இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஷ்வர்த்தன் யாழ். சென்றார்
யாழ் கலாச்சார மையத்தையும் பார்வையிட்டார்
இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பை அடுத்து இலஙகைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ வரவொன்றை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஷ்வர்த்தன் ஷ்றிங்க்லா நேற்று (03) திருகோணமலை எண்ணைத் தாங்கிப் பண்ணைக் கட்டமைப்பைப் பார்வையிட்டார்.

லங்கா இந்தியன் எண்ணை நிறுவனம் (Lanka Indian Oil Company (LIOC)) என்பது இந்தியாவின் இந்திய எண்ணை நிறுவனத்தின் ஒரு கிளை ஸ்தாபனமாகும். 850 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இப்பண்ணையில் 99 எண்ணைத் தாங்கிகள் உள்ளன. ஒவ்வொரு தாங்கியும் 12,100 மெட்றிக் தொன்கள் எண்ணையைத் தன்னகத்தே கொள்ளக்கூடியது. இவற்றில் 15 தாங்கிகள் மட்டுமே தற்போது செயற்பாட்டில் உள்ளன.
லங்கா இந்தியஎண்ணை நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘Servo Pride ALT 15W- 40′ ரக எண்ணையைத் தயாரிக்கும் செயற்பாட்டை ஹார்ஷ்வர்த்தன் தனவருகையின்போது ஆரம்பித்து வைத்தார். பெருந்தெருக்களில், உயர்ந்த வெப்பநிலையில் நீண்டநேரம் ஓடும் டீசல் பாரவண்டிகளின் பாவனைகென விசேடமாகத் தயாரிக்கப்படுகிறது இந்த எண்ணை ரகம்.
இதைத் தவிர, ஹர்ஷ்வர்த்தன் தன் வருகையின்போது கண்டி தலதா மாளிகை மற்றும் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் அனுசரணையுடன் கட்டி முடிக்கப்பட்ட யாழ். கலாச்சார மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
அதே வேளை வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளை ஹர்ஷ்வர்த்தன் சந்திக்கவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருந்தனவாகினும், இந்திய தூதரக ருவீட் செய்தியில் அதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை. இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் தலையீடுகள் குறித்து இந்தியா கர்சனை கொண்டுள்ளதாகவும் அது தொடர்பாகவே ஹர்ஷ்வர்த்தனின் வருகை அமைந்திருந்ததெனவும் வேறு செய்திகள் வெளிவந்திருந்தன.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரையும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தன் வருகையின்போது சந்திக்கவுள்ளதாகவும் தூதரக் அறிக்கை தெரிவிக்கிறது.