Healthவைத்தியன்

இரத்த மாற்று மூலம் கோவிட்-19 நோய்க்குச் சிகிச்சை?

நமது உடல் – அத்தியாயம் 2 பாகம் 2 (தொடர்ச்சி)

வைத்தியன்
இரத்த குரூப்புகள் என்றால் என்ன? (What are blood groups?)

இரத்த குரூப்புகளில் நான் கு வகைகள் உள்ளன. A,B,AB,O ஆகியனவே அவை. செங்குருதிக் கலங்களின் வெளிச் சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் அடையாளப் பட்டியை வைத்து (பயணப் பெட்டிகளை அடையாளப்படுத்துவதற்குக் கட்டும் நாடாக்கள் போல) இவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இந்த அடையாள பட்டி Antigen எனப்படுகிறது. நோய் தீர்ப்பில் மிக முக்கிய பங்காற்றுவது இந்த antigen. உடலுக்கு வெளியிலிருந்து வரும் எதிரிகளும் இப்படியான பட்டிகளை அணிந்துகொண்டு வருவது வழக்கம். இதனால், செங்குருதிக் கலங்கள் அணியும் பட்டிகளை ‘Self’ antigens என்றும், எதிரிகள் அணிவதை ‘Non-Self’ antigens என்றும் அழைப்பார்கள். உடலின் நோயெதிர்ப்புக் காவலர்களான antibodies, ‘non-self’ antigen களை இப் பட்டிகளின் மூலம் இலகுவாகக் கண்டுபிடித்துத் தாக்கியழிக்கின்றன.

வகைப்படுத்தல்

‘A’ எனப் பெயரிடப்பட்டுள்ள antigen ஐக் கொண்ட செங்குருதிக் கலங்களைக் கொண்டிருக்கும் இரத்தம் குரூப் ‘A’ எனப் படுகிறது. அதே போல ‘B’ antigen ஐக் கொண்ட செங்கலங்களைக் கொண்ட இரத்தம் ‘B’ குரூப் எனப்படுகிறது. இந்த இரண்டையும் கொண்டது குரூப் ‘AB’ எனவும், ஒரு antigen மே இல்லாத இரத்தக் கலங்களுள்ள இரத்தத்தை குரூப் ‘O’ எனவும் வகைப்படுத்தியுள்ளார்கள்.

இதை விடவும், குருதியை மேலும் இரண்டு முறைகளில் வகைப்படுத்தியுள்ளார்கள். இந்த antigen களிலுள்ள Rh factor பதார்த்தத்தைப் பொறுத்து அவை பிரிக்கப்படுகின்றன. ஒரு antigen இல் Rh இருந்தால் அதை Rh+ எனவும் இல்லாவிட்டால் Rh- எனவும் பிரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, AB குரூப்பில் சிலர் AB- ஆகவும் சிலர் AB+ ஆகவும் இருக்கலாம்.

இரத்த குரூப் பொருந்தாது என்பதன் விளக்கம்

ஒரு சாத்தியத்தைப் பார்ப்போம். எனக்கு A வகை இரத்தம் இருக்கிறது. உங்களுக்கு B வகை இருக்கிறது. எனது இரத்தத்தை உங்களுக்கு ஏற்றுகிறார்கள். உங்களது இரத்தக் கலங்களில் இருக்கும் antigen (self) நீலப் பட்டி என வைத்துக்கொள்வோம். எனது இரத்தக் கலங்கள் சிவப்பு பட்டியுடன் வருகிறது. என்ன நடக்கும்? உங்கள் புலானய்வுப் பிரிவு (வெண் கலங்கள்) உடனடியாக என்னை ஒரு எதிரியாக லேபல் குத்தி விடும். அதன் பிறகு உங்களுடைய வெண்கலங்கள் A இற்கு எதிரான antibodies ஐ உருவாக்கிவிடும். அது தொடர்ந்தும் உங்கள் இரத்தத்தில் இருக்கும். பிறகு ஒரு போதும் A இரத்தம் உங்களுக்குப் பொருந்தாது. அது எப்போதும் எதியாகவே பார்க்கப்படும்.

இரத்த மாற்றம் பல தேவைகளுக்காகச் செய்யப்படுகிறது. 1) செங்கலங்கள் (haemoglobin) குறைவாக இருப்பவருக்கு வடித்தெடுக்கப்பட்ட செங்கலங்கள் ஏற்றப்படும். அப்போது குரூப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டும். 2) சிலருக்கு வடித்தெடுத்த குருதித்திரவப் பதார்த்தங்கள் (plasma products) மட்டும் ஏற்றப்படும். இவற்றில் இருக்கும் எதிர்ப்பொருட்கள் அவயவைக்கு இணக்கமான இரத்த குரூப் பொருத்தம் பார்த்தே ஏற்றப்பட வேண்டும்.

இரத்தப் பொருத்தம் ஆய்வு கூடங்களில் சிறிய செயற்பாட்டின் மூலம் மிக இலகுவாகத் தீர்மானிக்கப்படுகிறது. இதன் போது, ஒருவருடைய இரத்தத்தின் சில துளிகளை எதிர்ப்பொருட்களுடன் கலப்பார்கள். கலக்கப்பட்ட இரத்தம் ‘A’ குரூப்பாக இருந்து கலக்கபப்டவுள்ள எதிர்ப்பொருள் ‘A’ இற்கு எதிரானதாக இருந்தால் (anti-A) செங்கலங்கள் உடனே குழைந்து திரட்சியாகிவிடும். இதே போன்று anti-B, anti-Rh எதிர்ப்பொருட்களையும் பாவித்து பொருத்தமான இரத்த குரூப்புகளைத் தீர்மானிக்கிறார்கள்.

‘O’ குரூப்

இரத்த மாற்றத்தின் போது தானம் செய்பவரின் இரத்தம் O+ வகையினதாக இருந்தால் அது A+, B+, AB+, O+ வகை இரத்தங்களைக் கொண்ட நோயாளிகளுக்கு இணக்கமாக இருக்கும்.

O- குரூப் இரத்தம் உள்ளவர்கள் எவருக்கும் தானம் செய்யலாம். இதற்காக அவர்களைச் பொது வழங்கிகள் (Universal Donors) எனக் கூறுவர். இவர்களது இரத்தத்தில் எந்தவித அண்டிஜெனும் (antigens A,B or Rh) இல்லாததால் இந்த குரூப் நடுநிலையானது, எதிரி என்று எதுவும் இதற்குக் கிடையாது.

AB+ குரூப்

இவர்கள் பொது வாங்கிகள் (Universal Recipients) எனப்படுகிறார்கள். எந்த குரூப்பும் இவர்களுக்குப் பொருந்தும்.

குருதித் திரவ மாற்று (Plasma Transfusion)

வடித்தெடுக்கப்பட்ட குருதித் திரவ மாற்று செங்கலங்கள், வெண்கலங்கள் தவிர்ந்த பல இரத்தப் பதார்த்தங்களைக் கொண்டவை. இவற்றில் இருக்கும் எதிர்ப்பொருட்கள் மட்டுமே பொருத்தம் பார்க்கப்படுகிறது. ‘A’ இற்கு எதிரான எதிர்ப்பொருளைக் கொண்ட திரவத்தை ‘A’ குரூப் நோயாளிகளுக்கு ஏற்ற முடியாது. அதே போலவே ‘B’ யும். இதனால் குரூப் ‘AB’ இரத்தத்தைக் கொண்டவர்களின் திரவம் எவருக்கும் பொருந்தும் (பொது வழங்கி). இந்த குரூப்பில் ‘A’ அல்லது ‘B’ எதிர்ப்பொருட்கள் இல்லை என்பதால் பாதுகாப்புண்டு.

Blood typePercent of CanadiansBlood types of compatible recipients (red blood cells)Blood types of compatible recipients (plasma)
O-7All blood typesO-, O+
O+39O+, A+, B+, AB+O-, O+
A-6A-, A+, AB-, AB+O-, O+, A-, A+
A+36A+, AB+O-, O+, A-, A+
B-1B-, B+, AB-, AB+O-, O+, B-, B+
B+8B+, AB+O-, O+, B-, B+
AB-<1AB-, AB+All blood types
AB+3AB+All blood types
இரத்த வகைகள்
கோவிட்-19 நோயாளிகளுக்கு இரத்த மாற்றம் மூலம் சிகிச்சை (Convalescent plasma (CP) transfusion)

கோவிட்-19 நோய்க்கு இதுவரையில் சிகிச்சைக்கான மருந்தோ அல்லது தடுப்புக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் தீவிரம், வேகம் காரணமாக அவசர நடவடிக்கைகளாக ஏற்கெனவே இதர வைரஸ்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மருந்துகளைத் தனியாகவும், கலந்தும் (cocktails) ஆகக் கொடுக்கும் முயற்சிகள் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், ஏற்கெனவே கோவிட்-19 நோய்த் தொற்று வந்தவர்களது இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் குருதித் திரவத்தைத் தீவிர கோவிட்-19 நோயாளிகளுக்கு ஏற்றுவதை ஒரு சிகிச்சை / தடுப்பு மருத்துவமாகச் செய்ய முடியுமா எனப் பலரும் முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே கோவிட்-19 நோய்வந்து தப்பியவர்களது இரத்தம் அக் குறிப்பிட்ட வைரஸுக்கு (அது தனக்குரிய தனித்துவமான பட்டியுடன் (antigen) இருக்கிறது) எதிரான எதிர்ப்பொருட்களை ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கின்றது. எனவே இந்த எதிர்ப்பொருட்களை வடித்தெடுத்து குருதித் திரவத்துடன் புதிய நோயாளிகளுக்கு ஏற்றுவதே இந்த செயல்முறை. சீன விஞ்ஞானிகள் இப்பரிசோதனை முயற்சியை ஏற்கெனவே செய்து வெற்றி கண்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

Passive immunization எனப்படும் இம்முறை 20ம் நூறாண்டில் பழக்கத்தில் இருந்திருக்கிறது. முறையான சிகிச்சை அல்லது தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்கு சில வருடங்கள் பிடிக்கும் என்பதால், CP எனப்படும் இத் திரவ மாற்றத்தை கோவிட்-19 நோயாளிகளில் மீண்டும் பரீட்சிக்க பல நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கனடிய இரத்த சேவைகள் இவ் விடயத்தில் பல்நாட்டு மருத்துவ சமூகங்களுடன் இணைந்து செயற்படுகிறது. இதை முன்னிட்டு அது இரத்த தானங்களை நாடு தழுவிய ரீதியில் முடுக்கி விட்டுள்ளது. அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் இம் முயற்சியில் இணைந்து செயற்படுகிறார்கள்.

கனடாவில், பல விஞ்ஞானிகள் இணைந்து குருதித் திரவ மாற்றின் மூலமான தேசிய சிகிச்சைத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான வரைவொன்றை மத்திய சுகாதாரக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திடம் அனுமதிக்காகச் சமர்ப்பித்துள்ளனர். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான இரத்த வழங்கலைச் செய்வதற்கு கனடிய இரத்த சேவைகளும், ஹேமா-கியூபெக்கும் தயாராகவுள்ளனவென அறியப்படுகிறது.

அங்கீகாரம் கிடைத்ததும், இவ் வமைப்புகள் முன்னாள் கோவிட்-19 நோயாளிகளிடம் தொடர்புகளை மேற்கொள்ளலாம். இது பற்றிய கேள்விகள் ஏதுமிருந்தால் கனடிய இரத்தசேவைகளின் பின்வரும் இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

————-