Sri Lanka

இனப்படுகொலை விவகாரம்: கனடிய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதி

கடந்த மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வில் “இனப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தமிழ்க் கனடியர்களின் அவலக்கதைகள் அவர்களின் மனித உரிமைகள், சமாதானம், ஜனநாயகம் போன்றவற்றை நிலைநாட்டவேண்டிய அவசியத்தை ஞாபகப்படுத்துகின்றன. இதனால் தான் மே 2022 இல் மே 18ம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக’ கனடிய பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது ” என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ பேசியிருந்தார். அது மட்டுமல்லாது போர்க் காலத்தில் திட்டமிடப்பட்ட வகையில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக கோதாபய மற்றும் மஹிந்த ராஜபக்சக்கள் மீது இந்த வருடம் ஜனவரி மாதம் கனடா தடைகளை விதித்திருந்தது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின்போது இலங்கை இராணுவத்தால் பாதுகாப்பு பிரதேசம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் இராணுவத்தின் உத்தரவின் பேரில் குழுமியிருந்த மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்து சுமார் 40,000 மக்களைக் கொன்றதற்கான சர்வதேசத்தால் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தும்கூட இலங்கை அரசு அப்படி எதுவும் நடைபெறவில்லை என மறுத்து வருகிறது. அது ஒரு ‘மனிதாபிமான நடவடிக்கை’ எனக் கூறிவரும் இலங்கை அரசு இந்நாளுக்கு அடுத்த தினமான மே 19 ஐ “வெற்றி நாள்” எனப் பிரகடனப்படுத்தியதுடன் அன்று இராணுவத்தினரை ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் “போர் வீரர்கள்” எனக் கெளரவப்படுத்தியும் வருகிறது.

கனடிய பிரதமரின் ‘இனப்படுகொலை’ அறிக்கையை ஆட்சேபிக்கும் வகையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி இலங்கைக்கான கனடிய தூதுவர் எரிக் வால்ஷிடம் விளக்கம் கேட்டிருந்ததுடன் “உள்ளூர் அரசியல் தேவைகளை முன்வைத்து விடுக்கப்பட்ட இவ்வறிக்கையில் விடுதலைப் புலிகளினால் 3 தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதப் போரின் விளைவுகளை ஆதாரங்களற்ற வகையில் ‘இனப்படுகொலை’ எனக் கூறியதை இலங்கை அரசு வெகுவாகக் கண்டிக்கிறது” எனவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கும் இலங்கைக்கான கனடிய தூதுவரகத்துக்குமிடையில் கடந்த சில வாரங்களாக கருத்துப்பரிமாறல்கள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் ‘இனப்படுகொலை’ தொடர்பான அறிக்கையைக் கனடிய அரசு மீளப்பெற்றுக்கொண்டது எனப் புரளியொன்றைச் சென்ற வாரம் கிளப்பிவிட்டிருந்தன. மீளப்பெற்ற விடயம் உண்மையா என்பதை உறுதிப்படுத்த கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகை ஜூன் 21 அன்று கனடிய தூதுவரகத்திடம் விசாரித்த போது “மே 18 2023 அன்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ “இனப்படுகொலை விடயத்தில் கனடா எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறோம் என ஒட்டாவாவிலும், ஒன்ராறியோவிலும் வைத்துக் கூறியதை நினைவுபடுத்துகிறோம்” என தூதுவரக அதிகாரி பதிலளித்திருந்ததாகத் தெரிவித்திருக்கிறது.

மே 2022 இல் கனடிய பாராளுமன்றம் மே 18 ம் திகதியை இனப்படுகொலை நாளாகப் பிரகடனப்படுத்தியபோது “இலங்கை இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்களின் உரிமைகள் சார்பாகக் கனடா தொடர்ந்தும் குரல்கொடுக்கும்” என பிரதமர் ட்றூடோ தெரிவித்திருந்தார்.