Columnsமாயமான்

இன்னுமொரு இலங்கை-இந்திய ஒப்பந்தம்? – சீனாவின் அடுத்த நகர்வு என்ன? தமிழர்களை எந்தக் கடவுள் காப்பாற்றுவார்?

-மாயமான்

திருகோணமலையில் அமைந்திருக்கும் எண்ணைத் தொட்டிகளை (oil tanks) மறுசீரமைத்துப் பாவனைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்தியாவும் இலங்கையும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இவ்வொப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் இருந்து வந்த இழுபறி நிலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய வருகையுடன் முடிவுக்கு வருகிறது என அறியப்படுகிறது.

திருகோணமலை எண்ணைத் தொட்டிகள்

இரண்டாம் உலக யுத்த காலத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக, திருகோணமலை இயற்கைத் துறைமுகத்துக்கு அருகேயுள்ள சீனன் குடாவில் பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட 99 எண்ணைத் தொட்டிகளை மறுசீரமைக்கும் இணைப் பொறுப்பை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்வதாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் (1987) கூறுகிறது. நீண்ட காலமாகக் கிடப்பில் வைக்கப்பட்டிருந்த இவ்விவகாரம் 2003 இல், ‘இந்தியன் ஒயில் கோர்ப்பொறேஷன் (Indian Oil Corporation) நிறுவனத்தின் இலங்கைக் கிளையான ‘லங்க இந்தியன் ஒயில் கம்பனி (Lanka Indian Oil Comp[any (LIOC)) நிறுவப்பட்டதுடன் மீண்டும் முன்னிலைக்கு வந்தது. 2003 இலிருந்து இவற்றில் 15 தொட்டிகளை LIOC நிர்வகித்து வருகிறது. மீதமான 84 தொட்டிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

2019 இல் ராஜபக்ச நிர்வாகம் ஆட்சியைக் கைப்பற்றியதும் சீனாவின் தலையீட்டாலும் கம்மன்பில உட்பட்ட சிங்களத் தேசிய சக்திகளாலும் இவ்வெண்ணைத் தொட்டி விவகாரம் மீண்டும் பிரச்சினைக்குள் தள்ளப்பட்டது. இத் தொட்டிகளை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவதிலிருந்து பின்வாங்க அரசு முடிவுசெய்திருந்தது. இக் காலகட்டத்தில்தான் தொழிற்சங்கங்கள் மற்றும் சிங்களத் தேசியவாதிகளின் அழுத்தத்தால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்திலிருந்தும் இலங்கை பின்வாங்கியிருந்தது.கடந்த சில மாதங்களாக இந்திய ராஜதந்திர நகர்வுகளும், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒன்றிணைந்து பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக்கியதன் மூலம் இந்தியா இலங்கையைச் சீனாவிலிருந்தும் தேசியவாதிகளிடமிருந்தும் விலக்கி தனது பக்கம் கொண்டுவந்துள்ளது. இலங்கைக்கு மிக அத்தியாவசியமான நிதிப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வை இந்தியா தருவதற்கு பிரதியுபகாரமாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள எண்ணைத் தொட்டிகளை மறுசீரமைக்க இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இதற்கென ‘ட்றிங்கோ பெற்றோலியம் ரேர்மினல் லிமிற்றெட் (Trico Petrolium Terminal Limited (TPTL)) என்னும் பெயரில் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் ஒரு கிளை நிறுவனத்தை உருவாக்கவுள்ளதென அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இத் தொட்டிகளில் ஒவ்வொன்றும் 12,000 கி.லீ. எரிபொருளைத் தாங்கக்கூடிய கொள்ளளவைக் கொண்டவை. ஏறத்தாழ 100 வருடங்கள் பழமைவாய்ந்த இவற்றின் சீரமைப்புக்கும் பராமரிப்புக்கும் பல மில்லியன் டாலர்கள் செலவாகுமெனவும் எனவும், இதற்கான ஒப்பந்தம் இன்னும் ஒரு மாதத்தில் கைசாத்திடப்படவுள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுசரணையை ஜனாதிபதி ராஜபக்ச வழங்கியுள்ளதாகவும் இது நடைபெறுமானால் பல தசாப்தங்களுக்குப் பின்னர் இந்தியாவுக்குக் கிடைத்த அதியுச்ச ராஜதந்திர வெற்றியெனவும் கருதப்படுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப்போல் இலங்கையில் நிரந்தரமாகக் கால்பதிக்க வல்ல நல்ல திட்டமொன்றும் தற்போது இந்தியாவிடம் இல்லை.

இத் திட்டத்துக்கு சீனாவின் அனுசரணையுடன் தென்னிலங்கையில் சிங்கள தேசியவாதிகள், ஜே.வி.பி., தொழிற்சங்கங்கள் ஆகியன எதிர்த் திட்டங்களை ஆராய்ந்து வருகின்றன எனவும், அதைச் சமாளிக்க கால அவகாசம் வாங்குவதற்காகவும் எந்தவித தடங்கலும் இல்லாது பின்னணியில் இத் தயாரிப்பு வேலைகள் நடந்துவருகின்றன எனவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள கடன் தொடர்பான விடயங்களைக் கவனிப்பதற்கென அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது வெளிநாடுகளில் பயணம் செய்கிறார். கடந்த வாரம் குடும்பத்துடன் துபாய் சென்ற பசில் ராஜபக்ச தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் இந்நாடுகளில் செய்யப்படுகிறதோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியாவின் கடன் வசதி எப்படி இருக்கப்போகிறது, அதற்குப் பிரதியுபகாரமாக இலங்கையில் இந்தியாவின் முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்கள் எப்படி அமையப் போகின்றன என்பது பற்றிய விபரங்கள் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காகவே ஜனாதிபதி ராஜபக்ச பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார் எனவும் பேசப்படுகிறது. அமைச்சரவை அனுமதி ஆட்சியாளருக்குக் கிடைக்காமல் எந்தத் திட்டமும் நிறைவேறப்போவதில்லை. எனவே அந்த அமைச்சரவையை ‘fix’ பண்ணுவது ராஜபக்சக்களின் முதல் வேலை.ஜனவரியில் பாராளுமன்றம் மீண்டும் அமர்வைத் தொடங்கியதும் பல பிரளயங்கள் ஏக காலத்தில் நிறைவேறும் சாத்தியங்கள் உண்டு என தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பாதகமான கொள்கை முடிவுகளுக்கும், பொருளாதாரச் சிக்கல்களுக்கும் காரணகர்த்தாவான ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் அப் பதவிக்குத் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளாரெனவும் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அரசாங்கத்தில் பசில் ராஜபக்சவின் கை ஓங்கியிருக்கிறது என்பது நிதர்சனமாகிறது. இந் நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறாமலேயே இந்திய உதவியுடன் நாட்டை மீட்டுவிடலாமெனவும், இதனால் அமெரிக்க எதிர்ப்பாளர்களான சிங்கள தேசியவாதிகளை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தமுடியுமெனவும் ராஜபக்ச தரப்பு நம்புகிறதெனக் கூறப்படுகிறது.

பசில் ராஜபக்சவின் இந்திய பயணத்தின்போது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது திட்டங்களை மிகவும் திடமாகவே செயற்படுத்த உத்தேசித்து விட்டனர் எனவும் இதனால் தான் பிரதமர் மோடி பசில் ராஜபக்சவைச் சந்திக்காமல் காரியங்களை நகர்த்தியிருந்தார் எனவும் கூறப்படுகிறது. அதே வேளை பிரதமர் மோடியின் தனிப்பட்ட ‘அழைப்பில்’ திருப்பதிக்குச் செல்லும் மஹிந்த ராஜபக்சவுடன் மேலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்ற சந்தேகங்களும் உள்ளன.

பசில் ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தைகளின்போது இலங்கைக்கு பாரிய கடனுதவிகளைப் பல்வேறு வழிகளிலும் பெறுவதற்கு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது எனவும் இதன்போது இந்தியாவின் பல்வேறு விதமான நிபந்தனைகளுக்கும் பசில் இணங்கியிருந்ததாகவும் ஆனால் அவற்றை வெளியிடுவதால் தென்னிலங்கையில் தற்போது நிலவிவரும் அரசுக்கெதிரான எதிர்ப்பு, விடுமுறை நாட்களின்போது மேலும் அதிகரிக்கலாமென்பதால் இவ்விடயங்களைப் பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதிரடி அறிவிப்புகளாக அரசு வெளியிடலாமெனவும் அதற்கு முன்னர் அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்படுமெனவும் கூறப்படுகிறது.

ராஜபக்சக்களின் இந்திய சார்பு நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்த குழுவினரில் ஒருவரான அமைச்சர் கம்மன்பிலவைக் கொண்டே திருகோணமலை எண்ணைத் தொட்டிகள் ஒப்பந்த விடயத்தை அறிவ்ப்பதன் மூலம், ராஜபக்சக்கள் இவ்விடயத்தில் தந்திரசாலிகள் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளார்கள். இதனால் அமைச்சர் வீரவன்ச, நாணயக்கார குழுவினரிடையே மோதல்கள் ஆரம்பிக்கவும் வாய்ப்புண்டு. எண்ணை வயல் திட்டத்துக்கும், இந்திய பொருளாதார உதவிக்கும் தொடர்புகள் எதுவுமில்லை என இந்திய எதிர்ப்பாளர்களுக்கு அடித்துக்கூறுவதன் மூலம் கம்மன்பில பொறியொன்றுக்குள் தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்கிறார் எனவும் நம்பலாம்.இந் நகர்வுகளின் எதிரொலியாகவே சீனாவின் இலங்கை நகர்வுகளைப் பார்க்க வேண்டும். சீனத் தூதுவரின் நல்லூர் வழிபாடும், பருத்தித்துறை, மன்னார் வருகைகளும், வடக்கு கிழக்கின் மீது திடீரெனப் பொங்கிப் பெருகும் பாசமும், சஜித் பிரேமதாசவைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக அவரின் வேண்டுகோளுக்கிணங்க வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ‘அன்பளிப்புகள்’ வழங்கப்படுவதும் சீனாவை ஒரு ‘காமெடியனகத்’ தமிழர்கள் பார்க்க வேண்டுமா அல்லது சீனாவின் இந்த நகர்வைத் தமிழர்கள் சாதகமாகப் பாவித்துக்கொள்ள வேண்டுமா என்ற விவாதம் தற்போது தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ் விடயத்தில் ‘இந்தியாவை மீறி நாம் செயற்பட முடியாது’ என யதார்த்தமான முடிவொன்றை சீ.விக்னேஸ்வரன் ஒருவரே இதுவரை தெரிவித்துள்ளார். மற்றவர்கள் வழக்கமான ‘விளக்குக் கொழுத்துதலோடு’ நின்றுவிட்டார்கள்.

இவ் விடயத்தில் அமெரிக்க சந்திப்புகளின்போது, இந்திய தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்திருந்த ‘முக்கிய கலந்துரையாடல்களின்’ சாராம்சம் என்ன என்பது தொடர்ந்து ‘mute’ செய்யப்பட்டிருக்கிறது. தென்னிலங்கை சிங்கள தேசிய சக்திகளை உசுப்பேற்றிவிடக்கூடாது என்பதற்காக அவற்றை வெளியிடுவதில் இரு தரப்புகளும் மெளனம் சாதிப்பதும் புரிந்துகொள்ளப்படக் கூடியதே. இந்திய-இலங்கை-த.தே.கூ. பேச்சுவார்த்தைகளின்போது உருவாக்கப்பட்ட ‘ஃபோர்முலா’ வில் தமிழருக்கான தீர்வும் இருந்தால் 2005 தேர்தலில் இயக்கம் எதிர்பார்த்த ‘ ராஜபக்சக்களின் மூலம் தீர்வு’ என்ற கனவு சாத்தியமாகும் அல்லது ‘2009 ஆரம்பத்தில் கிளிநொச்சியில் தலைவர் பெட்டி அடித்துவிட்டார், இலங்கை இரானுவம் இத்தோடு சரி’ என்கின்ற அரசியல் ஆய்வாகவே இதுவும் வந்து முடியும். எனவே பேசாமல் ‘வாயைப் பொத்திக்கொண்டு வருவதைக் காண்பதே நல்லது’ என்பதே இந்த வருடத்தின் New year resolution!

தமிழர்களைக் கடவுள் காப்பாத்துவர் என்பதைச் சொன்ன தலைவர் செல்வநாயகம் அந்தக் கடவுள் யாரென்பதைச் சொல்லாமல் சென்றுவிட்டதை மன்னிக்கவே முடியாது!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!