இயக்குனர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சென்னையில் காலாமானார்
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்ரல் 30) அதிகாலை சென்னையில் காலமானார்.
54 வயதுடைய அவரது மரணம் மாரடைப்பின் காரணமாக ஏற்பட்டது எனவும் அதற்கு முன்னர் அவருக்கு கோவிட் தொற்று இருந்தது எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற் பெயருள்ள அவர் ஒரு ஒளிப்பட ஊடகவியலாளராகத் தனது தொழிலை ஆரம்பித்தார். பல புதினப்பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் அவர் ஒளிப்படப்பிடிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார். பின்னர் ஒளிப்பதிவாளர் பி.சிறீராமின் கீழ் உதவியாளராகப் பணிபுரியும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. சில முழுநீளத் திரைப்படங்களோடு, தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரத் தயாரிப்புகள் ஆகியவற்றிலும் பணியாற்றியிருந்தார்.
இருந்தாலும், சுயமாக அவர் ஒளிப்பதிவாளராகப் பணியை ஆரம்பித்தது ‘தேன்மாவின் கொம்பாத்’ (1994) என்ற மலையாளப் படத்தில் தான். சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய திரைப்பட விருதை அப்படம் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. ‘நேர்மை, கற்பனைத் திறமை, நெகிழ்வுத் தன்மை’ ஆகியவற்றுக்காக அவருக்கு அவ்விருதைக் கொடுப்பதாக விருதுத் தேர்வாளர் குறிப்பிட்டிருந்தார். ஒளிப்படக் கருவி அசைவுகள், ஒளிப் பாவனை, கோர்வை, சிறப்பம்சத் தேர்வு, காட்சி அனுபவம் ஆகிய விடயங்களில் அவரது நுணுக்கங்கள் அவரது விருதுத் தேர்வுக்கான காரணங்களாகவிருந்ததாக அப்போது கூறப்பட்டிருந்தது.
இயக்குனர் சங்கரோடு அவர் பணியாற்றிய முதலவன் (2000), சிவாஜி (2007) ஆகிய படங்கள் ஆனந்த்தின் ஒளிப்பதிவுத் திறமையை மேலும் வெளிக்கொணர்ந்திருந்தன.
2005 இல் ஆனந்த் ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக வெளிவந்தார். பின்னர் சூர்யாவை வைத்து ‘அயன்’ என்ற படத்தை இயக்கினார். இது அவருக்கு பாரிய வெற்றியத் தேடிக்கொடுத்தது. தனுஷ், விஜய், விஜே சேதுபதி ஆகியோரை வைத்து முறையே கோ, மாற்றான், கவன் ஆகிய படங்களையும் ஆனந்த் இயக்கியிருந்தார். கோ, கவன் ஆகிய படங்கள் அவரது ஒளிப்பட ஊடகவியலாளர் அனுபவத்தைப் பின்னணியாகக் கொண்டவை.
ஆனந்தின் கடைசிப் படம், சூர்யா, மோஹன்லால் நடித்து 2019 இல் வெளிவந்த ‘காப்பான்’. கரிம விவசாயி (organic farmer) ஒருவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குபவராக சூர்யாவும், இந்திய பிரதமராக மோஹன்லாலும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
எல்லோரோடும், இயல்பாகவும், எளிமையாகவும், இனிமையாகவும் பழகும் கே.வி.ஆனந்தின் இழப்பு திரையுலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.