World

இந்திய பூர்வீகத்தைக் கொண்ட டாக்டர் சாமிர் ஷா பி.பி.சி. தலைவராக நியமனமாகிறார்

ஒளரங்கபாத். இந்தியாவில் பிறந்து 1960 ஆம் ஆண்டி இங்கிலாந்து சென்ற டாக்டர் சாமிர் ஷா பிரித்தானியாவின் பிரபல ஒலி, ஒளி ஊடகமான பி.பி.சி. நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சித் தயாரிப்பு மற்றும் ஊடக விடயங்களில் சுமார் நாற்பது ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டவர் அவர்.

71 வயதுடைய டாக்டர் ஷா 2019 இல் எலிசபெத் மகாராணியால் CBE (Commander of the Most Excellent Order of the British Empire) பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர். 2007-2010 வரை பி.பி.சி. யின் நிகழ்கால நிலவரம் தொடர்பான நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு.

முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடன் வைத்திருந்த சர்ச்சைக்குரிய தொடர்பாடல் காரணாமாக பி.பி.சி. யின் தலைவர் றிச்சார்ட் ஷார்ப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாக இருந்துவந்தது. ஷா பதவி ஏற்பதற்கு முன் பாராளுமன்ற ஊடக கலாச்சார மற்றும் விளையாட்டு தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட பிறகே அவர் பதவியை ஏற்பார் எனக் கூறப்படுகிறது.

யூனிபெர் என்ற பெயரில் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமொன்றை ஆரம்பித்து அதன் முதன்மை நிர்வாகியாக அவர் இருந்து வருகிறார். ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற அவர் 2021 இல் அரசாங்கத்துடன் இணைந்து 2021 இல் ‘இனமும் இனவேறுபாடுகளும்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

பி.பி.சி. யின் தலைவராக இருப்பவர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதற்காக அவருக்கு வருடமொன்றுக்கு 160,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படுகிறது. பி.பி.சி. யின் தலைவராக ஒரு ஊடகவியலாளர் நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.