இந்திய விமானப்படை உலங்கு வானூர்தி விபத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி, மனைவி உட்படப் 11 பேர் மரணம்
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியொன்று நேற்று (புதன்) விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த தலைமைப் பாதுகாப்பு அதிகாரி (Chief of Defense Staff), ஜெனெரல் பிபின் ராவாட், அவரது மனைவி மதுலிகா உட்படப் பதினொரு பேர் மரணமாகியுள்ளனர். Mi-17V5 ரக ரஷ்ய தயாரிப்பான இவ்வுலங்கு வானூர்தி தமிழ்நாடு கூனூர் பகுதியில் பிற்பகல் 12:20 மணிக்கு வீழ்ந்து நொருங்கியுள்ளது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரிலுள்ள சூளூர் விமானப்படைத் தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கிப் புறப்பட்ட இவ் விமானத்தில் ஜெனெரல் ரவாட், மனைவி மதூலிகா ஆகியோருடன் மேலும் 12 பேர் பயணமாகியிருந்தார்கள். நஞ்சப்பன் சத்திரம் பகுதியிலுள்ள காட்டேரி பூங்கா மலைச்சரிவில் இவ்வானூர்தி விழுந்து நொருங்கியிருக்கிறதெனக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் வெலிங்டன் இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ரவாட் தம்பதிகளுடன், பிரிகேடியர் லிடெர், லெப்டினண்ட் கேணல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் கேற்ஸ்வாக் சிங், நாய்க் ஜிற்றெண்டர் சிங், நாயக் விவேக் குமார்,நாயக் பி.சாய் ரெஜா, ஹவால்டர் சட்பால் மற்றும் விமான ஓட்டிகள் இவ்விமானத்தில் பயணம் செய்திருந்தார்கள்.
இவ் விபத்து பற்றி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களுக்கு விரைவில் உரையாற்றவுள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து நடந்த இடத்துக்கு விரைவில் செல்லவுள்ளதாகவும் அறியப்படுகிறது.