராணுவத் தளபதியின் நியமனம் மூலம் அரசாங்கம் சகல பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளையும் மீறிவிட்டது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Spread the love

ஆகஸ்ட் 20, கொழும்பு:

ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமனம் செய்ததன் மூலம் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம், சீர்திருத்தம் போன்ற விடயங்களில் அரசு கொடுத்திருந்த உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது என நியூயோர்க் கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.

ஒரு தேசிய இராணுவத்தின் தளபதியாக இருந்துகொண்டு போர்க்குற்றங்களைப் புரிந்தவர் என்று நம்பகத்தன்மையுடன் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஒருவரை, நிதி அமைச்சர் மங்கள சமரவீராவினால் கடந்த மார்ச் மாதம், மனித உரிமை ஆணையகத்தின் 2015 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மான நீடிப்பு ஆதரிக்கப்பட்ட பின்னாலும், சிறீலங்காவின் ஜனாதிபதி நியமனம் செய்திருக்கிறார் என அது விசனம் தெரிவித்திருக்கிறது.

சிறிசேன மற்றும் உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே மறுப்புத் தெரிவித்திருப்பினும், தீர்மான நீடிப்பு, 2009 இல் முடிந்த 26 வருடப் போரின் போது இழைக்கப்பட்ட யுத்த மீறல்களுக்கு நீதியையும், பொறுப்புக்கூறலையும் கேட்டு நின்றது.

” மிகவும் துக்ககரமான உண்மை என்னவென்றால், நீதியை விரும்பாத காரணத்தால் சிலர் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் விரும்பவில்லை. அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கான நீதியை மட்டுமே விரும்புகிறார்கள்” என மங்கள சமரவீர கூறியதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டிருக்கிறது.

மேஜர் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவின் நியமனம் அவர் கூற்றை உறுதி செய்கின்றது எனத் தெரிவிக்கிறது அது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் மேற்கொண்ட விசாரணைகளின் போது போரின் போது சில்வாவிந் கட்டளைக்குட்பட்ட 58வது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தச் சட்ட மீறல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை எனப் பதிவாகியுள்ளது.

பிரிவினைவாத விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த ஒரு ‘ஹீரோ’ என்று சில்வா தன் இணையத்தளத்தில் தன்னையே புகழ்ந்திருக்கிறார். இக் குற்றச்சாட்டுகளிற்காக, 2012ம் ஆண்டு, அவர் சிறீலங்காவின் ஐ.நா. பிரதி தூதுவராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ஐ.நா. அமைதிப்படையின் விசேட ஆலோசனைகுழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலத்தப்பட்டார். 1980களில் தென்னிலங்கையில் நடைபெற்ற ஆயுதக்கிளர்ச்சியின்போது சிங்களத் தேசிய இயக்கமான ஜனதா விமுக்தி பெரெமுன அமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு.

ஐ.நா. மனித உரிமை ஆணையக விசாரணைகளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட படையினரை இராணுவத்திலிருந்து நீக்கும்படி ஆணையகம் சிறீலங்காவிற்குப் பரிந்துரைத்திருந்தது. அப்படியிருந்தும், விசாரிக்கப்பட வேண்டிய சில்வாவிற்கு அரசாங்கம் பதவி உயர்வுகளை வழங்கியிருந்தது எனக் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து, தான் மிகுந்த குழப்பமுற்றிருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிஷெல் பக்கெலெட் தெரிவித்துள்ளார்.

” நீண்ட காலமாக நீதியையும், பதில்களையும் கேட்டு விழிப்புப் போராட்டம் நடத்திவரும் சில்வாவின் 58வது படைப்பிரிவினால் பாதிப்புக்குள்ளாகியவர்களின் உறவினர்களுக்கு – இந்த நியமனம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், சீர்திருத்தம் சம்பந்தமாக அரசு அளித்திருந்த வாக்குறுதிகளையும் மீறியிருப்பதை நிரூபித்திருக்கிறது” என கண்காணிப்பகம் மேலும் தெரிவித்திருக்கிறது

Related:  வடமாகாண ஆளுனர், ஐ.ஒன்றியத் தூதுவர் குழு யாழ்ப்பாணத்தில் சந்திப்பு!

சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதிக்கான தீர்ப்பாயம் (tribunal) ஒன்றினை உடனடியாக நிறுவி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. அது தவறினால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தலையிட்டு அதைச் செயற்படுத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்தது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error