தலையங்கம்

இன்று கறுப்பு ஜூலை நினைவு நாள்

தலையங்கம்

1983 ஜூலை 23: 7 நாட்கள் | 5,638 பேர் கொலை | 2,015 பேர் காயம் | 466 காணாமலாக்கப்பட்டோர் |670 வன்புணர்வு | 250,000 உள்ளக இடப்பெயர்வு | 1.2 மில்லியன் புலம் பெயர்வு | 0 கைது செய்யப்பட்டோர் | 0 குற்றவாளிகள்

இந்தக் கேட்டில் நல்லிணக்கம்

இன்று கொழும்பில் சில சிங்கள சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘கறுப்பு ஜூலை’ நினைவு ஊர்வலம் பொலிசாரின் உதவியுடன் குண்டர்களால் தடுக்கப்பட்டது. ஊர்வலத்தை ஒழுங்கு செய்தவர்கள் பயங்கரவாதிகள் என தூஷிக்கப்பட்டார்கள். 1983 இனப்படுகொலையைத் தூண்டிய அரசியல்வாதிகள், நிறைவேற்றிய குண்டர்கள், ஒத்துழைத்த பொலிஸ்காரர் அப்படியே இருக்கிறார்கள் ஆனால் இரண்டாம் தலைமுறையாக. எதுவுமே மாறவில்லை.

எங்கள் தரப்பில் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போயிருக்கிறோம். மூலோபாயங்களையும் மாற்றிப் பார்த்தோம்; எந்தவித முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ஆனால் எங்கள் இரண்டாம் தலைமுறை எதையும் ஞாபகம் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

ஜூல்ய் 23 இல் நடைபெற்ற சம்பவம் ஒரு கலவரமல்ல. இரண்டு இனங்களுக்கிடையே நடைபெற்ற குழப்பமல்ல. இது சிங்கள அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை. ஐ.நா. சாசனம், இரண்டாம் கட்டளை இனப்படுகொலையை இப்படி வரையறுக்கிறது.: ” ஒரு தேசிய இனம் அல்லது மதம் சார் அடையாளங்களுடைய ஒரு மனிதக் குழுமத்தை முற்றாகவோ பகுதியாக அழிக்கும் செயல் (The definition contained in Article II of the Convention describes genocide as a crime committed with the intent to destroy a national, ethnic, racial or religious group, in whole or in part). இவ்வரைவின்படி ஜூலை 83 மட்டுமல்ல அதற்கு முன்னர் நடைபெற்றவையும் ஏறத்தாழ இனப்படுகொலைகளே தான்.

இலங்கையில் இதுவரை நடைபெற்ற அனைத்து தமிழர் படுகொலைகளையும் அதன் போது இறந்தவர்களையும், உடமைகளை இழந்தவர்களையும் நாம் நினைவுகூரல் வேண்டும். அதே வேளை நாம் எமது அடுத்த கட்ட பலப்பரீட்சைக்குத் தயாராக வேண்டும். துப்பாக்கிகளுக்கும் கத்திகளுக்கும்தான் பலம் இருக்கிறது என்பதில்லை. மாற்று வழிகள் நிறையவுண்டு.

சரித்திரத்துக்குச் சுழலும் தன்மை உண்டு என்பதை எமது சமூகம் மறக்ககூடாது. அதை அடுத்தடுத்த சந்ததிகளுக்கு நினைவுபடுத்த இப்படியான தொடரோட்டங்கள் அவசியம்.

(படம்: ருவிட்டர்)