Science & TechnologyWorld

இனவாதத்தில் திளைக்கும் ரெஸ்லா

கறுப்பினப் பணியாளர்கள் மீது அளவற்ற இனத் துவேஷம்

மின்வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனமான ரெஸ்லாவில் பணியாற்றும் கறுப்பின மக்கள் இனரீதியாக மிக மோசமாக ந்டத்தப்பட்டு வருகிறார்கள் என மனித உரிமை அமைப்புகள் பல மிக நீண்டகாலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் பலர் ரெஸ்லா நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் முறையீடுகளைச் செய்துள்ளார்கள்.

கலிபோர்ணியா மாநிலத்தில் சமீபத்தில் இப்படியான வழக்கொன்றில் பணியாளருக்குச் சார்பாக நீதிமன்றம் $137 மில்லியன்கள் நட்ட ஈட்டை வழங்கும்படி ரெஸ்லா நிறுவனத்துக்கு கட்டளையிட்டிருந்தது. ஆனாலும் ரெஸ்லா நிறுவனம் மேற்கொண்ட மேன்முறையீட்டை விசாரித்த கலிபோர்ணிய மாவட்ட நீபதிவில்லியம் ஓறிக் என்பவர் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதம் நீதி பரிபாலன வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டதெனக் கூறி அதை $15 மில்லியன்களாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

ரெஸ்லா நிறுவனத்தில் இனவாதம்

ரெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் வெள்ளையரல்லாத பணியாளர்கள் அவதூறு, மிரட்டல், பாரபட்சம் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தும், நிறுவனம் அவை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை என இப் பணியாளர்கள் நீண்ட காலமாக முறையிட்டு வருகின்றனர். இதனால் சிலர் தமது முறையீடுகளை நீதிமன்றங்கள் வரை எடுத்துச் செல்கிறார்கள்.

Tesla's Fremont factory
Photo: Ben Margot / AP

கலிபோர்ணியாவில் இருக்கும் ரெஸ்லா நிறுவனத்தின் தலைமைத் தொழிற்சாலையில் இம் மனித உரிமை மீறல்கள் கட்டுப்பாடற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலைக்கு வரும் வெள்ளையரல்லாத பணியாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன், வெள்ளையர் செய்ய விரும்பாத கடுமையான பணிகளே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேற்பார்வையாளராகப் பணிபுரியும் வெள்ளையர்கள் கறுப்பினப் பணியாளர்களை மிகவும் கேவலமான முறையில் நடத்துகிறார்கள் எனப் பலரும் முறையிட்டுள்ளனர். பணியாளர் கூடும் பொது இடங்களில் சுவர்களில் இனத்துவேஷ வார்த்தைகள் பகிரங்கமாகப் பொறிக்கப்படுவது வழக்கமெனவும் முகாமைத்துவம் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில் ஆர்வக் காட்டாமையால் இப்படியான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

பல பணியாளர்களின் கருத்துப்படி பலநூறு வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து கறுப்பின அடிமைகளைக் கொண்டுவந்த கப்பல்களிலும் மற்றும் அவர்கள் பணியாற்றிய தோட்டங்களையும் போலவே ரெஸ்லா நிறுவனமும் இருக்கின்றது எனக் கூறப்படுகிறது. அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ‘அடிமைக் கப்பல்’ என அழைக்கப்படுவதும் அப் பணியாளர்களின் மேற்பார்வையாளர்கள் ‘சவுக்கைப் பாவி’ (crack the whip) என்பது போன்ற பதங்களைப் பாவிப்பதும் அமெரிக்காவின் அடிமை வியாபாரக் காலங்களை நினைவுபடுத்துகின்றது என மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இனத்துவேசக் குற்றச்சாட்டுகள் ரெஸ்லா நிறுவனத்துக்குப் புதியயனவல்ல. கடந்த சில வருடங்களில் பலவகையான துவேசக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் பதியப்பட்டுள்ளன. ஆனாலும் நிறுவனத்தின்மீது அவப் பெயர் வரக்கூடாது என்பதற்காக தனிப்பட்டவர்களுக்கு (influencers) சன்மானம் கொடுத்து அவர்கள் மூலம் நிறுவனத்தைப் பற்றிப் புகழ்பாடி வலைத்தளங்களில் எழுதப்பட்டு வருகிறது. இதே போன்று ரெஸ்லா நிறுவனத்தின் வாகனங்கள் சில பல குறைபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அவ்வாகனங்களின் செயற்திறனைப் பற்றிப் புகழ்ந்து எழுதுபவர்களுக்குப் பலவகையான சன்மானங்களையும் நிறுவனம் கொடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு.

கலிபோர்ணியா, சான் ஃபிரான்ஸிஸ்கோவிலுள்ள ஃப்றீமொண்ட் தொழிற்சாலையில் மட்டும் இப்படியான பெருந்தொகையான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவையெல்லாம் அரசாங்கத்தினால் நிறுவனத்தின்மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள் என நிறுவனத்ம் தனது வலைத்தளங்களின் மூலம் பரப்புரை செய்கிறது. ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை நிறுவனத்தின் அதிபர் இலான் மஸ்க் அடிக்கடி பாவிப்பதன் மூலம் பிரபல ஊடகங்களை அவர் புறக்கணித்து வருகிறார். இதனால் அவரது நிருவனத்தைப் பற்றிய விரும்பத்தகாத செய்திகள் பொதுமக்களைச் சென்றடைவதில்லை.

ஃபிறீமொண்ட் தொழிற்சாலையில் மட்டும் நாளொன்றுக்கு ஒரு வர் வாயிலிருந்து மட்டும் 50 முதல் 100 இகழ் வார்த்தகளைக் கெட்க முடியுமென ஒரு கறுப்பினத் தொழிலாளர் கூறுகிறார். “N***r”, “hood rats’ போன்ற இகழும் வார்த்தைகள் அடிக்கடி பாவிக்கப்படுகின்றன. பணியாளர்கள் கூடும் பொது இடங்களில் சுவஸ்திகா, KKK, N-word ஆகியன சுவர்களில் எழுதப்படுவது வழக்கம். கறுப்பினப் பணியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன எனவும் அவை ‘ the dark side’ என அழைக்கபடுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் உண்டு.

நிறுவனத்தில் கறுப்பினப் பணியாளர் 10% மட்டுமே

ரெஸ்லா நிறுவனத்தினால் டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அடிநிலைப் பணியாளர்களில் 10% மட்டுமே கறுப்பின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதுநிலைப் பணியாளர்களில் 4% மட்டுமே உள்ளார்கள். ஹிஸ்பானிக் அல்லது இலத்தீனோ எனத் தம்மை அடையாளப்படுத்துபவர்கள் 22%. முதுநிலைப் பணிகளில் இவர்களும் 4% மட்டுமே உள்ளனர். ரெஸ்லா நிறுவனத்தில் மொத்தம் 30,000 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அதில் ஃப்றீமொண்ட் தொழிற்சாலையில் மட்டும் 10,000 பேர் பணிபுரிகிறார்கள்.

$137 மில்லியன் அபராதம்

அக்டோபர் 2021 இல் ஃப்றீமொண்ட் தொழிற்சாலையில் பனியாற்றிய ஓவென் டயஸ் என்பவர் மத்திய நீதிமன்றத்தில் பதிந்த வழக்கின் பிரகாரம் அவருக்கு $137 மில்லியன்களை நட்ட ஈடாக வழங்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2015-2016 காலப்பகுதியில் அங்கு பணியாற்றிய டயஸ் தன்மீது காட்டப்பட்ட குரோதங்கள், பொழியப்பட்ட அவதூறுகள், விடுக்கப்பட்ட மிரட்டல்கள் போன்றவை மீது செய்யப்பட்ட முறையீடுகள் மீது நிறுவனம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும், கழிப்பறைச் சுவர்களில் சுவஸ்திகா சின்னம் வரையப்படுவது சாதாரணம் எனவும் தஹ்னது வழக்கின்போது கூறியிருந்தார். ஆனாலும் இத் தீர்ப்பின்மீது நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து அதை விசாரித்த கலிபோர்ணிய மாட்ட நீதிபதி இவ்வபராதத்தை $15 மில்லியன்களாகக் குறைத்து நேர்றுத் தீர்ப்பளித்திருக்கிறார்.

இதே வேளை கடந்த டிசம்பர் மாதத்தில் ரெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் ஆறு பெண் ஊழியர்கள் தம் மீது தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், துர்வார்த்தைப் பிரயோகங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டதெனக்கூறி நிறுவனத்துக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள். நவம்பரிலும் இன்னுமொரு பெண் பணியாளர் இதே போன்றதொரு வழக்கைப் பதிவு செய்துள்ளார். 2017இல் ஃப்றீமொண்ட் தொழிற்சலையில் பணிபுரிந்த மார்க்கஸ் வாண் என்பவர் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.