Sri Lanka

இயக்கச்சியில் இராவணன் வனம்

தாவரவியற் பூங்கா அமைக்கும் இலண்டன் தமிழர்

செய்தி மூலம் (நன்றி) : முகநூல்-கருணாகரன் சிவராசா

இயக்கச்சியில் பிறந்து தற்போது இலண்டனில் வசித்து வரும் பொன் சுதன் இயக்கச்சியில் ‘இராவணன் வனம்’ என்றொரு தாவரவியல் பூங்கா ஒன்றை நிறுவி வருகிறார். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் இப் பூங்கா வடக்கில் அமையும் முதல் தாவரவியல் பூங்காவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையோடிணைந்த பிரதேசத் தாவர இனங்களுடன் பிற இனத் தாவரங்களும் இப் பூங்காவில் குடியேறுமென அறியப்படுகிறது.

” இந்தத் தாவரவியல் பூங்கா வணிக நோக்கை முதன்மையாகக் கொண்டதல்ல. மாணவர்களின் கற்கைக்கு உதவுவதுடன் எமது மக்களின் பார்வைக்கும் அறிதலுக்கும் முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. எதிர்காலத்தில் இது எமது நாட்டின் அமைதிக்கான ஒரு குறியீடாக இருக்கும். அந்த வகையில் இன,மத, மொழி, பிரதேச, சாதி, பால் வேறுபாடுகளற்ற சமத்துவத்தின் அடையாளமாக இது விளங்கும். அதற்கான ஒரு முன் அடையாளமாகவே இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இன, மத, மொழி, பால், பிரதேச வேறுபாடுகளைக் களைந்து அனைத்துத் தரப்பினரும் இணைந்து பங்கேற்கின்றனர். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டும்” என்று பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

பொன் சுதன்

26.08.2023 அன்று தொடக்கி வைக்கப்பட்ட இப் பூங்காவின் முதற் கட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவுறுமெனவும் அதற்கான பராமரிப்பு முறை, சுற்றுச் சூழல் மேம்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்தும் கள ஆய்வுகள் முற்றுப் பெற்ற நிலையில் சில மரங்கள். செடி கொடிகள் நடுகை செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

இயக்கச்சி கடலருகே அமைந்துள்ள கிராமமாக இருந்தாலும் இது மணற் பிரதேசமாகவும் நன்னீர் வசதி உள்ள இடமாகவும் இருப்பதால் இங்கு பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இயக்கச்சி, முள்ளிப்பற்று, முள்ளியான், பச்சிலைப்பள்ளி என இந்தப் பிரதேசம் இயற்கையான காடுகள், பனைமரங்கள், கடற்தாவரங்கள், இதனோடிணைந்த விலங்குகள், பறவைகள் என அமையப்பெற்ற சிறந்த பிரதேசம்.

நடுவே எழில் மிக்க இயற்கையாக அமைந்த நீர்த்தேக்கத்தைக் கொண்டதும் ஒரு பகுதியில் இயற்கையான காடும் அடுத்த பகுதி நடுகை செய்யப்படும் காட்டுத் தொகுதியைக் கொண்டதுமாக இப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்திற்குரிய புள்ளினங்களும் விலங்கினங்களும் இக்காடுகளில் வாழ்கின்றன.

பேராதனையிலுள்ள தாவரவியல் பூங்காவைப் போல இலங்கையின் வடபகுதியில் அமையவுள்ள இந்தத் தாவரவியல் பூங்கா கற்கைக்கு மட்டுமன்றி, எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் சுற்றுலாத்துறைக்கும் பயனாகக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

ஏற்கனவே இயக்கச்சியில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட Pyl என்ற கோட்டையும் (இது யுத்தத்தின்போது அழிந்து விட்டது. ஆயினும் எஞ்சிய சில பகுதிகள் தொல்லியற் திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகிறது) Reecha என்ற தனியார் சுற்றுலாத் தலமும் Nature Park என்ற பறவைகள் சரணாலயமும் (Bird Sanctuary) உள்ளன.