Canadian HistoryUS & Canada

இன்று ‘ஒறேஞ் ஷேர்ட்’ நாள்: கனடாவின் முதல் குடி மக்களின் கலாச்சாரப் படுகொலை நினைவு நாள்

கனடிய தமிழர் பேரவை நினைவுகூர்கிறது

இன்று,செப்டம்பர் 30, கனடாவின் முதல் குடி மக்களின் கலாச்சாரப் படுகொலையை நினைவுகூரும் ‘உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாள்’ (Nathional Day of Truth and Reconciliation (NDTR) எனப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நாளாகும். இந்நாளன்று கனடா தேசம் ஒறேஞ் ஷேர்ட்டுகளை அணிந்து ஒரு துக்கதினமாகக் கொண்டாடுகிறது. ஒரு நூற்றாண்டு காலமாக கனடிய அரசினாலும் கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களாலும் முதல் குடி மக்களின் குழந்தைகள் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டு வதிவிடப்பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறந்ததும் அவர்களின் உடல்கள் பெயரிடப்படாத புதைகுழிகளில் புதைக்கப்பட்டதும் வரலாறு. 2013 இலிருந்து கனடாவின் தேசிய விடுமுறை நாளாக இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய நாளில் பாதிக்கப்பட்ட பூர்வ குடிகளின் துயரங்களில் பங்கெடுக்கும் வகையில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக கனடிய தமிழர் பேரவை பூர்வ குடிகளின் வாழிடங்களில் ஒன்றாகிய கேர்வ் லேக் பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகளில் பங்குபற்றி துயரங்களைப் பகிந்துகொண்டது.

வரலாறு

1867 இல் கனடா ஒரு தேசமாக உருவாகியபோது இந்நாட்டின் பூர்வ குடிகளுக்கும் பிரித்தானிய முடியாட்சிக்குமிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அப்போது கனடிய பிரதமராக இருந்த ஜோன் ஏ.மக்டோனல்ட் இந்நாட்டிலிருந்த பல கலாச்சாரங்களை ஒன்றிணைத்து அனைத்து மக்களையும் ‘கனடியர்’ என்ற ஒரு அடையாளத்துக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். பூர்வீக குடிகளின் கலாச்சாரத்தை அழித்து கனடாவில் பெரும்பான்மையாக இருந்த ஐரோப்பியருடன் சங்கமிக்கச் செய்வதன் மூலம் தனது எண்ணத்தை நிறைவேற்றுவது அவரது நோக்கமாக இருந்தது. இதனை நிறைவேற்ற அவர் வதிவிடப் பள்ளிகளை (Residential Schools) நிறுவி அங்கு பூர்வீகக் குடிகளின் பிள்ளைகளைப் பலவந்தமாகப் பறித்துவந்து தங்க வைத்து ஐரோப்பிய கலாச்சாரம், பண்பாடு, கிறிஸ்தவ மதம் ஆகியவற்றைக் கற்பித்து தம்முடன் சங்கமிக்க வைக்கலாம் எனத் திட்டமிட்டுச் செயலாற்றினார். அரச செலவில் கட்டப்பட்ட இப்பளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அப்போதிருந்த ரோமன் கத்தோலிக்க, கிறிஸ்தவ, மெதடிஸ்த, யூனைற்றெட் மற்றும் பிறெஸ்பைற்றேறியன் தேவாலயங்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. பூர்வீக குடிமக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் கல்வியைக் கட்டாயமாகியதன் மூலம் பாடசாலைக்கு வர மறுத்த பிள்ளைகளை ரோயல் கனேடியன் மவுண்டெட் பொலிசாரின் (RCMP) உதவியுடன் கட்டாயமாக இழுத்து வந்து பாடசாலைளில் சேர்த்தார்கள். இதை விரும்பாத பெற்றோர் விடுதிகளுக்கு வந்து பிள்ளைகளைத் திரும்ப அழைக்க முற்பட்டபோது அவர்கள் வீடு செல்ல வேண்டுமானால் நிர்வாகத்திடமிருந்து அனுமதி (pass) பெறவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இப்பாடசாலைகளை நிர்வகிக்கும் மதஸ்தாபனங்களுக்கு அரசு போதுமான பண உதவிகளைச் செய்யாமையால் இம்மதஸ்தாபனங்களின் பராமரிப்பு சோடை போனது. அரச பதிவுகளின்படி 150,000 பிள்ளைகள் இப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர் எனவும் இவர்களில் 3,200 பேர் காசநோய், பலாத்கார வன்புணர்வு, துன்புறுத்தல், தப்பியோடுதல் போன்ற பல காரணங்களினால் இறந்துவிட்டனர் என பள்ளிகளின் நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்கமான ஆணையத்திற்காக விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மறே சின்கிளெயரது கணக்குப்படி சுமார் 6,000 குழந்தைகள் இறந்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரணங்களில் பெரும்பாலானவை 1950 க்ளுக்கு முன்னர் நடைபெற்றவையாகும். அப்போது இங்கு வந்த ஐரோப்பிய குடிவரவாளரிடம் பரவலாக இருந்த காசநோய்த் தொற்றினால் தான் இப்பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் இறந்துபோயிருந்தார்கள். இதைவிட போசாக்கின்மை, குளிர், பராமரிப்புக் குறைபாடு போன்றவற்றினாலும் பலர் இறந்து போனார்கள். இப்பள்ளிகளிலிருந்து தப்பியோடிய பலர் காடுகளில் குளிரினாலும் பசியினாலும் இறந்து போனார்கள். காணாமற் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நிர்வாகம் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. போதுமான மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. இறந்தவர்களைப் பற்றி பெற்றோருக்கு எதுவித தகவலையும் தெரிவிக்காது நிர்வாகம் உடல்களை அடையாளம் எதுவுமற்று தேவாலய மற்றும் பள்ளிகளுக்கான நிலங்களில் புதைத்து விட்டது. தற்போது நில ஊடுருவும் ரேடார் கருவிகளின் மூலம் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கனடிய அரசுக்கும் தேவாலயங்களுக்கும் அவமானமும் நெருக்கடிகளும் தோன்றியுள்ளன.

1950 களில் பூர்வகுடி மக்கள் மீதான கட்டுப்பாடுகள் அரசினால் தளர்த்தப்பட்டு வதிவிடப்பள்ளிகளை மூடும் பணி ஆரம்பமாகியது. 1969 இல் இப்பள்ளிகளின் நிர்வாகத்தை தேவாலயங்களிடமிருந்து அரசாங்கம் எடுத்துக்கொண்டது. 1980 இல் ஒரு சில பள்ளிகளே இயங்கின. 1996 இல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.

கலாச்சாரப் படுகொலை

வதிவிடப்பள்ளி நிர்வாகத்தில் தாம் இழைத்த தவறுக்காக 1986 இல் யூனைற்றெட் சேர்ச் பின்னர் 1992 இல் ஆங்கிளிக்கன் சேர்ச்சும் பூர்வ குடிகளிடம் மன்னிப்புக் கேட்டது. 2009 இல் பாப்பாண்டவர் பெனெடிக்ட் XVI நடந்தவைக்காக வருத்தம் தெரிவித்திருந்தாராயினும் முறையாக மன்னிப்புக் கோரவில்லை. 2017 இல் பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ போப்பாண்டவரை மன்னிப்புக் கோரும்படி கேட்டிருந்தார்.

1991 இல் பூர்வகுடிகளுக்கான றோயல் கொமிசன் (Royal Commission on Aboriginal Peoples) முறையாக நிறுவப்பட்டு பூர்வ குடிகளுக்கு, கனடிய அரசுக்கும் ஒட்டு மொத்த கனடிய சமூகத்துக்குமிடையேயான உறவு பர்றி விசாரணைகளை ஆரம்பித்தது. 2008 இல் அப்போதைய பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் அமைச்சரவை சார்பாக மன்னிப்புக் கேட்டிருந்ததுடன் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையமொன்றை உருவாக்கி வதிவிடப்பள்ளிகளில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க உத்தரவிட்டார். 2015இல் இவ்வணையம் வெளியிட்ட தனது இறுதி அறிக்கையில் நடைபெற்றது ‘கலாச்சாரப் படுகொலை’ (Cultural Genocide) எனத் தீப்பளித்திருந்தது. பூர்வ குடிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் பெற்றோர்களால் தமது குழந்தைகளுக்கு தமது மொழியைக் கற்பிக்க முடியாமல் போன காரணத்தால் 70% த்துக்கும் மேலான மொழிகள் வழக்கொழிந்து போகும் தறுவாயிலுள்ளன எனவும் வேண்டுமென்றே தரக்குறைவான கல்வியைப் புகட்டியதால் இச்சந்ததிகள் உரிய வேலைவாய்ப்புக்களைப் பெறமுடியாமல் போனது எனவும் பள்ளிகளில் மேர்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் விட்டுப்போன உளவளப் பாதிப்பு இன்றும் தொடர்கிறது எனவும் இவ்வணையம் தீர்ப்பளித்திருந்தது.

‘ஒறேஞ் ஷேர்ட்டின்’ கதை

வதிவிடப்பள்ளிகளி நடந்த கொடுமைகளை வெளிக்கொண்ரும் பொருட்டு 2013 இல் ‘ஒறேஞ் ஷேர்ட் நாள்’ (Orange Shirt Day) அறிமுகப்படுத்தப்பட்டது. வதிவிடப்பள்ளியில் இருந்து தப்பிய ஃபில்லிஸ் ஜாக் வெப்ஸ்ரட் என்னும் பெண் வதிவிடப்பள்ளியில் தனக்கு நடந்த கொடுமையை பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற வதிவிடப்பள்ளி நினைவு கூர் நிகழ்வொன்றில் கூறியிருந்தார். தனக்கு ஆறு வயதாகவிருக்கும்போது தன்னை முதன் முதலாக வதிவிடப்பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த முதாலாம் நாளிலேயே அவரது பாட்டி ஆசையோடு வாங்கித் தந்த ‘ஒறேஞ்ச்’ சட்டை உட்பட அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டனர் எனவும் அதன் பிறகு அவ்வாடை தன்னிடம் திருப்பித் தரப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் வதிவிடப்பள்ளிகளின் நினைவாக இச்சட்டை இப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் பல்லாயிரம் ஆண்டுகளாக ‘ஒறேஞ்’ நிறம் பூர்வீக குடிகளுக்கும் சூரிய ஒளி, உணமி பேசுதல், தேகாரோக்கியம், புத்துயிர்ப்பு, பலம், வலு ஆகியவற்றுக்குமான உறவைக் குறிக்கும் நிறம் எனவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையுண்டு (Every Child Matters)

பூர்வீக குடிகளுக்கு வதிவிடப்பள்ளிகளில் இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைவுகூரும் முகமாக தற்போது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 ம் நாளை விடுமுறை நாளாக ‘ஒறேஞ் சேர்ட்’ நாள் என்ற பெயரில் மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இச் சட்டையில் ‘Every Child Matters’ என்ற சுலோகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சகல மக்களின் காலாச்சாரங்களும் கொண்டாடப்படவேண்டியவை என கனடிய மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கத்தில் இவ்விடுமுறை நாள் நினைவுகூரப்படுகிறது.

மாகாணங்கள்

அதே வேளை பிரிட்டிஷ் கொலம்பியா, மனிற்றோபா, நோவா ஸ்கோஷியா, நோர்த் வெஸ்ட் பிரதேசங்கள், நுனாவுட், பிறின்ஸ் எட்வேர்ட் தீவு மற்றும் யூக்கோன் ஆகியவை செப்டம்பர் 30ம் நாளை விடுமுறை நாளாகப் பிரகடனம் செய்துள்ளன.