இன்று கறுப்பு ஜூலை
நினைவுகளை மீட்டும் ஒரு மீள் பதிவு
வரலாற்றுப் பதிவு
இலங்கையில் இனவழிப்பு முயற்சிகள் என வரையறைப்படுத்தக்கூடிய சம்பவங்களில் ஒன்றாக 1983 கலவரத்தையும் பார்க்கலாம்.
சுருக்கம்
- சம்பவம்: கறுப்பு ஜூலை
- நோக்கம்: இனவழிப்பு
- காலம்: 24 ஜூலை – 30 ஜூலை, 1983
- இடம்: தென்னிலங்கை, குறிப்பாக கொழும்பு, புறநகர்ப் பகுதிகள்
- பாதிக்கப்பட்டோர்: பெரும்பாலும் தமிழர்
- பாதிப்பு முறைகள்: எரிப்பு, தலை துண்டிப்பு, சூடு, வன் புணர்வு, சூறை
- ஆயுதஙகள்: துப்பாக்கிகள், கோடரிகள், வெடி பொருட்கள், வாள், கத்திகள்
- இறப்புகள்: 400 – 3000
- காயம்: 25,000+
- வீடிழப்பு: 150,000
- அழிப்பு: 8,000 வீடுகள், 5,000 கடைகள்
- பொருளாதார இழப்பு: $300 மில்லியன்
- நாட்டை விட்டு ஓடியோர்: 1 மில்லியன்+
- தமிழரிடையே பல ஆயுத இயக்கங்கள் தோற்றம்
விரிவு
கொழும்பிலும், புறநகர்ப் பகுதிகளிலும், தென்னிலங்கையில் ஆங்காங்கே தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களிலும் சிங்களக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களைப் பொதுவாக ‘கறுப்பு ஜூலை’ என அழைப்பர்.
தொடக்கம்
ஜூலை 23, 1983 அன்று யாழ்ப்பாணத்தில் 13 சிங்கள இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.
இதன் எதிர் விளைவாகவும், தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஊக்குவிப்பு காரணமாகவும், சிங்களக் குழுக்களினால் தமிழர்களுக்கு எதிராக கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறை, படிப்படியாக நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களாக நடைபெற்ற இவ்வன்முறைகளின்போது தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 400 முதல் 3,000 வரை கொல்லப்பட்டும், 150,000 பேர் வீடுகளை இழந்தும் போயினர். தமிழர்களின் பொருளாதார இழப்பு, ஏறத்தாழ, $300 மில்லியன்கள் ஆகும். 150,000 க்கு மேலான தென்னிலங்கைத் தமிழர்கள் உள்ளக இடப்பெயர்வையும், 1 மில்லியனுக்கு மேலான தமிழர்கள் பிற நாடுகளில் அரசியல் தஞ்சத்தையும் மேற்கொண்டனர். பல இளைஞர்கள் ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இணைந்துகொண்டனர். இலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையேயான போர் முகிழ்த்தது. பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர்.
கறுப்பு ஜூலை (சம்பவக் கோர்வை)
திருநெல்வேலிச் சம்பவம்
சனிக்கிழமை, ஜூலை 23, இரவு 11:30 மணி: ஊர்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 15 பேர் கொண்ட இராணுவ வாகனமொன்று (ஜீப்) யாழ். திருநெல்வேலிச் சந்தியில் வைத்து விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகிறது. இரண்டு இராணுவத்தினர் காயமடைகிறார்கள். பின்னால் வந்த வண்டியிலிருந்த இராணுவத்தினர் அவர்களைக் காப்பாற்றப்போக, மறைந்திருந்த விடுதலைப் புலிகள் கைக்குண்டுகள், தானியங்கித் துப்பாக்கிகள் மூலம், அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். அப்போது ஒரு அதிகாரியுட்பட 13 இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். காயப்பட்டவர்களில் மேலும் இருவர் இறக்கின்றனர். விடுதலைப் புலிகள் தரப்பிலும் சிலர் கொல்லப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் இத் தாக்குதலைத் திட்டமிட்டு நிறைவேற்றியதாக, தளபதிகளில் ஒருவராகிய கிட்டு பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சார்ள்ஸ் அந்தனியின் கொலைக்கும், அரச படைகளினால் தமிழ்ப் பாடசாலைச் சிறுமிகள் பாலியல் வன்முறை செய்யப்பட்டமைக்காகவுமான பழிவாங்கலாக விடுதலைப் புலிகளின் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 24, 1983 ஞாயிறு
வெவ்வேறு இடங்களில் மேலும் பல பிரச்ச்சினைகளை உருவாக்கலாம் என அஞ்சி, கொல்லப்பட்ட இராணுவத்தினரின் இறுதிக் கிரியைகளை யாழ்ப்பாணத்தில் வைக்கக்கூடாதெனவும், அதற்குப் பதிலாக, முழு இராணுவ மரியாதைகளுடன், கொழும்பு, கனத்தை மயானத்தில் செய்வதென தளபதி திஸ்ஸ வீரதுங்க உட்பட, இராணுவம் முடிவெடுக்கிறது. ஆனால் கலவரம் ஏற்படலாமென்ற அச்சத்தில், கொழும்பில் மரணக் கிரியைகளைச் செய்ய பிரதமர் ரணசிங்க பிரேமதாச மறுத்து விடுகிறார். அவரது கட்டளையை மீறி, ஜனாதிபதி ஜெயவர்த்தன கொழும்பில் அவற்றைச் செய்வதற்கு அனுமதியளிக்கிறார். ஜூலை 24, மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த இச் சடங்குகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு மந்திரிசபையும் கலந்துகொள்வதாக முடிவெடுக்கப்படுகிறது. இறந்த இராணுவத்தினரின் உடல்களை அவரவர் குடும்பங்களிடம் கையளித்து பிரத்தியேக மரணச் சடங்குகளைச் செய்ய அனுமதிப்பதுவே வழக்கமெனினும், இது வழக்கத்தை மீறிய ஒரு செயலாகவே இருந்தது.
மரணச் சடங்குகளுக்கான தயாரிப்புகள் நடந்தன. கலவரம் ஏற்பட்டால் அதை அடக்குவதற்கு, பொரளை பொலிஸ் நிலையத்தில் பொலிசார் தயார் நிலையில் வைக்கப்பட்டார்கள். ஆனால் 5 மணி ஆகியும், இராணுவத்தினரின் உடல்கள் கனத்தவுக்குக் கொண்டுவரப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பங்கள், தாம் பிரத்தியேகமாகச் சடங்குகளைச் செய்வோமென்று கூறி உடல்களைக் கையளிக்குமாறு கேட்டிருந்தார்கள். என்ன காரணங்களுக்காவோ, உடல்கள் இன்னும் பலாலி இராணுவ முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தன.
மாலை 6 மணி: உடல்கள் பலாலி விமானப்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டன. இது நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கனத்த மயானத்தில் தாமதம் காரணமாக முறுகல்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவம் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த 3,000 பேர் வந்தனமுல்ல சேரியிலிருந்து வந்து கனத்த மயானத்தில் கூடத் தொடங்கினர். பொய்யான வதந்திகளால் அது இன்னும் பூதாகரமாக வளர்ந்தது.
மாலை 7:20 மணி:
இராணுவத்தினரின் உடல்கள் அவ்ரோ விமானம் மூலம் ரத்மலான விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன. செய்தி கசியத் தொடங்கியதும் கனத்த மயானத்தில் கூட்டம் பெருகத் தொடங்கியது. சுமார் 8000 பேருக்கு மேல் அங்கு கூடியிருந்தார்கள். உடல்களைக் கனத்த மயானத்தில் புதைக்காது, அவரவர் குடும்பங்களிடம் கையளிக்கும்படி கூட்டத்தினர் சத்தமிடத் தொடங்கினர். பொலிசாருக்கும் கூட்டத்தினருக்குமிடையில் சண்டை மூண்டது. கலகப் பிரிவு அழைக்கப்பட்டது. மக்களின் மீது கண்ணீர்ப்புகை, குண்டாந்தடிப் பிரயோகங்கள் செய்யப்பட்டன. நிலைமை கட்டு மீறிப் போனதால், கலகத்தை அடக்க இராணுவம் அழைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, இராணுவ மரியாதைகளை நிறுத்திவிட்டு, உடல்களைக் குடும்பங்களிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிடுகிறார்.
மாலை 8:30 மணி: இறந்த இராணுவத்தினரின் உடல்களைத் தாங்கிய வாகனங்கள் ரத்மலான விமான நிலையத்தைவிட்டுக் கனத்தையை நோக்கிப் புறப்படுகின்றன. ஜனாதிபதியின் மனமாற்றத்தால் வாகனங்கள் திசை மாற்றப்பட்டு, இராணுவ தலைமையகத்துக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு உடல்களைக் குடும்பங்களிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இரவு 10:00 மணி: கனத்த மயானத்தில் நின்ற கூட்டத்துக்கு ஜனாதிபதியின் மனமாற்றமும் தலைமையகத்தில் உடல்கள் கையளிக்கப்பட்ம் என்ற விபரமும் கூறப்படுகிறது. கூட்டம் அமைதியாகக் கலைந்து போகிறது
கலவரத்தின் ஆரம்பம்
கலைந்து போன கூட்டத்தின் ஒரு பகுதி பொரளையின் டி.எஸ். சேனநாயக்கா மாவத்த வீதியால் போகும்போது அங்கிருந்த தமிழர்களின் வியாபார நிலையங்களை உடைக்க ஆரம்பிக்கிறது. முதலாவது கடை தமிழருக்குச் சொந்தமான ‘நாகலிங்கம் ஸ்டோர்ஸ்’.
கூட்டம் இப்போது 10,000க்கு மேல் அதிகரித்துவிட்டது. தமிழருக்குச் சொந்தமானதென்று அடையாளம் காணப்பட்ட அனைத்துக் கடைகளும் உடைக்கப்பட்டு பொருட்களும் சூறையாடப்படுகின்றன. பொரளை தொடர்மாடிக் கட்டிடம், தமிழ் யூனியன் கிரிக்கட் விளையாட்டுக் கிளப் ஆகியனவும் தாக்குதலுக்குள்ளாகின்றன. தொடர்ந்து, அப்பகுதியில் தமிழர் வாழ்ந்த வீடுகள் மீது அவர்களது கவனம் திரும்புகிறது. கலவரக்காரர்கள் மீது பொலிஸ் கண்ணீர்ப்புகையைப் பிரயோகிக்கிறது. அதற்கும் அடங்காமையால் துப்பாக்கிகள் மூலம் வானத்தை நோக்கிச் சுட்டு அச்சமூட்டப்படுகிறது. இதன் பிறகு கூட்டம் கலைகிறது.
இப்போது கூட்டம் தெமட்டகொட, மரதான, நரஹேன்பிட்டிய, திம்பிரிகசாய ஆகிய இடங்களை நோக்கிச் செல்லும் வழியில் தமிழர்களது உடமைகளைத் தீயிட்டுக் கொழுத்துகிறது. இப்போது கூட்டத்தோடு காடையர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.
திங்கள், ஜூலை 25 காலை 9:30: ஜனாதிபதி ஜயவர்த்தனா, தனது மாளிகையில் பாதுகாப்புச் சபையைக் கூட்டுகிறார். 100 யார்களுக்கு அப்பால், பிறிஸ்டல் பில்டிங் மற்றும் தமிழருக்குச் சொந்தமான ‘அம்பாள் கபே’யும் தீப்பற்றி எரிகின்றன. அண்மையிலுள்ள யோர்க் வீதியில் இன்னுமொரு தமிழருக்குச் சொந்தமான ‘சாரதாஸ்’ புடவைக் கடையும் எரிந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் பெய்லி வீதியிலிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான அத்தனை கடைகளும் தீவைக்கப்பட்டு விட்டன. பாதுகாப்புச் சபையின் கூட்டம் முடியும்போது கோட்டைப் பகுதியிலுள்ள அத்தனை தமிழர் கடைகளும் தீயில் கருகிக்கொண்டிருந்தன. காடையர் கூட்டம் ஒல்கொட் மாவத்த வுக்கு செல்கிறது. அங்கு தமிழருக்குச் சொந்தமான ‘ஆனந்த பவான்’ , ‘ராஜேஸ்வரி ஸ்டோர்ஸ்’, ‘அஜந்தா ஹோட்டல்’ ஆகியன தீவைக்கப்படுகின்றன.
மாலை 6:00 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வருமென ஜனாதிபதி அறிவிக்கிறார். காடையர்கள் அட்டகாசம் தொடர்கிறது.
காலை 10:00 மணி: கலவரம் கனால் பாங்க், கிராண்ட்பாஸ், ஹத்தெவத்த, கிரிலப்பனை, கொட்டாஞ்சேனை, மருதானை, மோடற, முட்டுவாள், நாரஹேன்பிட்டி, சிலேவ் ஐலண்ட், வனதமுல்ல ஆகிய இடங்களுக்குப் பரவி விட்டது. காடையர்கள் இரும்புக் கம்பிகள், கத்திகள் சகிதம் வீதிகளில் சுற்றித் திரிந்து தமிழர்களைத் தாக்கியும், கொலை செய்தும் கொண்டிருந்தார்கள்.
காடையர்கள் அடுத்து தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்த, தெஹிவள பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். அங்கும், தமிழர்களது வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு, தாக்கியழிக்கப்பட்டன. அரச மரத்தடி, பிரதான தெருச் சந்தியில் இருந்த பல தமிழர் கடைகள் கொழுத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, அண்டெர்சன் ஃப்ளாட்ஸ், எல்விட்டிகல ஃபிளாட்ஸ், ரொறிங்டன் ஃபிளாட்ஸ், திபிரிகசாய ஆகிய இடங்களுக்குப் பரவியது. வசதி படைத்தவர்கள் வாழும் கறுவாத் தோட்டம் பகுதியிலுள்ள சில தமிழர்களது வீடுகளும் தாக்கப்பட்டன. புறநகர்ப் பகுதியில், கடவத்த, கெளனிய, நுகேகொட, ரத்மலான ஆகிய இடங்களில் வாழ்ந்த தமிழர்களது வீடுகளும் தாக்கப்பட்டன.
இந்தியத் தூதுவரது வீடும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு மால 4:00 மணிக்கு முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர் அது பி.ப. 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்படுகிறது.
கலவரம் நீர்கொழும்பு வரை பரவியதால் ஊரடங்கு உத்தரவு கம்பஹா மாவட்டத்தையும் உள்ளடக்குகிறது
களுத்துறையில், TKVS ஸ்டோர்ஸ் தீவைக்கப்படுகிறது. அதன் உரிமையாளர் இரண்டாவது மாடியிலிருந்து வெளியே பாய்ந்தபோது காடையர் அவரைத் தூக்கி மீண்டும் எரியும் கடைக்குள் எறிகிறார்கள்.
ஊரடங்கு களுத்துறை மாவட்டத்தையும் சேர்த்துக்கொள்கிறது. பொலிசாரால் கலவரத்தை அடக்க முடியவில்லை அல்லது அடக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். பொலிசாருக்கு உதவி செய்ய இராணுவம் அழைக்கப்படுகிறது.
தமிழரது வீடுகளை அடையாளம் காண காடையர்கள் வாக்காளர் பதிவுப் பட்டியல்களைப் பாவிக்கிறார்கள். இக் கலவரம் முற்கூட்டியே திட்டமிடப்பட்டது எனபதற்கும் இதன் பின்னால் அரசாங்கம் இருக்கிறதென்பதற்கும் இதுவே ஆதாரம் என நம்பப்படுகிறது. “கலவரமும், சூறையாடலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் இருந்து இது முற்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது” என பின்னர் ஜனாதிபதி ஜயவர்த்தன தெரிவித்தார்.
‘சொய்சா ஃபிளாட்ஸ்’ இலிருந்த தமிழருக்குச் சொந்தமான 92 ஃபிளாட்ஸ் இல் 81 தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டுக் கொழுத்தப்பட்டது. ரத்மலானவில் தமிழருக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. காலி வீதியிலிருந்த ஜெட்றோ கார்மென்ட்ஸ், டாட்டா கார்மென்ட்ஸ் ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகின. Ponds, S-Lon, Reeves Garments, Hydo Garments, AGM Garments, Manhattan Garments, Ploy Peck, Berec, Mascon Asbestos ஆகியன எரியூட்டி அழிக்கப்பட்டன. இந்தியர்களுக்குச் சொந்தமான Kundanmals, Oxford, Kakson Garments ஆகிய தொழிற்சாலைகளில் காடையர்கள் கைவைக்கவில்லை. அவர்களது இலக்கு தனியே இலங்கைத் தமிழர்களுடைய சொத்துக்கள்தான். ரத்மலானவில் மட்டும் 17 தொழிற்சாலைகள் எரிக்கப்பட்டன. இலங்கையின் மிகப்பெரிய வியாபாரக் குழுமங்களில் ஒன்றா கப்பிட்டல் மஹாராஜா வின், ரத்மலானையில் இருந்த 6 தொழிற்சாலைகளும், கொழும்பு பாங்ஷால் வீதியில் இருந்த தலைமைச் செயலகமும் அழிக்கப்பட்டன. கல்கிசையிலிருந்த ‘தில்லீஸ் பீச்’ ஹொட்டேலைத் தீக்கிரையாக்கியதுடன் காடையரின் அன்றய தின அட்டகாசம் நிறைவுக்கு வந்தது.
வெலிக்கட சிறைச்சாலைச் சம்பவம்
1983 கலவரத்தின் மிக முக்கிய நிகழ்வு ஜூலை 25 ம் திகதி, வெலிக்கட சிறைச்சாலையில் அரங்கேறியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கீழ்க் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட, 37 தமிழ்ச் சிறைக் கைதிகள் சிங்களச் சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள். அதில் உயிர் தப்பிய கைதிகளின் வாக்குமூலப்படி சிறைகளுக்கான திறப்புக்களைச் சிங்களச் சிறைக்காவலர்களே, தாக்கிய சிங்களச் சிறைக்கைதிகளுக்குக் கொடுத்தார்கள் எனக் கூறப்பட்டது. இருப்பினும், இதற்குப் பின்னரான விசாரணையின்போது, திறப்புக்கள் காவலர்களிடமிருந்து பலவந்தமாகப் பறிக்கப்பட்டதெனக் கூறப்பட்டது.
இக் கலவரத்தின் போது பல தமிழர்கள் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலுமிருந்து தப்பியோடியிருந்தாலும், அப்படித் தப்ப முடியாத பலரது உயிர்களையும், உடமைகளையும் சிங்கள, முஸ்லிம் அயலவர்கள் காப்பாற்றியுமுள்ளார்கள். அடுத்த சில நாட்களில், பலர் அரசாங்க கட்டிடங்களிலும், கோவில்களிலும், சிங்கள, முஸ்லிம் வீடுகளிலும் தஞ்சமடைந்தார்கள்.
காலி, கேகாலை, திருகோணமலை, வவுனியாவிலும் கலவரம் பரவியது
செவ்வாய், ஜூலை 26, செவ்வாயன்று தெஹிவளை, வெள்ளவத்தை பகுதிகளில் இனவழைப்பு தொடர்ந்தது. ரத்னாகர வீதியில் 53 வீடுகள் இருந்தன. அவற்றில் தமிழருக்குச் சொந்தமான 24 விடுகள் எரியூட்டப்பட்டன. தமிழர் வாடகைக்கு இருந்த, சிங்களவருக்குச் சொந்தமான 3 வீடுகளில், உடமைகள் முழுவதும் தெருவில் வீசப்பட்டு எரியூட்டப்பட்டன. அந்த மூன்று வீடுகளும், அதைவிட சிங்களவருக்குச் சொந்தமான 26 வீடுகளும் சேதமேத்மில்லாது தப்பிவிட்டன. நகரத்தின் பல பகுதிகளிலும் தமிழர் கொல்லப்படுவதையும், அவர்களது உடமைகள் அழிக்கப்படுவதையும் இராணுவம் வேடிக்கை பார்த்ததைத் தவிர எதிலும் தலையிடவில்லை.
நாட்டின் இரண்டாவது பெரிய தலைநகரான கண்டிக்கு, கலவரம் நகர்ந்தது. ஜூலை 26, பி.ப. 2:45 மணிக்கு பேராதெனிய வீதியில் இருந்த டெல்ட்டா ஃபார்மசி தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில், லக்சலா கட்டிடத்துக்கு அருகிலிருந்த தமிழருக்குச் சொந்தமான கடையொன்று தீ வைக்கப்பட்டது. கலவரம் காசில் வீதி, கொழும்பு வீதி என்று தொடர்ந்தது. குறுகிய நேரத்துக்கு பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள் எனினும், அது நீடிக்கவில்லை. பெற்றோல் குண்டுகளோடு திரும்பி வந்த காடையர்கள் காசில், கொழும்பு, கிங்ஸ், திருகோணமலை வீதிகளிலிருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகளை எரித்தார்கள். இதைத் தொடர்ந்து காடையர் கூட்டம் கம்பொலவிற்கு நகர்ந்தது. ஜூலை 26 மாலை கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திருகோணமலை
திருகோணமலையில் பல பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டன. விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டார்களென்றும், காரைநகர் கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டுவிட்டதென்றும், நாக விஹாரை சேதப்படுத்தப்பட்டதெறும் வதந்திகள் பரவத் தொடங்கின. திருகோணமலை கடற்படைத்தளத்திலிருந்த கடற்படையினர் கிளர்ந்தெழுந்து சென்ட்றல் வீதி, டொக்யார்ட் வீதி, பிரதான வீதி, வட கரை வீதி ஆகியவற்றில் கலகம் செய்ய ஆரம்பித்தனர். திருஞானசம்பந்தர் வீதியிலிருந்த சிவன் கோவில் தாக்கப்பட்டது. 170 வெவ்வெறு தீவைப்புச் சம்பவங்களின் பின்னர் அவர்கள் முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
ஜூளை 26, ஊரடங்குச் சட்டம் நாடுதழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பல்லின மக்கள் கூட்டாக வாழ்ந்த பகுதிகளில் வன்முறைகளும், சூறையாடல்களும் தொடர்ந்தன. ஜூலை 26 மாலை பெருமளவு பொலிசாரும் இராணுவத்தினரும் வீதிகளில் வலம் வந்தார்கள். காடையர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதால், வன்முறைச் சம்பவங்கள் சிறிது சிறிதாக அடங்கின. திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் ஊரடங்கு காலத்தில் அமைதியாக அடக்கம் செய்யப்பட்டன.
ஜூலை 27, புதன் கிழமை: மத்திய மாகாணத்தில், ஹட்டன், நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. அருகேயிருந்த ஊவா மாகாணத்தின் பெரிய நகரான பதுளையில் அதுவரையில் எந்த அசம்பாவிதமும் இடம்பெற்றிருக்கவில்லை. ஜூலை 27, காலை 10:30 மணி போல், மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டர் சைக்கிள் ஒன்று தீவைக்கப்பட்டது. மதியம் போல், காடையர் குழு ஒன்று நகரின் பிரதான கடைத்தெருவிற்குச் சென்று அங்குள்ள தமைழரின் கடைகளைத் தீயிட்டுக் கொழுத்தியது. இதில் தொடங்கிய கலவரம் பின்னர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்தது. தமிழருக்குச் சொந்தமான பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பின்னர் பலவந்தமாகக் கைப்பற்றிய வான்களிலும், பஸ்களிலும் ஏறி பண்டாரவளை, ஹலி எல, வெலிமடை ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கும் தமிழர்களின் சொத்துக்களை எரியூட்டினார்கள். இருள் கவியும்போது கலவரம் லுனுகலவிற்கு நகர்ந்திருந்தது.
ஜூலை 27: கொழும்பில் பகல் பொழுதில் நடைமுறையிலிருந்த ஊரடங்கு நீக்கப்பட்டு சுமுகமான நிலை நிலவியது. கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புறப்படும் புகையிரதம் முதலாவது மேடையிலிருந்து ஊரப் புறப்பட்டபோது திடீரென்று நிறுத்தப்பட்டது. புகையிரதப் பாதையில் வெடி மருந்துகள் காணப்பட்டதையடுத்து அதிகாரிகள் அதன் பயணத்தை நிறுத்தினர். புகையிரத்ப் பெட்டிகளில் சிங்களக் காடையர்கள் பயணிகளாக ஏறித் தமிழ்ப் பயணிகளைத் தாக்கினர். இதன்போது 12 தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர். சிலர் ரயில்வே பாதையில் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
வெலிக்கடை சிறையில் ஜூலை 25 அன்று நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து தமிழ்க் கைதிகள் சப்பல் வார்ட்டிலிருந்து இளம் குற்றவாளிகள் கட்டிடத்துக்கு (Youth Offenders Building) மாற்றப்பட்டிருந்தனர். ஜூலை 27 அன்று சிங்கள சிறைக் கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டுச் சிறைச்சாலைக் கட்டுப்பாட்டைத் தமதாக்கிக்கொண்டனர். கோடரிகள், பொல்லுகள் சகிதம் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டதில் 15 தமிழ்க் கைதிகள் உயிரிழந்தனர். இதே நாளில், யாழ்ப்பாணச் சிறைச் சாலையிலும் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இரண்டு தமிழ்க் கைதிகளும் ஒரு சிங்களக் கைதியும் கொல்லப்பட்டனர்.
வியாழன், ஜூலை 28: பதுளை இன்னும் எரிந்துகொண்டிருந்தது. கலவரம் லுனுகலவிலிருந்து பசறைக்கு நகர்ந்திருந்தது. நுவரேலியா, சிலாபம் ஆகிய நகரங்களுக்கும் கலவரம் பரவியிருந்தது. கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களில் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
ஜூலை 28, ஜனாதிபதி ஜயவர்த்தன அவசரமாக மந்திரிசபையைக் கூட்டினார். முதல் முறையாக நாடு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அவர் விடுத்த செய்தியில் வன்முறைகளைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். “1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் காரணமாக எழுந்த தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கையினால் சிங்கள – தமிழ் மக்களிடையே வளர்ந்து வந்த கசப்பும், சந்தேகமும் வன்முறைக்குக் காரணமாயின” என அச் செய்தியில் தெரிவித்தார். தமிழ் ஆயுததாரிகள் ஆரம்பித்த வன்முறைக்கு எதிர்வினையாகவே சிங்கள மக்கள் நடந்துகொண்டார்கள் என வன்முறைகளுக்கான காரணமாகத் தமிழரைக் குற்றஞ்சாட்டினார். “கடந்த 2,500 வருடங்களாக ஒன்றாக இருக்குமொரு நாட்டைப் பிரிக்க சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களது கூக்குரலுக்குச் செவி சாய்த்து, இந்த நாட்டைப் பிரிப்பதற்கு முனையும் எந்தவொரு கட்சியையும் நான் தடை செய்வேன்” என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் தலையீடு
ஜூலை 28: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஜயவர்த்தனாவை அழைத்து கலவரம் இந்தியா மீது ஏற்படுத்திய விளைவுகள் பற்றிப் பேசினார். தனது பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் பி.வி. நரசிம்மராவை அனுப்புவதாகக் கூறியதும் ஜயவர்த்தனா அதற்கு இணங்கினார். சில மணி நேரங்களில் ராவ் இலங்கையில் வந்திறங்கினார்.
வெள்ளி, ஜூலை 29: கொழும்பு மீண்டும் அமைதிக்குத் திரும்பியிருந்தது. நகரம் முழுவதும் பலவிடங்களில் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான தஞ்சமடைந்திருந்த உறவினர்களையும், நண்பர்களையும் இதர தமிழ் மக்காள் சென்று பார்த்தார்கள். காலை 10:30 மணிக்கு காஸ் வேர்க்ஸ் வீதியில் இரண்டு சிங்கள இளைஞர்கள் சுடப்பட்டார்கள். உடனேயே அவ்விடத்தில் பெரிய கூட்டமொன்று கூடியது. அடம் அலி கட்டிடத்தில் இருந்து விடுதலைப் புலிகள் சிங்கள இளைஞர்களைச் சுட்டுவிட்டதாக வதந்தி பரவியது. இராணுவமும், கடற்படையினரும், பொலிசாரும் கட்டிடத்தைச் சுற்றி வளைத்து சப் மெஷின், செமி ஆட்டோமட்டிக் துப்பாக்கிகளால் தாக்குவதற்குத் தயாராகினார்கள். மேலே பறந்த ஹெகொப்டரிலிருந்து கட்டிடத்தின் மீது துப்பாக்கிப் பிர்யோகம் செய்யப்பட்டது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகங்களுடன் கட்டிடத்துள் பிரவேசித்தார்கள். அங்கு விடுதலைப் புலிகளோ அல்லது ஆயுதங்களோ எதுவும், எவரும் காணப்படவில்லை. ஆனாலும், கொழும்பில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் சணடை நடைபெறுவதாக நகரெங்கும் வதந்தி பரவியிருந்தது. தொழிலாளர்கள் பீதியில் அகப்பட்ட வாகனங்களில் ஏறி ஓடித் தப்பித்துக்கொண்டிருந்தார்கள். வாகனங்கள் நிறுத்தப்பட்டுச் சோதனை செய்யப்பட்டன. தமிழர்கள் யாரும் அகப்பட்டால் அவர்கள் தாக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டார்கள். கிருல வீதியில் இப்படி ஒரு தமிழர் எரித்துக் கொல்லப்பட்டார். அத்திடிய வீதியில் 11 தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். அதே வீதியில் கைவிடப்பட்ட வான் ஒன்றினுள் வெட்டிக் குதறப்பட்ட இரண்டு தமிழர்களது உடல்களும் மூன்று முஸ்லிம்களின் உடல்களும் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 15 காடையர்கள் கொல்லப்பட்டனர். ஜூலை 29, பி.ப. 2:00 மணியளவில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு வந்து, ஆகஸ்ட் 1, திங்கள் அதிகாலை 5:00 மணிவரை நீடித்தது.
ஜூலை 29: பதுளை, கண்டி, திருகோணமலை நகரங்களில் அமைதி நிலைகோண்டிருந்தது. நுவரேலியாவில் மதியமளவில் வன்முறை மீண்டும் வெடித்தது. கனேசன் ஸ்டோர்ஸ், சிவலிங்க ஸ்டோர்ஸ் ஆகைய இரு தமிழருக்குச் சொந்தமான கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. காடையர்கள் பசார் வீதி, லோசன் வீதி ஆகியவற்றிலும் தமிழர் கடைகளைக் கொழுத்தினார்கள். கேகாலை, மாத்தறை மாவட்டங்களுக்கும் வன்முறை பரவியிருப்பதாக அறிவித்தார்கள். கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிதவில் தொடங்கி தெரணியகல, அவிசாவளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. மாத்தறை மாவட்டத்தில், தெனியாய, மொறவாக்க ஆகிய இடங்கள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தன. சிலாபத்திலும் வன்முறைகள் வெடித்திருந்தன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் ஜனாதிபதி ஜயவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீத் ஆகியோரச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்குச் சென்றார்.
சனி ஜூலை 30: நுவரேலியா, கண்டபொல, ஹாவேலியா, மாத்தளை ஆகிய இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. நாட்டின் இதர பகுதிகளில் அமைதி நிலை கொண்டது. அன்றிரவு அரசாங்கம் மூனறு இடதுசாரிக் கட்சிகளைத் தடை செய்தது – இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, நவ சம சமாஜக் கட்சி ஆகியனவே அவை. கலவரத்தைத் தூண்டியதாக அக் கட்சிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
கலவரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இலங்கையில், சிங்கள தமிழ்ச் சமூகங்களிடையே முறுகல் நிலை இருந்து வந்தது. தமிழ் விடுதலை இயக்கங்களின் தோற்றத்துடன், சிங்கள மக்களிடையே தமிழ் விரோதப் போக்கை அதிகரித்து வந்தது. கனத்த மயானத்தில் கூடியிருந்த சில சிங்கள மக்களிடையே எழுந்தமானமாக வன்முறை ஆரம்பித்திருந்தாலும், அவர்களின் கோபத்தை மேலும் அதிகமாக்கி வன்முறையைத் தூண்டிவிட்டி, தாக்குதல்களை ஒழுங்குபடுத்தியதில், சிங்கள அரசியல்வாதிகளுக்குப் பெரிய பங்குண்டு. கலவரத்தின் ஆரம்ப நாட்களில், இராணுவமும், பொலிசாரும் வன்முறைகளைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது உண்மைதான். பல இடங்களில் காடையர்களுடன் பொலிசாரும், இராணுவத்தினரும் சேர்ந்து செயற்பட்டதற்கான பெருந்தொகையான சாட்சிகளுண்டு. இருப்பினும், ஜூலை 26 முதல் பொலிசாரும் இராணுவத்தினரும், வீதிகளில் இறங்கி வன்முறையளர்களைக் கட்டுப்படுத்தியிருந்தனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் அமைதி மீண்டிருந்தது உண்மை. ஊரடங்கை நீட்டியதால் வன்முறை நாட்டின் இதர பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது உண்மை. ஜூலை 29 அன்று உடமைகளைச் சூறையாடிய 15 சிங்களவர்களைப் பொலிசார் சுட்டுக்கொன்றதால் குறுகிய நேரத்துக்கு கொந்தளிப்பு நிலவியது.
இக்கலவரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு நேரடியான தொடர்பு இருக்கிறதெனவும், சிஙகளக் காடையர்களுக்கு உதவியும், ஊக்கமும் அது கொடுத்திருந்ததென்றும் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜனாதிபதி ஜயவர்த்தனா, வன்முறையைக் கட்டுப்பாடுத்தவுமில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவுமில்லை, மாறாக, இந்த வன்முறையைத் தமிழர் தமக்குத் தாமே கொண்டுவந்திருக்கிறார்கள் என முழக்கமிட்டார். வன்முறையைக் கையாண்டவர்களைக் கட்டுபடுத்த எந்தவித முயற்சியும் எடுக்காமல் அவர்களைச் சிங்கள மக்களின் வீரர்களாக அவர் புகழ்ந்திருந்தார். ஜூலை 11, 1983 இல், கலவரத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், டெய்லி ரெலிகிராஃப் பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியில், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக எடுக்கும் வன்முறை நடவடிக்கைகளைப் பற்றித் தானோ, சிங்கள மக்களோ கவலைப்படப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் அபிப்பிராயம் பற்றி எனக்குக் க்வலை இல்லை. இபோது அவர்களது உயிர்களை பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களது அபிப்பிராயத்தைப் பற்றியோ, நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்க முடியாது. வடக்கின் மீது எவ்வாளவு அழுத்தத்தைப் பிரயோகிக்கிறோமோ அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். …உண்மையில், தமிழ் மக்களை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
ஜே ஆர். ஜயவர்த்தனா ஜூலை 11, 1983 இல் டெய்லி ரெலிகிராஃப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி
கலவரங்களை அடக்குவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனச் சில தமிழ் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டியிருந்தும், அரசாங்கம் அதை மறுத்து, தமிழ்ச் சமூகத்தைப் பாதுகாக்க ஆரம்பத்திலிருந்தே தாம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் பிரேமதாச ஒரு குழுவை நியமித்து, கொழும்பில் வீடுகளை இழந்து தெரிவில் நின்ற 20,000 தமிழர்களுக்கு தங்குவதற்கான ஒழுங்குகளையும், சாப்பாட்டு வசதிகளையும் செய்து கொடுத்தார். இத் தற்காலிகத் தங்குமிடங்களாக 5 பாடசாலைகளும், விமானத் தரிப்பிடமொன்றும் பாவிக்கப்பட்டன. அகதிகளின் எண்ணிக்கை 50,000 க்கு மேல் அதிகரித்தபோது, அரசாங்கம், இந்தியாவின் உதவியுடன் தமிழரைக் கப்பல்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப முடிவெடுத்தது.
பாதிப்புகள் கணக்கெடுப்பு
1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட உயிர்களினதும் உடமைகளினதும் இழப்புக்களின் எண்ணிக்கை, பெறுமது பற்றி உறுதியான தரவுகள் எதுவும் எடுக்கப்பட்டதாகவோ அல்லது பேணப்படுவதாகவோ அறிய முடியவில்லை. 250 தமிழர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்தது. பல சர்வதேச நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், 400 முதல் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடுகிறார்கள். வெலிக்கட சிறைச்சாலையில் மட்டும் 53 தமிழ்ச் சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். இறுதியில் இலங்கை அரசின் கணக்கெடுப்பு 300 ஆக உயர்ந்தது.
18,000 க்கும் மேலான தமிழருக்குச் சொந்தமான வீடுகளும் வர்த்தக ஸ்தாபனங்களும் அழிக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்காந தமிழர்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், தமிழீழ் விடுதலைப் புலிகள் உட்படப் பல போராட்ட அமைப்புகளில் இணைந்துகொண்டனர்.
சட்ட நடவடிக்கையும் நட்ட ஈடு வழங்கலும்
அடுத்து வந்த அரசாங்கம் 1983 ஜூலை கலவரத்தைப் பற்றி விசாரிக்க ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் ஒன்றை ஸ்தாபித்தது. கலவரத்தின்போதி 300 தமிழர் கொல்லப்பட்டும், 18,000 வீடுகளும், வர்த்தக ஸ்தாபனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைக் கமிஷன் உறுதி செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப்படவேண்டுமெனத் தீப்பளித்தது. ஆனால் இதுவரை எவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்படவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடோ வழங்கப்படவுமில்லை.
(இக் கட்டுரை 2020 ஜூலை மாதம் மறுமொழி.காம் இல் பிரசுரமானது)