இன்று தந்தையர் தினம் | புரியப்படாத தந்தையர்கள்

தலையங்கம்

சில வருடங்களுக்கு முன்னர் சி.பி.சி வானொலியில் கேட்ட் ஒரு நிகழ்ச்சி – அல்லது அதன் சாராம்சம்.

ஒரு இளம் மாது கதை சொல்கிறார்.

“நானும் எனது சகோதரியும் குமரிகளாக இருக்கும்போது எனது அப்பா பெரும் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி வெளியூர்ப் பயணம். குடும்பத்தை அம்மாவே கவனித்து வந்தார். அப்பா அப்பப்போ ஊருக்கு வரும்போது அம்மா மிகவும் வாஞ்சயோடு அவரைக் கவனிப்பார். அவர்களுக்குள் இருந்த காதல் அளவற்றது.

வீட்டில் இருக்கும்போது அப்பா எங்களுடன் அருகில் இருந்து மகிழ்வாக உரையாடுவதில்லை. உணமையில் அவரை நாங்கள் அறிந்துகொண்டதாகக் கூற முடியாது. ஒரு அன்னியர் போலவே அவரோடு நாம் பழகுவோம்.

அப்பாவின் நடத்தை பற்றி அம்மாவுடன் நாங்கள் பல தடவைகள் விவாதித்துள்ளோம். அவரை விவாகரத்துச் செய்துவிட்டு இன்னுமொரு மனதுக்கினியவரை மணம் செய்துகொள்ளும்படி நாம் அம்மாவைப் பல தடவைகள் வற்புறுத்தியுள்ளோம். அம்மா ஒரு போதும் அதற்கு இணங்கவில்லை. ஒரு போதும் அவர், அப்பாவை விட்டுக் கொடுத்ததில்லை. அவர் மிகவும் நல்லவர் என்பதே பதிலாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன் அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டது. ஆற்ற முடியாத அளவுக்குப் பரவி விட்டது. எங்கள் இருவருக்கும் உலகமே முடிவுக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு. அம்மா அதிகம் அலட்டிக்கொண்டதாக இல்லை. “கவலைப் படவேண்டாம் அப்பா உங்களை நல்லபடியாகக் கவனிப்பார். அவர் மிகவும் நல்ல மனிதர்” என அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டார். அப்பாவும் வேலையை விட்டு அம்மாவுடன் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்.

அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அப்பா வெளியில் எங்கும் போவதில்லை. சமையல் முதல், துணி துவைப்பது வரை, எப்படி எங்கள் நாளாந்த அலுவல்களை அம்மா பொறுமையோடு செய்து வந்தாரோ அதே போன்று அப்பாவும் செய்தார். அம்மாவின் பாசமும் பராமரிப்பும் அவரிடமும் இருந்தன. அம்மாவின் பிரகாசத்தில் அவரது ஒளி கிரகணமிடப்பட்டிருந்ததை நாம் உணர்ந்திருக்கவில்லை.

“”அப்பா மிகவும் நல்லவர்” என அம்மா சொல்லிவந்தது காரணத்தோடு தான். எங்களுக்கு முன்னர் அப்பாவை அவர் சந்தித்தவர், பழகியவர், மணம் முடித்தவர், வாழ்ந்தவர். எங்களது குறுகிய கால வாழ்வுக்குள் அவரை நாங்கள் அளந்து பார்த்து முடிவுகளை எடுத்துக்கொண்டோம். அது தவறென்று இப்போது தெரிகிறது. நாங்கள் அம்மா மீது அளவற்ற பாசத்தைச் செலுத்தவேண்டும் என்பதற்காக அப்பா அப்படி நடந்துகொண்டாரா? தெரியாது. எங்களால் அப்பாவை இன்னுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மா சொன்னதை விடவும் நல்லவராக இருக்கலாமோ? எல்லா அப்பாக்களும் ஒரே அச்சில் வார்க்கப்படுவதில்லை.”

தந்தையர் தின வாழ்த்துக்கள்!