இரட்டைக் குடியுரிமை பெறப்பட்ட விதம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை
இது தொடர்பான பத்திரங்களை குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்குமாறு குடிவரவு, தேர்தல் திணைக்களங்களுக்கு கொழும்பு நீதவான் உத்தரவு!
ஸெப்டம்பர் 27, 2019

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கையெழுத்திட்ட அததனை பத்திரங்களின் நகல்களையும் விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்குமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்ககு கொழும்பு முதன்மை நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பாவிக்கப்பட்ட வீரகெட்டிய பிரிவுச் செயலகத்தின், கோதபாய ராஜபக்சவின் பெயரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் உட்பட்ட, 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மெடமுலன மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்துடன் தொடர்புடைய சகல பத்திரங்களின் நகல்களையும் குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்கும்படி அம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கும் கொழும்பு முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2015 தேர்தல் பிரசாரத்தின் போது, சுற்றுலா நுழைவு அனுமதியுடன் நாட்டுக்குள் பிரவேசித்து, இரட்டைக் குடியுரிமையைப் பெறாது சட்ட விரோதமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் செய்த முறைப்பாடு தொடர்பாகவே நீதிபதி இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இது சம்பந்தமான பத்திரங்களைத் தருமாறு நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சைக் கேட்டபோது அவை தம்மிடம் இல்லை என அமைச்சு தெரிவித்ததாக அறியப்படுகிறது.
இந்த வருடம் மே மாதம் 17ம் திகதியன்று தனது அமெரிக்க குடியுரிமையையைத் துறந்ததற்கான கையெழுத்திட்ட பத்திரமொன்றைக் கொடுத்து அவசர காரணங்களுக்காக சிறிலங்கா கடவுச் சீட்டொன்றைத் திரு ராஜபக்ச பெற்றிருக்கிறார் என்று குற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. அப்பத்திரங்களின்படி ஏப்ரல் 17, 2019 முதல் அமெரிக்க குடியுரிமை துறக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.
குடியுரிமை துறப்பிற்கான பத்திரத்தில் சிறீலங்காவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் பிரிவின் முதன்மை அதிகாரியான பிலிப் வான் ஹோர்ண் என்பவர் பத்திரங்கள் உண்மையானவை என அத்தாட்சிப் படுத்தியுள்ளார். அதே வேளை, குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் அறிக்கைகளுக்கும், திணைக்களக் கணனிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கும் நிறைய முரண்பாடுகள் காணப்படுவதாகக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட பத்திரங்கள் கிடைக்கும்வரை நீதிமன்றம் இவ் வழக்கைத் தள்லி வைத்துள்ளது. திரு ராஜபக்ச தனது அடையாளப் பத்திரத்தையும், கடவுச் சீட்டையும் சட்ட ரீதியில் பெற்றாரா என்று எல்.என்.பி. வியாங்கொட மற்றும் எம்.ஏ.எஸ். தேனுவர ஆகியோர் பொலிஸ் மா அதிபருக்கு ஆகஸ்ட் 15 அன்று முறையீடு செய்ததன் காரணமாகவே நீதி மன்றம் இவ் வழக்கை விசாரணை செய்கிறது.