OpinionSatire | கடி-காரம்மாயமான்

இன்று சீன புதுவருடம்: சின்னியன் ஹவோ! சுப நவ வாசராக்! புத்தாண்டு வாழ்த்துக்கள்! Happy New Year!

மாயமான்

இன்று சீன புது வருடம். சின்னியன் ஹவோ! சுப நவ வாசராக்! புத்தாண்டு வாழ்த்துக்கள்! Happy New Year!. விரைவில் சீனக் குடிமக்களாகப் போகும் அனைவருக்கும் முற்கூட்டிய வாழ்த்துக்கள்!

கொழும்பு, குன்மிங் (சீனா), கோலாலம்பூர் (மலேசியா) ஆகிய நகரங்களில் ஏக காலத்தில் ஒளிரவிடப்பட்ட சீன ஒளிப்பதாகை

இன்று, பெப்ரவரி 1, உலகம் முழுதும் வாழும் சீனருக்கு சந்திர புத்தாண்டு. சீனரின் கலாச்சாரத்தின்படி, புலி ராசியில் பிறக்கும் இவ்வருடம் அவர்களுக்கு மிகுந்த நன்மைகளைப் பயக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வீரத்துக்கும், அறிவுக்கும், பலத்துக்கும் சின்னமாக புலியை சீனர் நேசிக்கிறார்கள். இலங்கை விடயத்திலும் இந்த வருடம் அவர்கள் சிங்கத்தை விட்டுப் புலிகளை நேசிக்கும் வகையில் சில அதிசயங்கள் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நிறைவேறியிருந்தன. சில தமிழர்களும் சீனாவின் இந்த நகர்வைச் சிக்கெனப் பிடிக்க வேண்டுமென அறிக்கை விட்டிருந்தார்கள். அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் போகும் போல் இருக்கிறது.

不错!, නරක නැහැ!, பரவாயில்லை! Not bad!

சீனா இலங்கையைத் தன் சாம்ராஜ்யத்துக்குள் இணைத்து பல வருடங்களாகிவிட்டது. ஆனாலும் பெயர் மாற்றத்துக்குத் தான் கொஞ்சம் இழுபட்டுவிட்டது. இந்த வருடம் அதுவும் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் வானில் தெரியவாரம்பித்துள்ளன. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியடநாம் என்று இப்போது இலங்கையையும் தமது மக்கள் வாழும் நிலங்களில் ஒன்றாக சீன அரசு தன்னிச்சையாக எடுத்துக்கொண்டதை இலங்கை அரசும் பாராட்டியிருப்பது இந்த அறிகுறிகளில் ஒன்று.

சீன புதுவருடக் கொண்டாட்டங்களை முடுக்கிவைத்த சீன அரசு இலங்கையைத் தனது ஒரு அங்கமாக மறைமுகமாகப் பிரகடனப்படுத்தியதுடன் இலங்கையின் தூதுவர் உட்பட அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துக்களோடு காணொளியொன்றையும் உலகச் சீனர்களுக்காக வெளியிட்டிருக்கிறது.

குன்மிங், சீனா, கொழும்பு, இலங்கை, கோலா லம்பூர், மலேசியா ஆகிய நகரங்களில் விசேட வாண வேடிக்கைகளுடன் புதுவருடக் கொண்டாட்டங்களை ஏக காலத்தில் சீனா ஆரம்பித்து வைத்திருக்கிறது. இலங்கையிலுள்ள சீன பிரதேசங்களான அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுக நகரங்களில் மட்டும் 30,000 த்தும் மேலான சீனர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள் தாம் வாழும் இடங்களையெல்லாம் ‘யாழ்ப்பாணம்’ என நினைப்பதைப்போல இலங்கையில் சீனர்களும் நினைப்பதில் தப்பில்லை.

புலி வருடம்

இவ்வருடம் இலங்கையிலுள்ள அனைவருக்கும் நன்மையைப் பயக்கவேண்டுமென எல்லாம் வல்ல சீன வல்லரசரைக் கேட்டுக்கொண்டு, சின்லங்காவில் வாழும் அத்தனை சீனர்களுக்கும், அவர்களை நம்பி வாழும் கடலட்டைத் தொழிலாளர்கள், அம்பாந்தோட்டைத் துறைமுகத் தொழிலாளர்கள், துறைமுக நகரக் குடிமக்கள், தொழிலாளர்கள் ஆகியவர்களுக்காக இச் சீன புதுவருடம் பற்றிய சில do’s and dont’s:

  • இவ்வருடத்தின் முதல் நாளில் விளக்குமாறுகளும் (தும்புத்தடிகள்), கத்தரிக்கோல்களும் கப்பேர்ட்டுகளில் (cupboards ) வைத்திருக்கக் கூடாது. இவற்றை வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டங்கள் அவை துடைத்தோ அல்லது வெட்டியோ எறியப்பட்டுவிடும். எனவே இன்று அவற்றை நீங்கள் கண்ணுக்குப் படும்படியான இடங்களில் வைக்கக்கூடாது.
  • புதுவருடம் பிறந்து சில நாட்களுக்கு நீங்கள் தலைமுடியை வெட்டவோ அல்லது கழுவவோ கூடாது. இதுவும் உங்கள் நல்லதிர்ஷ்டத்தைக் கழுவியோ வெட்டியோ கொண்டுபோய்விடும்.
  • புத்தாண்டின் முதல் நாளில் வீட்டைக் கூட்டித் துப்புரவாக்க வேண்டாம் (இல்லத்தரசிகள் / அரசர்கள் அவசரப்பட்டுச் சந்தோசப்படவேண்டாம்!). இரவானதும் அதைச் செய்யலாம்.
  • இன்று லாண்டரி செய்வதைத் தவிர்க்கவும். கல்லில் துவைப்பவர்களும் இதைத் தவிர்க்கவும்.
  • புதுவருடப் பரிசுகளைக் கொடுக்க விரும்புபவர்கள் / வசதியானவர்கள் கறுப்பு, வெள்ளை நிறஙகளைத் தவிர்க்கவும். அத்தோடு, மணிக்கூடுகள், கைக்கடிகாரங்கள், சப்பாத்துகள் ஆகியவற்றைப் பரிசளிப்பதைத் தவிர்க்கவும். கடிகாரங்கள் “நேரங்கள் கடந்துவிடுவதற்கும் (அப சகுனம்), சப்பாத்துகள் உறவுகள் முறிவதற்கும் அடையாளங்கள்.
  • ஒற்றை இலக்கஙகளில் பரிசுகளைக் கொடுக்க வேண்டாம். (தமிழர் கலச்சாரம் இதற்கு எதிர்). பரிசுகள் எப்போதும் இரட்டையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு மேர்செடீஸுக்குப் பதிலாக இரண்டைக் கொடுக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பவர்கள் இரட்டை இலக்கத்தில் கொடுத்தால் பலன்கள் இரட்டிப்பாகும். கடலட்டைத் தொழிலாளர் இரண்டு சதஙகளைக் கொடுக்கலாம்.
  • வெள்ளை, கறுப்பு, கடும் நீலம் ஆகிய நிறங்களில் ஆடைகளை அணிய வேண்டாம். சிவப்பு, தோடம்பழம் (பச்சை அல்ல ஆரஞ்சு நிறம்), மஞ்சள் நிறம் ஆகிய நிறஙகளில் ஆடைகளை அணிவது அதிர்ஷடமானாது. (தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கு இந்த வருடம் அதிர்ஷடமாகவிருக்கச் சாத்தியமுண்டு)

சின்னியன் ஹவோ! சுப நவ வாசராக்! புத்தாண்டு வாழ்த்துக்கள்! Happy New Year!