Spread the love

ஜூலை 31, 2020; கோவிட்-19 தொற்றியவருக்கு அருகில் நீங்கள் போயிருக்கிறீர்களா என்பதை அறிவிக்கும் ஸ்மார்ட் ஃபோன் அப்ளிகேசன் (app) ஒன்றை கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் இன்று முதல் பாவனைக்கு விடுகிறது.

இலவசமாகத் தரவிறக்கக்கூடிய, “the Covid Alert Contact Notification App” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த app, கோவிட்-19 நோய் தொற்றியவர் என உறுதிப்படுத்தப்பட்டவர் ஒருவருக்கு அருகில் போயிருந்து, அதே வேளை இந்த app பைத் தரவிறக்கிய ஃபோனை அவர் அந்த நேரத்தில் கைவசம் வைத்திருந்தால் அந்த ஃபோன் மூலம் அவருக்கு எச்சரிக்கை வழங்கப்படும். இரண்டு வாரங்களுக்கு முதல் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் அதை இந்த app அறிவிக்கும்.

Bluetooth தொழில்நுட்பம் மூலம் உங்கள் ஃபோன் நோய் தொற்றியவரின் ஃபோனோடு இரகசியமாகத் தொடர்புகொண்டு (அருகில் சென்றால் தான் இது வேலை செய்யும்) அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், உடனே உங்களுக்கு எச்சரிக்கைச் செய்தியைத் தரும்.

நோய் தொற்றியவர் பொதுச் சுகாதார சேவையில் சிகிச்சை பெற்றிருந்தாலோ அல்லது அவர்களால் பரிசோதிக்கப்பட்டிருந்தாலோ அவருக்கு பொதுச் சுகாதாரத் திணைக்களத்தால் ஒரு தரப் பாவனைகென ஒரு app key இலக்கம் ஒன்று வழங்கப்படும். அவர் அதைத் தனது ஃபோனில் பதிவிறக்கி வைத்திருப்பார். உங்கள் ஃபோனில் கோவிட் அலேர்ட் (Covid Alert app) தரவிறக்கப்பட்டிருந்தால் அது உடனே நோய் தொற்றியவரின் ஃபோனை இனம் கண்டு, உங்களுக்கு மட்டும் எச்சரிக்கையைத் தரும்.

இந்த app பைத் தரவிறக்கம் செய்வதில் பலர் தயக்கம் காட்டுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அது உங்கள் ஃபோனிலுள்ள பிரத்தியேக தகவல்களைத் திருடிவிடும் என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சில உத்தரவாதங்களைத் தருகின்றன.

இது ஒரு “அறிவித்தல் தரும் app” மட்டுமே, நோய் தொற்றியவருக்கு அருகே சென்றவர்கள் யார் என்பதைத் தேடும் app அல்ல என்பதை அரசாங்கம் வலியூருத்துகிறது. அதே வேளை இது ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட நடவடிக்கையுமல்ல, விருப்பமில்லாதோர் தரவிறக்கத் தேவையில்லை.



உங்களது பிரத்தியேக தகவல்கள் பற்றிய எந்த விடயங்களையும் இந்த app உங்கள் ஃபோனிலிருந்து திருடவோ அல்லது கிடைத்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவோ மாட்டாது என்ற உத்தரவாதத்தையும் அது தரவிறக்கத்தின்போது கூறிவிடுகிறது.

உதாரணமாக நீங்கள் எந்த இடத்தில் நின்றீர்கள் என்ற GPS இடக் குறிப்பையோ, உங்களது பெயர், விலாசம், ஃபோனிலுள்ள மற்றயோர் பற்றிய தகவல்கள், உங்கள் சுகாதாரம் பற்றிய விடயங்கள், நீங்கள் அருகில் சென்ற நோய் தொற்றியவரின் சுகாதாரம் பற்றிய விடயங்கள் போன்றவற்றை அது எவரிடமும் பகிர்ந்து கொள்ளாது.

Related:  கோவிட்-19 | குணமடைந்தவர்களைத் தொடரும் வியாதிகள்

கனடாவின் மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட ஒரு தேசிய app ஆனாலும், தற்போது இது ஒன்ராறியோ வாசிகளுக்கு மட்டுமே தரவிறக்கக் கிடைக்கிறது.

இந்த app உங்கள் ஃபோனில் இருந்தாலும், அது நோய் தொற்றியவரை இனம் கண்டு உங்களுக்கு அறிவிக்க சில நிபந்தனைகளை இடுகிறது.

  1. உங்கள் ஃபோனில் Covid Alert app தரவிறக்கப்பட்டிருக்க வேண்டும்.
  2. நீங்கள் நோய் தொற்றியவருக்குப் பக்கத்தில் குறைந்தது 15 நிமிடங்களாவது இருந்திருக்க வேண்டும்.
  3. உங்கள் ஃபோனில் Bluetooth செயற்பாட்டிலிருக்க வேண்டும்.
  4. நோய் தொற்றியவரின் ஃபோனில் பொதுச் சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட app key பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
  5. நோய் தொற்றியவருக்கும் உங்களுக்குமிடையில் தடைச் சுவர்கள், கண்ணாடிகள், பிளாஸ்டிக் சுவர்கள், முக மூடிகள், உடற்கவசங்கள் இருந்திருக்கக்கூடாது.
  6. மாடிகளில் நோய் தொற்றியவர் மேல் மாடியிலும், நீங்கள் நேரே கீழேயுள்ள மாடியிலும் இருந்தாலும் (Bluetooth தொடர்பை ஏற்படுத்தினால்) அது தவறான எச்சரிக்கைகளைத் தரலாம்.
  7. இரண்டு பேருக்குமிடையிலான தூரம் குறைந்தது 2 மீட்டர்களுக்குள் இருக்க வேண்டும்.
  8. Android ஃபோன்களைப் பாவிப்பவர்கள் தமது ஃபோன்களில் location settings செயற்பாட்டிலிருக்கவேண்டும்.
  9. Apple ஃபோன்களில் iOS 13.5 அல்லது அதற்குப் பிந்திய செயலி (Operating System) தொழிற்பாட்டில் இருக்கவேண்டும்.
  10. Apple ஃபோன்களில் iOS 13.5 அல்லது அதற்குப் பிந்திய செயலி (Operating System) தொழிற்பாட்டில் இருக்கவேண்டும்.


சில மாகாணங்கள் தங்களது app ஐத் தாமே உருவாக்கிப் பயன்படுத்துகின்றன. சில பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் Covid Alert app மத்திய அரசினால் உருவாக்கப்பட்டது. விரைவில் ஏனைய மாகாண அரசுகளுடன் தொடர்புகொண்டு எல்லா மாகாணங்களையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Android ஃபோன்களைப் பாவிப்பவர்கள் தமது ஃபோன்களில் location settings செயற்பாட்டிலிருக்கவேண்டும் எனவும் கூறப்படுகிறது. Apple ஃபோன்களில் iOS 13.5 அல்லது அதற்குப் பிந்திய செயலி (Operating System) தொழிற்பாட்டில் இருக்கவேண்டும். எனவே எல்லா iPhone களிலும் இது வேலை செய்யுமென்பதில்லை. குறிப்பாக iPhone 5, iPhone 6 ஆகியவற்றில் இந்த app பைத் தரவிறக்க முடியாது.

கனடிய தனியுரிமைகள் ஆணையாளர் (Privacy Commissioner), கனடிய பிரதமர் ஆகியோர் இந்த app பை ஏற்கெனவே தரவிறக்கிவிட்டார்கள். இதனால் ஒருவரின் தனியுரிமைகளுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என தனியுரிமைகள் ஆணையாளர் உத்தரவாதம் வழஙகியிருக்கிறார். ஒன்ராறியோ தனியுரிமைகள் ஆணையாளர் பற்றீஷியா கொசெயிம் இதற்கு உடன்படுகிறார்.

உலகம் பூராவும் இது வரை 40 வரையிலான நாடுகள் இப்படியான app களைப் பாவிப்பதன் மூலம் நோய்த் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

Print Friendly, PDF & Email