இந்று செஞ்சோலைப் படுகொலைகளின் 15 வது நினைவுதினம் – நினைவுகூர்தலைத் தடைசெய்தது இராணுவம்
இன்று, இலங்கை விமானப்படையால் வல்லிபுன செஞ்சோலை பாடசாலையில் 53 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் நிறைவுபெறும் நாள்.
ஆகஸ்ட் 14, 2006 அன்று, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான நான்கு ஜெட் விமானங்கள் செஞ்சோலை மீது 16 குண்டுகளைப் போட்டு, ஏற்கெனவே பெற்றோர்களை இழந்த 53 சிறுமிகளைப் படுகொலை செய்திருந்தன. இச் சிறுவர் இல்லத்துக்கான பூகோள இருப்புக் குறியீட்டை (GPS coordinates) ஏற்கெனவே ஐ.நா.வின குழந்தைகள் ஆணையம் (UNICEF) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இலங்கை விமானப்படைக்குத் தந்து இவ்விடத்தில் குண்டுகளைப் போடவேண்டாம் என எச்சரித்திருந்தன. ஆனாலும் யுத்த நியமங்களையோ, தர்மத்தையோ அனுஷ்டிக்காத இலங்கையின் பாதுகாப்பு படைகள் அதே இருப்புக் குறியீட்டை நோக்கிக் குண்டுகளை வீசி இக் குழந்தகளைப் படுகொலை செய்திருந்தன.
இச்செய்தி வெளிவந்ததும், குண்டு வீச்சு எதுவும் நடைபெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் அதை ஒத்துக்கொண்டு, அத் தாக்குதல் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது மேற்கொள்ளப்பட்டதெனவும் இதன் போது 50-60 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாமெனவும் தெரிவித்திருந்தது. “அங்கு என்ன நடைபெறுகிறது என்பதைக் கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் அவதானித்து வந்தோம்” என அரசின் அப்போதைய ஊடகப் பேச்சாளர் கெஹெலிய றம்புக்வெல கூறியிருந்தார்.
“அக்குழந்தைகள் பயங்கரவாதிகளானால் நாங்கள் என்ன செய்வது? எதிரியைக் கொல்லவென அவர்கள் ஆயுதங்களைத் தாங்கும்போது அவர்களது வயதுகளோ அல்லது பாலினமோ பற்றி எங்களுக்கு அக்கறையில்லை” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இவ்வறிக்கையை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும், ஐ.நா.குழந்தைகள் ஆணையமும் நிராகரித்ததுடன், “இக் குழந்தைகள் வன்முறைகளுக்கு இலக்கான அப்பாவிகள்” என குழந்தைகள் ஆணையத்தின் பணிப்பாளர் ஆன் வெனிமன் தெரிவித்திருந்தார். “இக் குழந்தைகள் விடுதலைப் புலிகளின் போராளிகள் என்பதற்கு எதுவித ஆதாரமும் எங்களால் காணமுடியவில்லை எனக் குழந்தைகள் ஆணையத்தின் கொழும்பு இணைப்பாளர் ஜோஆன் வான்கெர்பென் கூறியிருந்தார். அத்தோடு, “அங்கு விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபாடங்கள் எதையும் காண முடியவில்லை” எனப் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃப் ஹென்றிக்சனும் தெரிவித்திருந்தார்.
செஞ்சோலை இல்ல வளாகத்தில் 10 வெடிக்காத குண்டுகளும் கண்காணிப்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இத் தாகுதலிம்போது இறந்தவர்களில் பெரும்பாலானோரின் உடலகள் சேதமடைதிருந்தன. பலநூற்றுக்கணக்கன குழந்தைகள் காயமடைந்திருந்தன. பலர் எரி காயங்களுடன் காணப்பட்டனர்.
ஆச்சரியம் தரத் தக்க வகையில், சமாதான ஒப்பந்தத்தின் மூலகர்த்தாக்களான அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகியன இக் குண்டுவீச்சைக் கண்டித்து எதுவித அறிக்கையையும் வெளியிடவில்லை. சுவிஸ் அரசாங்கம் “இத் தாக்குதல் மோசமான ஒன்று” என வர்ணித்திருந்தது.
இத் தாக்குதல்கள் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் “இவ் விமானத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு. வேண்டுமென்றே ஏவப்பட்ட கொடூரமான தாக்குதல்கள். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் விமானங்களால் குண்டுகள் வீசப்படுதல் தற்செயலானவை எனக் கூறமுடியாது. தாக்குதல்களின் தீவிரம், அதன் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கவேண்டுமென்ற நோக்கத்தில் செய்யப்பட்டவை என்பதையே காட்டுகிறது. ஆகக்கூடிய எண்ணிக்கையான குழந்தைகளைக் கொல்லவேண்டுமென்பதே அவர்களின் நோக்கம்.
எனவே, தமிழ் மக்களின் சார்பாக, நாம் சர்வதேச சமூகத்திற்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, விடுக்கும் கோரிக்கை , இலங்கையின் இந்த இனப்படுகொலைத் திட்டத்தை நிறுத்த எவ்வலவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” எநக் குறிப்பிடப்பட்டிருந்தது.
15 வருடங்கள் முடிவுற்றும், இந்றுவரை இக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர் எவரும் இநம் காணப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.(மூலம்:தமிழ் கார்டியன்)