US & Canada

‘இந்துக்கள் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும்’ – நீதிக்கான சீக்கியர் அமைப்பு

“காளிஸ்தான் பிரிவினை இயக்கத் தலைவர் ஹார்டீப் சிங் நிஜார் கொலையை கனடாவிலுள்ள இந்து இந்தியர்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்கள் வன்முறையை ஊக்குவிக்கிறார்கள் எனவே அவர்கள் கனடாவிலிருந்து வெளியேற வேண்டும்” என நீதிக்கான சீக்கியர் (Sikhs For Justice (SFJ)) என்ற அமைப்பின் சட்டவல்லுனர் காணொளி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். காளிஸ்தான் பிரிவினை இயக்கத்திற்கு ஆதரவாக இயங்கும் நீதிக்கான சீக்கியர் அமைப்பு 2019 இல் இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

“இந்திய இந்துக்களே கனடாவை விட்டு வெளியேறுங்கள்; இந்தியாவுக்குப் போய்விடுங்கள். நீங்கள் பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு ஆதரவானவர்கள். காளிஸ்தான் இயக்கத்தினால் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முடியாதுள்ளது” என நீதிக்கான சீக்கியர் அமைப்பின் சட்ட வல்லுனர் குர்பத்வாந்த் பண்ணுன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயங்கரவாதிகள் பட்டியலில் பண்ணுனும் பெயரும் அடங்குகிறது.

கனடாவிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை அலங்கோலப்படுத்தியது மற்றும் இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டியதன் பின்னணியில் காளிஸ்தான் ஆதரவாளர்கள் இருக்கலாம் என இந்தியா சந்தேகப்படுகிறது. நிஜார் கொலையின் பின்னால் இந்திய அரசு இருக்கிறது என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ கூறியமை இப்படியான நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் என ‘ஒற்றுமைக்கான கனடிய இந்துக்கள்’ என்ற அமைப்பின் பேச்சாளர் விஜே ஜெய்ன் தெரிவித்துள்ளார். கனடிய அமைச்சரும் இந்திய வம்சாவளி இந்துவுமான அனித்தா ஆனந்த் அமைதி வேண்டி சமூக ஊடகமூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையைக் கொண்டாடும் ஊர்வலமொன்று பிறம்டன் நகரில் நடைபெற்றமை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “கனடா ஒரு மிகவும் பன்முகத்தன்மையான பேச்சுச் சுதந்திரத்தைக் கொண்ட நாடு. ஆனால் வன்முறையும் தீவிரவாதமும் அவை எநத வகைகளில் வந்தாலும் அவற்றை ஒழிக்க நாம் பின்னிற்கப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

காளிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவான இந்தியாவினால் தடை செய்யப்பட்ட 21 அமைப்புக்கள் கனடாவில் இயங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. (Image Credit: AP)