Columns

‘இமாலய பிரகடனம்’: எதிரின் புதிர்

கடந்த சில வாரங்களாக overheated சமூக வலைத்தளங்கள் பொங்கி வழிகின்றன. பெரும்பாலானவை நுனிப்புல் மேய்பவர்களால் எழுதப்படுபவை. இந்த ‘எதிர்’கள் புதிர் தருவனவாக உள்ளன.

‘இமாலயப் பிரகடனத்தை’ விமர்சிப்பவர்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். “தமிழ் மக்களின் பேரழிவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படும்வரை சிங்கள அரசுகளுடன் பேச்சுவார்த்தைக்கு போகமுடியாது. இப்படியிருக்கையில் உலகத்தமிழர் பேரவைக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? ” என விவாதிப்பவர்கள் ஒரு அணி. “‘இமாலயப் பிரகடனம்’ ஒரு வெற்றுக்குடம். அதற்குள் எதுவுமே இல்லை” என்பவர்கள் இன்னுமொரு அணி. உலகத் தமிழர் பேரவை அல்லது அதன் ஒரு அங்கமான கனடியத் தமிழர் பேரவை போன்றவற்றின் மீது கசப்புள்ளவர்கள் சிலர் இந்த இரண்டு அணிகளில் குதிரை ஓடும் மூன்றாவது அணியினர்.

‘இமாலயப் பிரகடனம்’ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. சாத்வீக, ஆயுதப் போராட்டங்கள் தோற்றுப்போன நிலையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தீர்க்க நல்லிணக்க வழியைக் கையாளும், முற்றிலும் வேறுபாடான, அணுகுமுறை ஒன்றை உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு சுரேன் சுரேந்திரன அவர்கள் தென்னிலங்கையிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட தாய்மார் அமைப்பின் தலைவி விசாக தர்மதாச மூலம் பரிந்துரைத்ததன் காரணமாக கருக்கொண்ட இப்பிரகடனத்திற்கு மேற்கு நாடுகள், குறிப்பாக சுவிட்சர்லாந்து, பசளையிட்டதன் விளைவுதான் இந்த ‘பிரகடனம்’.

இப்போது விமர்சனங்கள்: “இப் பிரகடனம் ஒரு வெற்றுக்குடம். இதில் எதுவுமே இல்லை”. பல ‘நிபுணர்கள்’ அடித்துச் சத்தியம் பண்ணுகிறார்கள். அப்படியானால் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். எனவே இதை எதிர்ப்பதற்கு எந்தவித காரணங்களுமில்லை. ஆனாலும் எதிர்க்கிறார்கள். இதிலிருந்து நாம் உய்த்துணரக்கூடியது – இந்த எதிர்ப்பு ‘பிரகடனம்’ மீதானதல்ல. அதைக் கொண்டுவந்தவர்கள் மீது தான்.

“இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?”: தமிழர் உரிமைகளை வென்றெடுக்கவென சர்வதேச அரங்குகளில் போராட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகளில் பெரும்பாலானவை தொண்டர் அமைப்புகள். இதில் பணிபுரிபவர்கள் தமது சொந்தப் பணத்தையும், குடும்ப நேரங்களையும் செலவிட்டு தமிழ் மக்களுக்காக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு வருபவர்கள். இன்று மேற்குலக நாடுகளில் கொழுத்த சம்பளங்களுடன் ‘பணிபுரியும்’ பல அரசியல்வாதிகளை உருவாக்கியவர்களே இத்தொண்டர் அமைப்புக்கள்தான். இவற்றில் அங்கத்தவர்கள் என்று சொற்பமானவர்கள் தான் இருப்பார்கள். இவர்களின் சிறிய வருடாந்த சந்தாவும் அவ்வப்போது புரவலர்களிடமிருந்து கிடைக்கும் பணத்திலிருந்துதான் இதையெல்லாம் ஓட்ட முடிகிறது. ஆனாலும் சர்வதேசங்களில் முந்நிலை அரசு அதிகாரங்களும் தொடர்புகொண்டு எமது சமூகங்களுக்கான தேவைகளை அறிந்து சேவைகளை வழங்குவதற்கு இப்படியான அமைப்புக்களே தொடர்பு சாதனங்கள்.

1986 ஆகஸ்ட் 11 இல் நியூபவுண்ட்லாந்து கடலில் தத்தளித்த 155 தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டபோது மொன்றியால் நகரில் இருந்த ஈழத்தமிழர் ஒன்றியத்திற்குத்தான் முதலில் அழைப்பு வந்தது. அதன் செயலாளராக இருந்த திரு பொன்னுச்சாமியும் வேறு சிலரும், தமது சொந்தப்பணத்தில், உடனடியாக நியூபவுண்ட்லாந்து சென்று இவ்வகதிகளுக்கு உதவிகளைச் செய்திருந்தார்கள். அப்போது ‘ஒன்றியத்தின்’ அங்கத்தவர்களென நூற்றுக்கு உடபட்டவர்களே இருந்தார்கள். அப்போதுகூட “உங்களுக்கு யார் இந்த உரிமையைத் தந்தது” என எவரும் கேட்டிருக்கவில்லை.

2010 ஆகஸ்ட் 10 இல் வான்கூவர் வந்தடைந்த 492 அகதிகளை வரவேற்க முதலில் அங்கு சென்றது கனடிய தமிழர் பேரவை தான். தற்போதைய கனடிய பா.உ. கரி ஆனந்தசங்கரி அப்போது கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தார். அவரோடு திரு டேவிட் பூபாலபிள்ளை போன்றோரும் உடனடியாக அங்கு சென்று சகல உதவிகளையும் செய்தார்கள். இந்த 492 பேரும் அவரவர் உறவுகளுடன் தொடர்புகொள்ளவென ஆளுக்கு $10 பெறுமதியான தொலைபேசி அட்டைகளை பேரவை வழங்கியிருந்தது. இக்கப்பலில் வந்தவர்கள் கப்பலை விட்டு இறங்குவதற்கு முன்னரே “அனைவரும் விடுதலைப் புலி இயக்கப் பயங்கரவாதிகள்” என அப்போதைய கன்சர்வேட்டிவ் அரசு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. அதற்கு ஆதாரமாக சிங்கப்பூரிலிருந்து றோஹான் குணரட்ணவின் சாட்சியத்தை (expert witness) கனடிய அரசு முன்வைத்தது. இதை முறியடிக்க ஒட்டாவாவில் வாழ்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும் பின்னாள் இலங்கை இராணுவ உளவாளியுமாகச் செயற்பட்டு ‘மனம் திருந்தியிருந்த’ ஒருவரைப் பேரவை அழைத்துவந்து குணரட்ணவின் போலித்தன்மையை உடைத்தது. இது நடைபெற்றிருக்காவிட்டால் 492 பேரும் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்து இருந்தது. அப்போதுகூட “இவர்களுக்கு இந்த உரிமையை யார் வழங்கியது” என எவரும் கேட்டிருக்கவில்லை. இதே வேளை அடுத்த கப்பல் புறப்படுவதற்கு முதல் அமைச்சர் ஜேசன் கெனி தாய்லாந்துக்குப் பறந்து சென்று அங்கு, ஐ.நா. அகதிகளாகப் பதிந்திருந்த தமிழர்களை ஊருக்குத் திருப்பி அனுப்பிவிட்டு ரொறோண்டோ வந்து தமிழர்களோடு சல்லாபம் செய்திருந்தார். நிறையத் தமிழர் அவரோடு படம் எடுத்து மகிழ்ந்திருந்தனர்.

“போர்க்குற்றவாளிகளையும், இனப்படுகொலையாளிகளையும், மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்காக நாம் முயற்சிசெய்துவரும் வேளையில் ‘இமாலயப் பிரகடனம்’ போன்ற செயற்பாடுகள் எமது முயற்சிகளை முறியடித்துவிட்டன. போர்க்குற்றவாளிகளுடன் எப்படி நீங்கள் சமரசம் செய்துகொள்ளலாம்?” என்பது இன்னுமொரு விமர்சனம். இந்த ஆதங்கத்தில் ஓரளவு நியாயம் இருக்கிறது. எனினும் இம்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்பதற்கு உலக வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. அது சாத்தியமாகுமெனச் சமாதானம் செய்துகொள்ளினும்கூட அதற்கான காலம் பல தசாப்தங்களையும் எடுக்கலாம். அதற்குள் இலங்கையில் தமிழர் தொகையின் அழிவும், புலம்பெயர்வும் அவர்கள் வாழிடங்களைத் தரிசுகளாக்கிவிடும். எனவே ஒரு இடைநிலைச் செயற்பாடாக எமது மக்கள் தொகையை அதிகரிக்க, குறைந்த பட்சம் குறையாதிருக்கச் செய்ய, உடனடி நடவடிக்கைகள் சில எடுக்கப்படவேண்டும். அதற்கு அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுக்க வேண்டும் அதற்கு ஒரே வழி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தான். பொறுப்புக்கூறல், அது ஒரு உள்ளகப் பொறிமுறையானாலும், அதை ஆரம்பிப்பதும் அவசியம் தான். அதற்கான திட்டம்கூட இப் ‘பிரகடனத்தில்’ இருக்கிறது.

நமது காலத்தில் (1975-2002) கிழக்குத் தீமோரில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான தீர்ப்பை, அந்நாடு சுதந்திரமடைந்து 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இதற்கு அவர்களது பொருளாதார நிலைமையும் புறக்கள அரசியலுமே காரணம். ‘இனப்படுகொலைக்கான’ நீதி நியாயம் கேட்டு அவர்கள் காலத்தை வீணடிக்கவில்லை. அதற்குத் தலையசைக்கக்கூடிய தார்மீக வல்லமை உலகின் அதிகார நாடுகளிடம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 1915 இல் துருக்கியினால் ஆர்மீனியர்கள் மீது நடத்தப்பட்ட (1.5 மில்லியன்) இனப்படுகொலைக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை. பாலஸ்தீனியர் மீது கண்முன்னால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளை ‘இனப்படுகொலை’ எனக்கொள்ள முடியாது எனக் கனடா உட்பட, 134 நாடுகள் வரிந்துகட்டிக்கொண்டு சொல்கின்றன. இவற்றில் கிழக்குத் தீமோரும் ஒன்று என்பது பரிதாபம். சரி, மனிதத்துக்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று ‘றோம் விதிகளை’ அழைத்து குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்தாலும் இக்குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதவரை நீதிமன்றம் அவர்களை விசாரிக்க முடியாது என்கிறது சட்டம். உலகம் இன்னும் கொடியவர்களின் கைகளில்தான் இருகிறது. எனவேதான் நல்லிணக்கம் மூலம் தற்காலிக நிவாரணத்தையாவது எமது மக்களுக்குப் பெற்றுத்தர சிலர் முனைகிறார்கள். இதனால் எவரும் குபேரர்களாக ஆகிவிடப் போவதில்லை. குறு குறுக்கும் குற்ற உணர்வுகளின் உந்துதல். அவ்வளவுதான்.

“சரி, ‘இமாலயப் பிரகடனம்’ நல்ல விடயம் தான். அப்படியெனில் அதை ஏன் இதர அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து அதைச் செய்யவில்லை. ஏன் இரகசியமாகச் செய்யவேண்டும்?”. இது சாதாரணமான ஒருவருக்கு நியாயமாகப்படும் ஒரு கேள்வி. இதற்கும் சிங்கள மக்களின் இந்த அச்சத்தைத் தான் (paranoia) காரணமாகக் கூறவேண்டும். இலங்கையின் வரலாற்றில் டி.எஸ் சேனநாயக்கா முதல் ராஜபக்சக்கள் வரையில், கட்சி பேதமின்றி ஒப்பந்தங்களைச் செய்தவர்களும் அவற்றைக் கிழித்தவர்களும், கண்டி யாத்திரை போனவர்களும் எனப் பலர் தோற்றம் பெற்று வந்திருக்கிறார்கள். 2002 இல் சந்திரிகா ஜனாதிபதியாகவும், ரணில் பிரதமராகவும் இருந்தபோது ரணில் வவுனியாவுக்கு, விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சென்று தீர்வுக்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தார். கையெழுத்து வாங்கச் செல்வது பற்றி அவர் சந்திரிகாவிடம் எதையுமே கூறியிருக்கவில்லை. ஆனால் இதை அறிந்ததும் சந்திரிகா காளியாக மாறியதும் புத்தபிக்குகளைச் சன்னதம் கொள்ள வைத்து இவ்வொப்பந்தம் கிழித்தெறியப்பட்டதும் வரலாறு. ‘இமாலயப் பிரகடனம்’ பகிரங்கமாகச் செய்யப்பட்டிருந்தால் அதன் கதியும் இப்படியாகவே இருந்திருக்கும். இனியும்கூட மஹிந்த ராஜபக்ச, வீரவன்ச, கம்மன்பில போன்றோர் மீளிணைந்து இதையும் கிழித்தெறிய மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. ‘அமைப்புக்களிடம் பேசிப் பறைந்து எதையாவது செய்திருக்கலாம்’ என நம்புபவர்கள் புலம்பெயர் தமிழர் வரலாற்றை ஆழமாக வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

‘இமாலயப் பிரகடனத்தின்’ மீதான விவாதங்கள் பரிசீலிக்கப்படவேண்டியவை. அதிலுள்ள அம்சங்கள் புரியவைக்கப்படும்போது சில ‘நிபுணர்கள்’ கூறுவது போல அதில் ஆபத்தான விடயங்கள் எதுவுமே இல்லை என்பது பொதுமக்களுக்கு விளங்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால் “அரசியல் தீர்வொன்றை நோக்கிய, இலங்கையிலுள்ள பல்லின சமூகங்களுக்கிடையேயான உரையாடல் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பொறிமுறை ஒன்றிற்கான வரைவு” எனக் கூறலாம். ஒரு வகையில் இது ஒரு ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ மட்டுமே. இதனால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் எந்தவித ஒப்பந்தங்களும் முறிக்கப்படமாட்டா. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் எழுதப்படமாட்டா. இதுவரை காலமும் தமிழருக்குச் சாதகமானவை எனக்கருதப்பட்ட ஒப்பந்தங்களை முறித்தவர்கள் எனக் கருதப்படும் புத்த மகாசபையினரையும் உள்ளடக்கும் ஒரு உரையாடல் தளத்தை மட்டுமே இப் ‘பிரகடனம்’ பரிந்துரைக்கிறது.

இப் ‘பிரகடனம்’ வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் 10% கூட இல்லாதிருக்கலாம். இதுவரை உடன்பட்ட மகாசபையினரைச் சிங்கள தேசியவாதிகள் மனம் மாற்றித் திசை திருப்பலாம். ஆனாலும் சர்வதேசங்களின் அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் எனவே படுகிறது.

இலங்கையின் சிங்கள – பெளத்த தீவிரவாதிகளிடம் இருக்கும் ஒரு பொதுப்பண்பு அச்சம் காரணமாக எழும் வெறுப்பு. ஒரு வகையான paranoia driven hate. தென்னிந்தியாவிலிருந்து சைவ, சமண மதங்களினால் துரத்தப்பட்ட புத்த துறவிகள் கொண்டு வந்த இவ்வியாதிக்கான உளவியல் மருத்துவம் இதுவரை நடைபெறவில்லை. சிங்கை ஆரியன் காலத்திலிருந்து பிரபாகரன் காலம் வரை இப்பீதி அவர்களைக் கொண்டு ஆட்டுகிறது. 2009 இற்குப் பின்னர் அது ‘புலம் பெயர்ந்த தமிழராக’ அங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் புலிகளை உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள் என சிங்கள மக்கள் அவர்களது அரசியல்வாதிகளால் நம்பவைக்கப்படுகிறார்கள். அதற்கு வலுச்சேர்க்குமாப்போல் புலத்தில் சொற்போர், கொடிப் போர் என முழங்குகிறார்கள். உலகத்தமிழர் பேரவையின் இந்த முயற்சி அவர்களது தவறான ஊட்டல்களை நிராகரிக்க எடுக்கும் ஒரு எத்தனம் மட்டுமே.

தற்போதுள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களிடம் புதுவித அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. அரகாலய காலத்து பட்டினி அவர்களுக்குப் புதிய யதார்த்தத்தைக் காட்டியிருக்கிறது. இலங்கை பொருளாதார விடயத்தில் தன்னிறைவு பெறாதவரை தெருக்களில் வரிசைகள் மீண்டும் உருவாகும் என்பதை இளைய சமுதாயம் உணர்ந்துவிட்டது. ‘தனிச் சிங்களச்சட்டமே எமது பிரச்சினைகளுக்குக் காரணம் என இளைய சந்ததியைச் சேர்ந்த அமைச்சர் மனுஷா நாணயக்கார பேசுமளவுக்கு நிலைமைகளில் மாற்றம் தெரிகிறது. இதைத் தமிழர்கள் சாதகமாகப் பாவிக்கவேண்டும். பொருளாதாரம் மீளக்கட்டியெழுப்பப்படுமானால் மந்தி திரும்பவும் மரமேறிவிடும். அதற்கு முன்னர் புலம்பெயர் தமிழர் சமூகம் தமது வல்லமையைக் காட்டவேண்டும். “நாட்டைக் கட்டியெழுப்ப நாங்களும் உதவி செய்கிறோம். பதிலுக்கு எங்களுக்கு நியாயமான அதிகாரப்பகிர்வைத் தாருங்கள்” என்ற பேரத்தை முன்வைக்கவேண்டும். இது சாத்தியமாகக்கூடிய ஒரு காரியம். இதையே ‘இமாலயப் பிரகடனம்’ சாதிக்க முயல்கிறது.

சர்வதேசங்கள் தலையிட்டு தமிழருக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான புறக்காரணிகள் தற்போதைக்கு எதுவுமில்லை. சாத்வீகம், ஆயுதம், இந்திய ஆதரவு எதனாலும் தீர்க்கப்படமுடியாத இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க இரு சமூகத்தவர்களாலும் முன்மொழியப்பட்டிருப்பதுதான் இந்த ‘இமாலயப் பிரகடனம்’. இது ஒரு தீர்மானமல்ல மாறாக ஒரு தீர்வுக்கான வரைபடம்; சமாதானத்துக்கான ஒரு வியூகம். மாற்று வழிகள் இங்கு மறுக்கப்படவில்லை.

அதற்காக பொறுப்புக்கூறல் மீதான நடவடிக்கைகளை இதர அமைப்புகள் கைவிடவேண்டியதென்பதில்லை. சர்வதேச தளங்களில் அவர்களது நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும். ஆனால் துர்ப்பாக்கியமாக உலக, கனடிய தமிழர் பேரவைகள் மீது கல்வீசுவதில் தான் இவ்வமைப்புகள் காலத்தை விரயம் செய்கின்றன. தனிப்பட்டவர்கள் சிலரால் மேற்கொள்ளப்படும் கீழ்த்தரமான காரியங்களினால் இவ்வமைப்புகள் மீதும் சாயம் பூசப்படக்கூடிய ஆபத்துக்களும் உண்டு. எதிரிக்கு எதிரி நண்பர்கள் தான். எதிர்ப்புக்கள் இருப்பின், விவாதங்கள் இருப்பின் அவற்றை நாகரிகமாக வெளிப்படுத்துவது எல்லோருக்கும் நல்லது.