Sri Lanka

இமாலயப் பிரகடனம்: இலங்கை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது

டிசம்பர் 19ம் திகதி அனைத்துலக சமாதானத்திற்கான மதங்கள் (Religions for Peace International) என்ற அமைப்பின் இலங்கைக்கிளை கொழும்பில் ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்திருந்தது. பல மதத்தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்த இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பேசியிருந்தார். அதில் அவர் ” இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் இன்னுமொரு இனப்போரை விரும்பவில்லை. ஆனாலும் இனத்துவேசத்தைப் பாவிக்காமலிருக்க அரசியல்வாதிகளால் முடியாது. இலங்கை மக்கள் பொதுவாக இனவாதிகளல்லர் ஆனால் அரசியல்வாதிகளால் அவர்கள் உருவேற்றப்படுகிறார்கள். மாகாண அளவிற்கு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் மக்களின் விருப்பு கடந்த இரண்டு வருடங்களில் 23% த்திலிருந்து 68% த்துக்கு உயர்ந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிந்தார்.

சந்திரிகா குமாரதுங்க

அரசியல் தீர்வொன்றுக்கான சரியான தருணம் இதுவே என தேசிய சமாதானப் பேரவையும் கருதுகிறது. இலங்கையின் 75 ஆவது குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு முன் அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவருவேன் என ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அது கடந்து இப்போது 11 மாதங்களாகிவிட்டது. இருப்பினும் அறிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவைத் தீர்மானங்கள் நம்பைக்கைஅ தருவதாக உள்ளன. ஒன்று, உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான ஆணையம் மற்றது தேசிய ஒற்றிமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக் திறப்பு. இத்தீர்மானங்கள் விரைவில் வர்த்தமானி அறிவிப்புகளாக வெளிவருமென அறியப்படுகிறது.

புகலிடத் தமிழர்களில் சிலரும் இலங்கையிலுள்ள புத்த பிக்குகளில் சிலரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வொன்றுக்கான முன்னெடுப்பாக போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு ஒரு முயற்சியை எடுத்துவருகிறது. சிவில் சமூகத்தின் இந்த முன்னெடுப்பு இனங்களுக்கிடையேயான பிளவைப் போக்க வல்ல இணைப்பு பாலமாக இருக்குமெனவும் இரு தரப்பிடையேயும் புரிதலையும், உரையாடலையும் உருவாக்க வல்ல முதற்படியாக இது இருக்குமெனவும் தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது. இனப் பிரச்சினையை பாரபட்சமின்றி நிலைக்கும் வழியில் தீர்த்து வைப்பதற்காக புகலிடத் தமிழர்களும் புத்த பிக்குகளும் ஒரு வரைபுடன் முன்வந்திருப்பது குறித்து நாம் மகிழ்வுறுகின்றோம். இவ்வரைபில் இடம்பெற்றுள்ள அம்சங்களைஅவர்கள் பாராளுமன்ற அரசியல்வாதிகள், சகல முக்கிய மதத் தலைவர்கள் போன்றோரைச் சந்தித்து அவர்களது சம்மதத்தைப் பெற்றிருந்தனர் என்பதோடு இவ்வம்சங்கள் இனங்களுக்கிடையேயான சமத்துவம் போன்ற உலகளாவிய விழுமியங்களைக் கொண்டிருப்பதனால் அவை இங்குள்ள வெளிநாட்டுப் பிரதானிகள் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருப்பது என்பதும் விருப்பிற்குரியது. இம்முன்னெடுப்பிற்கு சிலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருப்பதும் உண்மை. சுய அரசியல் இலாபங்களுக்காக இதை எதிர்க்காமல் நாட்டின் பொது நன்மைக்காக இவ்வரைபை வலுப்படுத்தும்படி ச்மாதானப் பேரவை அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.

இருப்பினும், போர் முடிவுற்று 15 வருடங்கள் கடந்திருப்பினும் வடக்கு – கிழக்கில் பெருமளவு இராணுவதினரின் பிரசன்னமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அவர்களது நடவடிக்கைகளும் மக்களிடையே குமைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. வழிபாடு மற்றும் விவசாய காரணங்களுக்காக வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்பவர்களால் நிலங்கள் அபகரிக்கப்படுவது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையைப் பாதிப்பதாக உள்ளதென நாம் கருதுகிறோம். அம்மக்கள் நம்பிக்கை வைக்ககூடியதும் அவர்களது காணிகளையும் உயிர் உடமைகளையும் பாதுகாக்கக்கூடியதும் தமது மொழியை இலகுவாகப் பிரயோகிக்கக்கூடிய உரிமைகளைத் தரக்கூடியதுமான அரசாங்கமொன்றே அம்மக்களுக்குத் தேவை. இதைத் தருவதற்காகவே மாகாண அரசுகள் உருவாக்கப்பட்டன. எனவே மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்தி அவர்கள் தாம் விரும்பிய அரசாங்கங்களினால் ஆளப்படுவதற்கான வழிமுறைகளைச் செய்யவேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒரு வருடம் நிறைவேறி அடுத்த வருடம் பிறக்கவிருக்கும் தருணத்தில் அரசாங்கம் இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து வடக்கு-கிழக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன் அம்மக்களும் இந்நாட்டின் சமத்துவமான குடிமக்கள் என உணருவதற்கு வழிசெய்யவேண்டும்.

[தேசிய சமாதான பேரவை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவேண்டும் என்பதை முன்வைத்து உழைக்கிம் ஒரு சுயாதீன, பாரபட்சமற்ற அமைப்பு. சகல சமூகங்களிடையேயும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள், அமைதியும் சமாதானமும் சுதந்திரம், பரிபாலிக்கப்படும் நாடாக இலங்கை இருக்கவேண்டுமென்பதையே இச்சமாதான பேரவை விழைகிறது]