HumourUS & Canadaமாயமான்

இந்த வருடம் ஒன்ராறியோ வாசிகளுக்குக் ‘கோடைக் கானல்’- உழவர் பஞ்சாங்கம் தரும் கோடை பலன்

மாயமான்

ஒன்ராறியோ வாசிகளே, இந்த வருடம் உங்களுக்கு நீண்ட, இடிமுழக்கங்களுடன் கூடிய, புழுக்கம் நிறைந்த, வேர்த்தோடும், மழை வரும் ஆனால் வராத, கோடையாக இருக்கப் போகிறது. கரு முகில் சூழ்ந்த வானம் காற்றில் ஈரப்பதனை வைத்திருக்குமாகையால் தோட்டங்களில் புற்கள் தாவரங்களைசெழித்துப் பெருக வாய்ப்புண்டு. எயர் கண்டிசன் இல்லாதவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டமாக இருக்கலாம். குளிரூட்டிகளைத் திருத்தும் தொழிலில் இருப்பவர்களுக்கு இவ்வருடம் மிகவும் இலாபகரமாகவிருக்கும். வேலையற்று அல்லது கொறோணாவின் சம்பாத்தியத்தில் வாழ்பவர்கள் குளீரூட்டி திருத்தும் தொழிலைக் கற்றுக்கொள்வது நல்லது. 24 மணி நேரமும் இயங்கப்போகும் குளிரூட்டிகளால் மின்சாரக் கட்டணம் அதிகமாக வாய்ப்புண்டு. ஐஸ் கிரீம் வியாபாரிகள் தேவையான பொருட்களைப் பதுக்குவது இலாபகரமானது. தோட்டம் செய்வதில் ஆர்வமுள்ளவர்களே, இந்த வருடம் அதியுச்ச வெப்பநிலை வழக்கம்போல ஜூலை, ஆகஸ்ட்டில் வராமல் ஆகஸ்ட் – செப்டம்பர் வாக்கில் பிந்தியே வரும். எனவே போதுமான அளவுக்கு கத்தரி மிளகாய்க் கன்றுகளை நட்டுக் கொள்ளுங்கள். குடும்பத் தலைவிகளே, உங்கள் வேம்பு, மல்லிகை மரங்களை இந்த வருடம் நீண்ட காலம் வெளியில் வைத்திருக்கலாம். குடும்பத் தலைவர்கள் பியர்ப் போத்தல்களை வாங்கி அடுக்கி வைப்பது சாலச் சிறந்தது. தோட்ட உபகரணங்கள் Costco வில் வாங்க முடியாமல் போகலாம் எனவே இப்போதே வாங்கிப் பதுக்குவது நல்லது.

மப்பும் மந்தாரமுமாக, வீட்டுக்குள் புழுக்கமும், வெளியில் வெருட்டும், மழையுடன் கூடாத இடியும் என அடிக்கடி ஃபிரிட்ஜைத் திறக்கும் வருடமாக இது இருக்கப் போகிறது என்கிறது ஒன்ராறியோவின் உழவர் பஞ்சாங்கம்.

வசந்த காலம் எப்போ வருமென எதிர்வைக் கூறும் வ்யேர்ட்டன் வில்லியைப் போல், உழவர் பஞ்சாங்கமும் கடந்த 200 வருடங்களாகக் கனடியர்களால் பாவிக்கப்பட்டுவருகிறது. வானொலியில் வரும் காலநிலை அறிவிப்பைப் போலல்லாது இது பொதுவாக நம்பிக்கையானதாகப் பார்க்கப்படும் ஒன்று. உழவர்கள் அருகி வந்தாலும் பஞ்சாங்கம் தொடர்கிறது.

வேர்த்தொழுகும் புழுக்கம் நிறைந்த இந்த கோடையில் அடிக்கடி வெட்டும் மின்னலும், வெருட்டும் இடியும் வந்தாலும் அதற்கேற்ற மழை பொழியாது என்கிறது பஞ்சாங்கம்.

சில நாட்கள் தொடர்ந்து நல்ல வெயில் எறிக்கும் சிலநாட்கள் தொடர்ந்து மூட்டமும் இடியுமாகவிருக்கும். ஆனால் நீண்ட கோடையாகவும் போதுமான சூரிய வெளிச்சத்துடன் கூடியதுமாக இது இருக்கும். நல்ல கவர்ச்சியான உடைகளை வாங்கி வைத்திருப்பவர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை. படம் காட்டுவதற்கு இக் கோடை போதுமான அவகாசத்தைத் தருகிறது.

றியல் எஸ்டேட் காரருக்கு இது சிறப்பான கோடையாகவிருக்கும். சந்திகளெங்கும் open house சைன்கள் நிறையக் காணப்படும். தெருச் சந்திகளில் மாம்பழ வான்களின் தொகை அதிகரிக்கும்.

றியல் எஸ்டேட் லைசென்ஸ் எடுக்காமல் நல்ல ஸ்போர்ட்ஸ் கார்களில் காலத்தைக் கழிக்க விரும்பும் இளையோர்களுக்கு இக் கோடையில் அவதானம் தேவை. கால்களைக் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு வைத்திருங்கள். அதிகம் அமுக்கவேணும் போல உந்தும். கவனம்.

இத்தனையும் சரிவரவேண்டுமென்றால் கொறோணேஸ்வரி கண் திறக்க வேண்டும். அவர் நான்காவது கட்டப் போருக்குத் தாயாராகுவதா இல்லையா என்பது உங்களில் தான் தங்கியிருக்கிறது.

அதுவரை, என்ஞாய் எஞ்summer!