இந்த அரசாங்கத்தின் கீழ் சூழல் நாசமாக்கப்பட்டதுபோல் வேறெப்போதும் நாம் கண்டதில்லை – ஒமால்பே சோபித தேரர்
“இந்த அரசாங்கத்தின் கீழ் சூழல் நாசமாக்கப்படதைபோல் நாம் வேறெப்போதும் கண்டதில்லை. இதை நாம் அடக்க முடியாத துயரத்துடன் கூறுகிறோம்” என ஒமால்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
“நாட்டைப் பாதுகாப்பதற்கென 20 வது திருத்தம் இந்த ஜனாதிபதியிடம் அதிகாரங்களை அள்ளிக் குவித்திருக்கிறது. சூழலையும் அதை நம்பியிருக்கும் சீவராசிகளையும் பாதுகாப்பது ஒரு பொறுப்பான தலைவரின் கடமை. சட்ட ரீதியான பொறுப்பும் அவருக்கு உண்டு. எனவே, காடழிப்பு, சூழல் நாசமாக்கல் மற்றும் ஒழுங்கீனம் ஆகியவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ஜனாதிபதி உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேரர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (18), மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது தேரர் இதைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசு பதவிக்கு வந்ததிலிருந்து, இலங்கையில் காடழிப்பு மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர்கள் அழிக்கப்பட்டுவிட்டதுடன் மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அழிப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளன. 2001 இல் அப்போதய ஐ.தே.க. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட சுற்றுநிருபம் 05/2001 காடழிப்பு மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கம், காடுகளைப் பல்தேசிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்காக, அச்சுற்றுநிருபத்தை மீளப்பெற முயற்சி செய்து வருகிறது.
“சூழலைப் பாதுகாப்போம் எனச் சூளுரைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை வெளிநாட்டுக்காரர்களுக்கும், தமது சகபாடிகளுக்கும் விற்று வருகிறது” என சூழல் செயற்பாட்டு அமைப்பான ‘சூழலின் குரல்’ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
1920 களில் இலங்கையின் தரைபிரதேசத்தில் 49% காடாக இருந்தது. 2017 இல் இது 29.7% த்திற்குக் குறைந்து 2019 இல் 16.5% மாகக் குறைந்திருக்கிறது. 1990 – 2000 காலப்பகுதியில் மட்டும் 26,800 ஹெக்டெயர் பரப்பளவு காடு அழிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய அரசாங்கத்திலுள்ள உயர் மட்ட அரசியல்வாதிகள் இக்காடழிப்பின் பின்னாலுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.