இன்று மாவீரர் நாள்

சக மனிதத்தைக் காப்பாற்றவெனத் தம்முயிரை அர்ப்பணித்த மானிடரை நினைவுகூர்வதும், போற்றி வணங்குவதும், கொண்டாடுவதும் உலக வழக்கம் மட்டுமல்லாது மனித குலத்தின் உயரிய பண்பாகவும் பார்க்கப்படுவது.

ஈழத்தில் தமது மக்கள் தாம் பிறந்து வளர்ந்த பூமியிலேயே அடக்கி ஒடுக்கப்பட்டு இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதற்கு எதிராகக் கொதித்தெழுந்து போராட்டத்தில் விருப்புடனோ, வெறுப்புடனோ இறங்கிக் களத்தில் உயிர்நீத்த அனைத்து மனிதர்களையும் தமிழுலகம் இன்று நினைவுகூர்கின்றது.

தமது கல்வி, செல்வம், கனவுகள் அனைத்தையும் காணிக்கையாக்கி அவர்கள் தமிழ்த் தேசமொன்றைப் பெற்றுத்தராமல் இருந்திருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று பெற்றிருக்கும் சுதந்திரம், அதே கல்வி, செல்வம், கனவுகள் அனைத்தும், ஒரு வகையில், அவர்களால் பெற்றுத் தரப்பட்டதே. ஈழத்தில் தான் அவர்களுக்கு ஒரு தீபமேற்றும் சுதந்திரம் கூடக் கொடுக்கப்படவில்லை, அவர்களால் விடுதலை செய்யப்பட்ட புலம்பெயர் சமூகங்களுக்கு அதற்கு மேலான சுதந்திரம் இருக்கிறது. இச் சுதந்திரத்தை எமக்குப் பெற்றுத் தந்தது அவர்களது தியாகம் என்ற வகையில் அவர்களைப் போற்றுதல், வணங்குதல் குறைந்தது நினைவுகூர்தல், எமது கடமை.

இந்த மாவீரர்களது உயிர்கள் வீணாக்கப்படவில்லை என்பதை நிரூப்பிப்பது வாழும் எங்களது பொறுப்பு. அந்த சத்தியத்துக்கான இந்த நாளில் ‘மறுமொழியும்’ அவர்களை நினைவுகூர்கிறது.