இப்படியும் மனிதர்கள்

வலையில் பிடித்தது | சிவதாசன்

இன்று முகநூலில் கிடைத்த ஒரு விடயம் பற்றி மேலும் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த விடயங்கள் இவை. கடவுள் மனிதரைத் தன்னுருவத்தில் படைத்தார் எனப் பல மதங்களும் நம்புகின்றன. இருந்துமென்ன அதை நிரூபிக்க வேண்டாமா?

இன்று முகநூலில் கிடைத்த படம் இது. இதில் தன் கரங்களை மகிழ்ச்சியுடன் தூக்கிக் காட்டிக்கொண்டு நிற்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர், மேஜர் அப்துல் ராஹிம். அவருக்கு முன்னால் கரங்களைக்கூப்பி நிற்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த காலம் சென்ற ரி.ஜி.ஜோசப்பின் மனைவி ஃப்ரான்சிஸ்காவும் மகள் அலீஷாவும்.

ராஹிம் ஆப்கானிய இராணுவத்தில் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் குழுவில் பணியாற்றியவர். எதிரிகள் மறைத்து வைத்திருக்கும் குண்டுகளை வெடிக்காது அகற்றுவது அவரது பணி. தன் வாழ்நாளில் 2,000 த்தும் மேலான கண்ணி வெடிகளை அகற்றியவர். எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லோரும் வெற்றியீட்டுவதில்லை. 2012 இல் ஒருநாள் கண்ணிவெடியகற்றும்போது குண்டு வெடித்ததில் அவரது முன் கைகள் இரண்டையும் அவர் இழக்க நேரிட்டது. அப்படியிருந்தும் அவர் தன் நாட்டிற்காகத் தொடர்ந்தும் போராடுவதற்கு விரும்பினார்.

மூன்று வருடக் காத்திருப்பிற்குப் பிறகு அவருக்குத் தன் கைகளைத் தானம் செய்யவென்று ஒரு ஜீவன் தயாராகியது. பிறப்பால் ஒரு கிறிஸ்தவரான அவர் இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் ரி.ஜி.ஜோசப். தான் இறந்துபோக நேரிட்டால் தனது உறுப்புக்களைத் தானம் செய்யவேண்டுமென அவர் விரும்பியிருந்தார். 2015 இல் அவரது விருப்பு நிறைவேறியது. 54 வயதுடைய ஜோசப் விபத்தொன்றின்போது படுகாயங்களுக்கு உள்ளானார். மூளைக் கட்டுப்பாட்டை நிரந்தரமாக இழந்துபோனதால், அவரது விருப்பப்படி உறுப்புக்களைத் தானம் செய்ய அவரது குடும்பம் முடிவெடுத்தது. 2012 முதல் காத்துக்கொண்டிருந்த ராஹிமிற்கு ஜோசெப்பின் கைகள் தானமாகக் கிடைத்தன.

கேரளா, கொச்சியில் இருக்கும் அம்றிதா இன்ஸ்டிடியூட் ஒப் மெடிகல் சயன்ஸெஸ் (Amrita Institute of Medical Sciences (AIMS)) என்னும் மருத்துவமனையில் பணி புரிகிறார் டாக்டர் சுப்பிரமணிய ஐயர். உலகத்தில் சிறந்த ப்ளாஸ்டிக் சேர்ஜன்களில் ஒருவரான ஐயர் ஆசியாவிலேயே முதன முதல் கைமாற்றுச் சிகிச்சையைச் செய்தவர் எனற பெருமையைப் பெற்றவர்.

2015 இல் ஜோசப் மரணமடைந்ததும் அவரது கைகளை ரஹீமிற்குக் கொடுக்க ஜோசப்பின் குடும்பம் முன்வந்தது. கொச்சி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் டாக்டர் சுப்பிரமணிய ஐயரின் குழு அறுவைச் சிகிச்சையில் இறங்கியது. மீதியைப் படமே விளக்குகிறது.

ஒரு கிறிஸ்தவர் தனது கரங்களை, ஒரு இந்து மூலமாக, இஸ்லாமியர் ஒருவருக்குத் தானம் செய்தமையைப் பலரும் பரவசத்தோடு பாராட்டினார்கள். அரசியல்வாதிகளைத் தவிர்ந்த, சாதாரண மனிதர்கள் பலர் இன்னும் கடவுளின் முகங்களோடு தான் திரிகிறார்கள்.

படத்தில் ஜோசப்பின் மனைவியும் மகளும் கூப்பிய கரங்களோடு, ஒரு காலத்தில் தங்களை வருடிய கரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில் அவர்கள் மனங்களில் வலியா அல்லது மகிழ்ச்சியா தோன்றியிருக்கும் என்று தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் ராஹிமினது முகம் காட்டும் அளவிடமுடியாத நன்றியுடனான மகிழ்ச்சி துலாம்பரமாகத் தெரிகிறது.

இதை ஜோசப்பும் பார்த்திருந்தால் அவரது முகம் எப்படி மலர்ந்திருக்கும் என்பதற்கு விடையில்லை.

இப்படத்தில் வலது பக்கம் மலர்ந்த முகத்தோடு நிற்பவர்தான் இவ்வறுவைச் சிகிச்சையைச் செய்த டாக்டர் சுப்பிரமணிய ஐயர்.

துரதிர்ஷ்ட வசமாக இம் மலர்ந்த முகங்கள் அனைத்தையும் கலங்க வைக்கும் விடயம் சென்ற வருடம் நடந்தது. ‘எதிரிகளோடு போரிட்டு என் நாட்டைக் காப்பாற்றுவேன்’ என முழக்கமிட்டுக்கொண்டு போர்முனைக்கு மீண்ட மேஜர் ரஹீம் பெப்ரவரி 19 அன்று எதிரிகள் வைத்த குண்டுக்குப் பலியானார்.

கீழே காணப்படும் காணொளி டாக்டர் சுப்பிரமணிய ஐயரின் மற்றுமொரு வெற்றிகரமான கை மாற்றுச் சிகிச்சைக்கான ஆதாரம். 2017 இல் இச் சிகிச்சை நடைபெற்றது.