அறிவித்தல்கள்

இனப்போர் முடிவின் 16 ஆவது நினைவு தினம்

இலங்கையின் இனப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 16 ஆவது ஆண்டு நிறைவை அனுட்டித்துவரும் உலகம் வாழ் தமிழ்ர்களுடன் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து இந்நாளை நினைவு கொள்கிறது. இறுதி நாட்களில் மட்டும் சுமார் 40,000 தமிழ்க்குடிமக்களைப் பலிகொண்ட இப்போர் வரலாற்றில் மிக குரூரமானதும் மோசமானதுமென வர்ணிக்கப்படுமொன்று. இலங்கையில் கடந்த 70 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட ஒட்டு மொத்த உயிரிழப்பு, சொத்தழிப்பு, இடப்பெயர்வு என்று பார்க்கும்போது இது மிகச் சிறியதொரு பங்கு மட்டுமே. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இலங்கை அரசினால் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டுமுள்ளனர். இவ்வுயிரிழப்புகளும், சொத்தழிப்புக்களும் தனியே தமிழ்ச் சமூகத்தில் மட்டும் நடைபெற்றதல்ல என்பதை மனதில் கொள்வதோடு இவ்வினப்போரின் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகிய அனைத்து மக்களையும் உலகத் தமிழர் பேரவை இவ்விடத்தில் நினைவில் கொள்கிறது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்த பின்னருங்கூட போரினாற் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவோ அல்லது ஆயுதப் போராட்டத்திற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கோ இலங்கை அரசு இன்னமும் முடியாமலிருப்பது துயரம் தருவது.


போர் முடிந்து முதல் ஐந்து வருடங்களில், வெற்றிவாகை சூடிய அரசு அதிகாரக் குவிப்பில் ஆர்வம் காட்டியதே தவிர பேரழிவுக்குட்படுத்தப்பட்ட மக்களின் துன்பம் பற்றியோ அல்லது அவர்களது மனித உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் காட்டாமை மூலம் தமிழ்ச் சமூகத்தை மேலும் பலவீனப்படுத்தியிருந்தது. அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சியைப் பிடித்த ‘கூட்டாட்சி அரசு’ பாதிக்கப்பட்ட மக்களின் அச்சத்தை ஓரளவு குறைத்து, நிறுவன அதிகாரங்களில் சில முன்னேற்றங்களைக் கண்டது போன்றவை தவிர்த்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியமையால் அவ்வரசும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாட்சைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. கடைசி ஐந்து வருடங்களின் முதல் அரைப் பகுதியில், ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை சிங்களத் தேசிய அரசு சிறுபான்மை இனங்களை மேலும் ஒடுக்கியது. இக்காலத்தில், இதற்கு முந்திய அரசு பெற்றுத் தந்த ஒரு சிறு முன்னேற்றங்களையும் அது மீளப்பெற்றுக்கொண்டது என்பது வேறு விடயம். இரண்டாவது அரைப் பகுதியில் நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலைத் தீர்ப்பதில் மினக்கெட்டதால் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அது அக்கறை கொள்ளவில்லை.

இலங்கை இப்போது ஒரு புதிய கட்டத்துள் நுழைவது போல் தெரிகிறது. பொருளாதாரப் பிரச்சினையின்போது முன்னெழுந்த முற்போக்கு அரகலயா இயக்கமும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் தலைமையின் கீழ் அணிதிரண்ட தேசிய மக்கள் சக்தியும் நாடு புதிய பாதைக்குள் நுழையப்போகிறது என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்கு ஊட்டின. சட்டத்தையும் ஒழுங்கையும் மட்டுமே முன்னெடுத்து நல்லாட்சியை நிறுவுவது மட்டுமல்ல பல தசாப்தங்களாகப் புரையோடியிருக்கும் இனப்பிரச்சினைக்கும் அது ஒரு தீர்வைப் பெற்றுத்தருமென மக்கள் நம்பினார்கள். என்.பி.பி. யில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. கட்சி மீது நீண்ட காலமாக தமிழ் மக்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தும்கூட அனுர அரசின்மீது தமிழர்கள் நம்பிக்கை வைத்தார்கள். அனுர அரசு ஆறு மாதங்களைத் தாண்டியாகிவிட்டது ஆனால் அதன் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தளர ஆரம்பித்து விட்டது; ஏமாற்றம் பலம் பெறுகிறது. நீண்ட காலமாகச் சிறைகளில் உழலும் கைதிகளின் விடுதலையென்றாலென்ன, தனியார் காணிகள் விடுவிப்பென்றாலென்ன, பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கமென்றாலென்ன, சட்டவிரோதமாகத் தனியார் காணிகளைக் கபளீகரம் செய்துவரும் சிங்கள தேசிய வாதிகளை நிறுத்துவதில் தாமதம் காட்டுவதென்றாலென்ன எதிலுமே முன்னேற்றம் காண்பதாகவில்லை.

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் உண்மை கண்டறியப்படவில்லை என்பதோடு அவர்களுக்கான நீதியும் இதுவரை வழங்கப்படவில்லை; குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் இதுவரைக்கு பூச்சியமே முன்னேற்றம். ; உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்பதில் நம்பிக்கை இல்லாமற் போகும் நிலை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அரசின் திட்டங்களில் ஒன்றாக இப்போதைக்கு இல்லை. ஒரு புதிய அரசாங்கத்திடம் இதை உடனடியாக எதிர்பார்க்க முடியாதெனினும் இவ்வரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழர்களது சம்மதத்தை அரசு பெறுமென்பதிலும் நம்பிக்கை இல்லை. மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்பதிலோ அல்லது 13 ஆவது திருத்தம் அமுலாக்கப்படுமென்பதிலோ சவால்களே அதிகமாக உள்ளன.

சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முந்தைய அரசுகளைப் போலவே தான் இந்த அரசும், இதில் எந்தவித மாற்றமுமில்லை என்ற எண்ணம் தமிழ் மற்றும் சிற்பான்மை சமூகங்களிடையே வேகமாக ஊடுருவி வருகிறது. பல தசாப்தங்களாக நடைபெற்ற இனப்போரின் போது தமிழ் மக்களின் பெரும்பங்கு தியாகங்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்டதோடு அவர்கள் பட்ட, பட்டுவரும் துன்பங்கள் பற்றி இன்னமும் அதி பிரக்ஞையோடுதான் அவர்கள் உள்ளனர். தற்போதுள்ள அரசியல் சூழலில் அவர்களுக்கு முன்னாலுள்ள சந்தர்ப்பங்களையும் சவால்களையும் அவர்களும் அவர்களது தலைவர்களும் மிக நன்றாகவே கணித்துள்ளனர். தேவையேற்படின், சம்பந்தப்பட்டவர்களுடனும், இதர சமூகஙளுடனும், சர்வதேச சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றி சாதுரியமான தீர்வுகளை எட்டுவதற்கும் அவர்கள் தயாராகவுள்ளனர். எனவே தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார அபிலாட்சைகளைத் திருப்தி செய்யும் வகையில் நடைமுறைச் சாத்தியமாக்குவது அரசின் அவசரமான கடமை என்பதை இங்கு வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை முன்னெடுப்பான ‘இமாலயப் பிரகடனம்’ இவ்விடயத்தில் ஒரு முக்கியமான முயற்சி. இப்பிரகடனத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியில் உலகத் தமிழர் பேரவை தற்போது செயற்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து இலங்கை மக்களுக்குமான ஒரு நல்விடயத்தைப் பெற்றுக்கொள்ள சிவில் சமூகங்களைத் தயார்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பில் உலகத் தமிழர் பேரவை இம்முயற்சியை மேற்கொள்கிறது.

தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை நீதி மறுக்கப்பட்ட, உண்மையான அதிகாரப்பகிர்வு கிடைக்கப்பெறாத, பொருளாதார முன்னேற்றமில்லாத ஒரு இனமாக ஆக்கப்பட்டுவிடுவார்களோ என்ற கரிசனை உலகத்தமிழர் பேரவைக்கு இருக்கிறது. இப்படியான சவால்களை மனதில் கொண்டு நல்லிணக்கமும், சமாதானமும், செழிப்பும் கொண்ட நாடாக இலங்கையை மாற்றும் நோக்குடன் இலங்கையின் பங்குதாரர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் செயலாற்ற உலகத் தமிழர் பேரவை உறுதி பூண்டுள்ளது.