Uncategorized

பொம்பியோ வருகை | அமெரிக்க – சீன Big Boss போரின் முதற்கட்டம் (Season One)?


அரசியல் அலசல் / சிவதாசன்

இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக்கேல் பொம்பியோ, எதிர்பாராத விதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கையின் இறைமைக்கு ஆபத்ததி தரும் ஒப்பந்தங்களைத் திணிக்க அவர் வருகிறார் எனக்கூறி அவரது வருகையைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள், கற்றோர் அமைப்புக்கள், குடிமைச் சமூகங்கள், சிங்கள பெளத்த தீவிரவாதிகள் எனப் பலரும் எதிர்த்திருந்தனர். அவரது வருகையின் காரணம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என ஆராய்கிறது இக் கட்டுரை.

தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் அதன் ‘பட்டித் தெரு’ (BRI) திட்டத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சீனாவிடமிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவையும் தற்போது அமெரிக்காவுக்கு எழுந்திருக்கிறது. இலங்கையின் தெற்குக் கரையியிருந்து 6 கடல் மைல்களில் சீனா ‘அமைத்து வரும்’ அந்தப் பட்டித் தெருவில் உலகின் மூன்றில் இரண்டு கப்பற் போக்குவரத்து நடைபெறுகிறது. வருடத்துக்கு 60,000 கப்பல்கள் சரக்குகளைக் கொண்டு செல்கின்றன. அதைக் கவசப்படுத்த வேண்டியது அமெரிக்காவின் இன்றய தேவை. இலங்கையில் சட்டபூர்வமாகக் காலூன்ற அமெரிக்கா பல ஒப்பந்தங்களை இலஙகையுடன் செய்யும் தொடர் முயற்சிகளில் ஒன்றாகவே பொம்பியோவின் இந்த வருகை அமைகிறது.

இலங்கை – அமெரிக்க ஒப்பந்தங்கள்

சமீப காலமாகப் பரந்தளவில் பேசப்படும் ‘மில்லேனியம் சலெஞ் கோர்ப்பொறேசன்’ (MCC Compact) எனப்படும் நிதியுதவியை இலங்கை மீது அமெரிக்கா திணிக்கிறது எனபது எதிர்ப்பாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

Millennium Challenge Corporation (MCC)

இலங்கையில் போக்குவரத்து, காணிப் பிரயோகம் ஆகிய துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கென 5 வருடங்களுக்கு $480 மில்லியன் டாலர்களை MCC இலங்கைக்கு வழங்குமெனவும் அது எப்படிப் பாவிக்கப்படுகிறது, பாவனையில் வெளிப்படைத் தன்மை, என்பதில் தமது கண்காணிப்பு இருக்கவேண்டுமென்பதும் அமெரிக்காவின் நிபந்தனை.

கடந்த 10 வருடங்களுக்கு மேல் இத் திட்டத்தை வகுத்துவந்திருப்பினும் அப்போது சீனாவின் ஆதிக்கம் தென்னாசியப் பிராந்தியத்தில் வெளிப்படையான அச்சுறுத்தலைத் தரவில்லை என்பதால் இலங்கை விடயத்தில் அமெரிக்கா அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கவில்லை. தற்போது இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையை மீண்டும் தன் அணைப்புக்குள் கொண்டுவரலாமென அமெரிக்கா முயல்கிறது.

இதற்கு ரணிலின் அரசாங்கம் ஆதரவாக இருந்தது எனினும் 2019 ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்ச தரப்பு இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இலங்கையின் இறைமைக்குள் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது என்ற, சிங்கள தீவிரவாதிகளை உசுப்பேத்தும் பேச்சுக்களை மட்டுமே அரசியல்வாதிகள் பேசி வந்தார்கள்.


நன்மை தீமைகள்

இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பைச் சீர்திருத்துவது, பாவிக்கப்படாமல் இருக்கும் அரசுக்குரிய தரிசு நிலங்களை அபிவிருத்தி செய்து தனியாருக்கு குத்தகைக்குக் கொடுப்பது என்பனவே இந்தத் திட்டத்தின் வெளிப்படையான நோக்கம். ஆனால் உண்மையில், பல் தேசிய பெரும் வணிக நிறுவனங்களுக்கு அக்காணிகளைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் சிறு விவசாயிகளை ஒதுக்கி, ஒழித்துவிடும் சர்வதேச நாணைய நிதியத்தின் இரகசிய திட்டத்தின் வடிவமே இந்த MCC என பல குடிமைச் சமூகங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை, சீனாவின் உட்கட்டுமானத் திட்டங்களின் மூலம் ராஜபக்சக்கள் உட்படப் பலர் ‘கவனிக்கப்பட்டதுபோல்’ இத் திட்டம் ‘கவனிக்காது’ என்ற காரணத்தாலும் அரசியல்வாதிகளால் எதிர்க்கப்படலாம். என்னவாக இருந்தாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை ‘சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை’ என்பது உண்மை.

SOFA, ACSA

அமெரிக்கா மீது சந்தேகத்தைத் தரும் மேலும் இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இவை. ஒன்று கையெழுத்திடப்பட்டுவிட்டது. மற்றது இன்னும் இழுபறியில் இருக்கிறது.

Acquisition and Cross-Servicing Agreement (ACSA) எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்கெனெவே கையெழுத்திடப்பட்டு விட்டது.

2002 இலிருந்து திட்டமிடப்பட்ட இவ்வொப்பந்தம், 2006 இல் கையெழுத்திடப்பட இருந்தது. அப்போது இலங்கை பாதுகாப்பு படை கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து வடக்கில் போரை முன்னெடுப்பதற்காகத் தமது எண்ணத்தை பாதுகாப்பு அமைச்சு மூலம் அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்கா அதற்கு எதிராகத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டது (விக்கிலீக்ஸ்). விடுதலைப் புலிகளுடன் பேசி அதிகாரப் பகிர்வை முன்னெடுக்கும்படி ஆலோசனை வழங்கியதுடன் இவ்வொப்பந்தத்தைக் கையெழுத்திடுவதையும் பின் போட்டது.

பின்னர், பெப்ரவரி 28, 2007 இல் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச மற்றும் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்களினால் இரகசியமாகக் கையெழுத்திடப்பட்டது. இலங்கையில் அமெரிக்கப் படைகள் கால் பதிப்பதற்கும், உயிராபத்தான ஆயுத வழங்கலைத் தவிர மற்றெல்லா வழிகளிலும் இலங்கைப் படைகளுக்கு உதவி செய்வதே இவ்வொப்பந்தத்தின் நோக்கம். இலங்கையின் தேசியவாதிகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தெரியாமல் இருக்கவேண்டுமென்பதற்காக இரகசியமாகக் கையெழுத்திடப்பட்டது. 10 வருடங்களுக்கு கையெழுத்திடப்பட்ட இவ்வொப்பந்தம், ரணில்-மைத்திரி அரசால், 2017 இல் கலவரையின்றிப் புதுப்பிக்கப்பட்டது.Status of Forces Agreement (SOFA)

இவ்வொப்பந்தம் அமெரிக்கப் படைகள் தங்கு தடையின்றி இலங்கையைத தளமாகப் பாவிக்க இணக்கப்படுவது தொடர்பானது. 1995 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசு அமெரிக்காவுடன் இவ்வொப்பந்தத்தைச் செய்திருந்தது. இவ்வொப்பந்தத்தின்படி, அமெரிக்கப் படைகளோ, அல்லது அரசாங்கம் சார்பான தனைநபர்களோ இலங்கைக்குச் செல்ல விசா தேவையில்லை. அடையாள அட்டையைக் காட்டினாலே போதும். இலங்கையின் எந்தப்பகுதிக்கும் அமெரிக்கப்படைகள் சென்றுவர அனுமதி தேவையில்லை.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இலங்கை முக்கிய தேவையாக இருந்தது. 2015இல் ஆட்சிக்கு வந்த சிறிசேன இவ்வொப்பந்தத்துக்கு முழு ஆதரவையும் அளித்தார். ஜே.வி.பி. போன்ர சில இடதுசாரிகளும் அப்போது இதற்குத் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் பல தேசியவாதிகளும், இடதுசாரிகளும் இது இலங்கையின் இறயாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எனக்கூறி இவ்வொப்பந்தத்தை எதிர்த்தனர்.

2019 அக்டோபர் ‘சதி’ மூலம் சிறிசேன ரணில் ராஜபக்சவை அகற்றிவிட்டு மஹிந்த ராஜபக்சவைப் பிரதமர் ஆக்கியதும், அவர் தமது ஆலோசகர்களுடன் அமெரிக்கா சென்று அமெரிக்காவின் சகல கோரிக்கைகளுக்கும் உடன்படுவதற்கு இணங்கியிருந்தனர். 2015இல் தனது ஆட்சியைக் கவிழ்த்ததில் அமெரிக்காவுக்கு பெரும்பங்கு உண்டென்பதைத் தெரிந்து வைத்திருந்த மஹிந்தவுக்கு 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்காவின் கால்களில் விழுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. MCC முதல் ஏனைய ஒப்பந்தங்கள் வரை அவர்கள் வெளிப்படையாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவர்களது இரண்டாம்தரத் தலைவர்களைக் கொண்டு அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு எதிராக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இவ் விடயத்தில் ஜே.வி.பி.யின் தளம்பல் நகைப்புக்குரியது. தேர்தல் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பைக் காட்டும் இவர்கள், ஆப்கானிய அமெரிக்கப் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரவைக் கேட்டு நின்றவர்களுமாவர்.ஜனாதிபதி தேர்தலின்போது அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் மெளனம் பலருக்குச் சந்தேகத்தைத் தருவித்திருக்கலாம். MCC, SOFA ஆகிய இரு ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்குள் நிலைகொள்ள அமெரிக்கா பகீரதப் பிரயத்தனம் செய்தது. இந்தியாவும் உடன் போனது. சீனாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு இது அவசியாமாக இருந்தது. ஆனால் ராஜபக்சக்கள் அமெரிக்கா, இந்தியாவுடன் நடனமாடிவிட்டு இரவு சீனாவின் அறைக்குப் போய்விட்டார்கள். அணிலேறவிட்ட நாய் போன்றாகிவிட்டது அமெரிக்காவின் நிலை.

தற்போதைய பொம்பியோவின் வருகையின்போது ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றிருந்தது. அவர் ஜனாதிபதி கோதாபயவையும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவையும் மட்டுமே சந்தித்தார். மஹிந்தவைச் சகோதரர் புறந்தள்ளினாரா அல்லது பொம்பியோ புறந்தள்ளினாரா?

சந்தேகம் இன்னும் புலனாகவில்லை. இவ்வொப்பந்தங்களுக்கு தேசியவாதிகள், இடதுசாரிகளிடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது. இவ்வொப்பந்தங்கள் இலங்கையின் இறைமைக்கு ஆபத்து விளைவிக்குமென அவர்கள் பதாகைகளைத் தூக்கியுள்ளார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு எழுதிக் கொடுத்த போது வாலைச் சுர்ட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி., சீனத்தின் குழு வருகை தந்தபோது எதிர்ப்புத் தெரிவிக்காத ஜே.வி.பி., பொம்பியோவின் வருகையை மட்டும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளது. எல்லாமே ராஜபக்சக்களின் வேலைத் திட்டத்தின் பிரகாரமே நடைபெறுகிறது.

பொம்பியோவின் இந்த வருகை ஏமாற்றமான ஒன்றென்று நான் நம்பவில்லை. 1995 இல் சந்திரிகாவினாலும், 2007 இல் கோதாபயவினாலும் விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவேண்டிய தேவை இருந்தது. இனிமேல் தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்காவின் தயவு தேவைப்படுகிறது. சீனாவுடன் நடனமாடி முடிய இரவு அமெரிக்காவின் அறைக்கு ராஜபக்சக்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இப்போது வந்திருக்கிறது. குறைந்தது MCC ஒப்பந்தமாவது கையெழுத்திடப்படும். 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு எப்படி ராஜபக்சக்கள் அதன் எதிராளிகளைக் கட்டிப் போட்டார்களோ அப்படியான மந்திரக் கட்டுக்குள் அமரிக்க எதிராளிகளும் அடங்குவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்கிறீர்கள் – இதைக் கூறவே பொம்பியோ வந்து போனார்.

அமெரிக்க – சீன Big Boss போரின் முதற்கட்டம் Season One இலங்கையில் ஆரம்பமாகிறது.