Art & LiteratureIndiaNews & AnalysisTamil History

இந்நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியர் இளையராஜா கோவிட் தொற்றினால் மரணம்

திராவிடப் பண்பாடுகளைத் தூரிகை மூலம் உலகுக்கு எடுத்துச் சென்றவர்

இந்நூற்றாண்டின் தலை சிறந்த ஓவியரெனக் கூறக்கூடிய, தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஓவியர் இளையராஜா சுவாமிநாதன், தனது 43 வது வயதில், கோவிட் தொற்றினால், ஜூன் 7 அன்று, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் மரணமானார்.

பல மாநில, தேசிய விருதுகளைப் பெற்ற ஓவியர் இளையராஜா திராவிடப் பெண்மையின் நளினங்களைத் தத்ரூபமாக வடிப்பதில் அசாதாரண திறமைகளைக் கொண்டிருந்தார். அவரது அனைத்து ஓவியங்களும், ஆச்சரியம் தரும் வகையில், நிஜமான புகைப்படங்களையொத்து இருப்பது பார்வையாளரின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் ஒரு விடயமாகும்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்துக்கு அருகேயுள்ள செம்பியவரம்பல் கிராமத்தில், ஏப்ரல் 1979 இல் பிறந்த இளையராஜாவுக்கு ஐந்து சகோதரர்களும், ஐந்து சகோதரிகளும் உண்டு. இவரே கடைக்குட்டி. தான் வளர்ந்த பெரிய கூட்டுக் குடும்பத்திலிருந்தே தான் தனது அகத்தூண்டலைப் பெறுவதாக அவர் தனது பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். பல பெண்கள் சூழ்ந்த குடும்பத்தில் வளர்ந்தபடியால் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும் மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொள்ளளக்கூடியதாக இருந்தது என அவரது அண்ணி ஒருவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் உயிரோவியங்கள் திராவிடப் பண்பாடுகளை உலகறியச் செய்பவை

இளையராஜாவுக்கு ஓவியம் இயற்கையாகக் கிடைத்த வரம். சுயமாகவே தூரிகையைக் கையாளக் கற்றுக்கொண்டவர். அவரது தந்தையார் மரத்தில் வண்டிச் சில்லுகளைச் செதுக்கும்போது அவருக்குத் தேவையான அடிப்படை உருவங்களை எந்தவித உபகரணங்களின் உதவியுமின்றிக் கையினாலேயே வரைந்து கொடுப்பார். அதிலிருந்து மனிதர்களைப் பார்த்து வரையத் தொடங்கினார். அக் காலத்தில் தூரதர்ஷனில் பிரபலமாகவிருந்த அறிவிப்பாளர்கள் நிஜந்தன், சுந்தரராஜன் ஆகியோரது ஓவியங்களே அவர் வெளியாருக்கு வரைந்த முதல் ஓவியங்கள். பின்னர் கடவுள்களின் சிலைகளையும் வரையத் தொடங்கினார்.

அவரது இளமைக் காலத்திலேயே அவரிடமிருந்த ‘பார்த்து வரையும்’ திறமையை, கும்பகோணத்தில் அவர் படித்த உயர் பள்ளி வரைகலை ஆசிரியர்கள் இனம்கண்டிருந்தனர். கும்பகோணம், அரச கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் நுண் கலையில் இளமானிப் பட்டத்தையும், பின்னர் சென்னை அரச நுண்கலைக் கல்லூரியில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருந்தார்.

இளையராஜாவிம் ஓவியங்கள் அனைத்தும் நிழற்படங்களெனப் பலராலும் தவறாகக் பார்க்கப்பட்டதுண்டு. வழமையான ஓவியப் பாரம்பரியத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்ட இளையராஜா, சாதாரண மக்களிடம் அக் கலையைக் கொண்டு சென்றவர் எனக் கூறுகிறார், அவரது இளமைக் கால ஓவிய ஆசிரியரான சிவபாலன். இளையாராஜா கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தபோது அவரது பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவரது ஓவியங்கள் பலராலும் வியந்து பேசப்பட்டன.

திராவிடப் பெண்மையின் நளினங்களைத் தூரிகையால் தொட்டுக் காட்டியவர் ஓவியர் இளையராஜா

அவரது வியக்க வைக்கும் திறமை, லலித் கலா அக்கடெமியில் மேற்கல்விக்கான உதவியையும், பல சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதைவிட, இளையராஜா, நடிகர்-இயக்குனர் பார்த்திபனது திரைப்படத்தில் நடித்தும், உதவி இயக்குனராகப் பணியாற்றியுமுள்ளார். அவர் நடித்த ‘இவன்’ படம் 2002 இல் வெளியானது.

ஓவியங்கள் மூலம் இளையராஜா பிரபலமடைவதற்கு முன்னர், பல ஓவியங்கள், அவரது அனுமதியில்லாமலேயே பத்திரிகைகள், ஊடகங்களில் பிரசுரமாகியது பற்றி அவர் கவலை கொண்டிருந்தார் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டின் பிரபல சஞ்சிகையான ஆனந்த விகடன் அவரது ஓவியத்தைப் பிரசுரம் செய்ய அனுமதி கேட்டபோது “நீங்கள் தான் என்னிடம் அனுமதி கேட்கும் முதல் பதிப்பகம்” என ஓவியர் இளையராஜா கூறியிருந்ததாக ‘விகடன்’ செய்தி வெளியிட்டிருந்தது. இதன் பின்னர் இளையராஜாவின் ஓவியங்கள் ‘விகடன்’ பதிப்புகளில் அடிக்கடி பிரசுரமாயின.

நிழற் படமோவென மக்களை ஏமாற்றும் இளையராஜாவின் ஓவியம்

முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் ப.ரஞ்சித், நடிகர் சிம்பு உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள், திரையுலகப் பிரமுகர்கள் அவரது அகால இழப்பு குறித்து இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

மனைவியையும், இரு இளம் குழந்தைகளையும் இளையராஜா விட்டுச் சென்றிருக்கிறார். (தி நியூஸ் மினிட்)