இந்திய பயணம்: அனுர அரசைச் சிக்க வைக்க சீனா முயல்கிறதா?
ஜீவன் பிரசாத்

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்கழிக்கப் போவதில்லை என சொல்லித் திரும்பியவுடன் அனுராவை சிக்க வைக்க முயற்சிக்கும் சீனா
நேற்று முன்தினம் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வினை சந்தித்த சீனக் குழு நேற்று, ஜனாதிபதி அனுரவை சந்தித்தது. அவர்கள் பல விடயங்கள் குறித்து பேசினார்கள்.
ஆனால் இந்தியா விரும்பாத ஒரே ஒரு விடயம் சீனாவின் உளவுத் துறை , இலங்கைக்குள் இருந்து இந்தியாவை நோட்டம் விடுவதேயாகும். அதுதான் கடந்த கால அரசுகளுக்கு இந்தியா பின்னணியில் இருந்து வைத்த ஆப்பு. கடந்த கால அரசியல் கட்சிகள் தோல்வி அடைய, இந்தியாவின் உளவுத்துறை பின்னணியில் கடுமையாக செயல்பட்டது.
மகிந்தவின் தோல்விக்கு மட்டுமல்ல கோட்டாவின் ஆட்சிக்கலைப்புக்கு பின்னால், அமெரிக்காவை விட இந்தியாவும் பின்னணியில் இருந்தது. அதற்குக் காரணம் அவர்கள் சீன சார்பு ஆதரவாளர்களாக இருந்தமை தான். ரணில் கூட அமெரிக்க ஆதரவாளராக இருந்த போதிலும், ரணில் செய்த ஒரு செயல், நல்லாட்சி காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு முழுமையாக தாரை வார்த்து கொடுத்ததே ஆகும். இதன் பிறகு ரணில் மேல் இந்தியாவுக்கு இருந்த நம்பிக்கை இல்லாமல் போனது. அதனால் ரணிலை தொடர்ந்து பதவியில் வைத்திருக்க இந்திய அரசு விரும்பவில்லை.
அதை சுதாகரித்துக் கொண்ட ரணில் கடைசி காலத்தில், இந்தியாவின் பக்கம் திரும்பினாலும் 100% ரணிலை நம்ப இந்தியா தயாராக இருக்கவில்லை.
கடந்த தேர்தல் காலத்தில் இந்திய தூதரகங்கள், சஜித்தின் வருகையே எதிர்பார்த்தன. அதற்கான ஆதரவையும் இந்தியாவின் தூதரகங்கள் வழங்கின. ஆனால் இந்தியாவின் புலனாய்வு பிரிவான ரோ, இலங்கையின் அடுத்த தலைவர் யார் என்பதை தெரிந்து, அனுரவுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியது. அத்தோடு அனுரவை தேர்தலுக்கு முன்னரே, இந்தியாவுக்கு அழைத்து பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தியது. அதாவது ரோவின் உளவுத்துறை அனுர தலைமையிலான கட்சி தான் வெல்லும் என தெரிந்திருந்தது.
இலங்கை அரசுடன் இந்தியாவின் நெருக்கம், அமெரிக்காவுக்கும் ஓரளவு விருப்பமற்ற செயலாகவே உள்ளது. அமெரிக்கா, எப்போதுமே இலங்கை அரசுகள், தமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என ஜே ஆர் காலம் தொட்டு கடும் முடிவில் இருந்து வந்தது. இதனால்தான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான, ஒரு பூசல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஜே ஆர் எப்போதுமே அமெரிக்க ஆதரவாளராகவும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சீன ஆதரவாளராகவும் இருந்தார்கள். ஆனால் ஸ்ரீமாவோவுக்கு, இந்திராவின் நட்பும் இருந்தது. அதற்கு காரணம் இந்திராவின் ஆரம்ப காதலர், ஸ்ரீமாவின் நெருக்கமான ஒருவராக இருந்தமை தான்.
இந்திய படைகள் இலங்கை வந்தது போலவே, ரோகண விஜயவீரவின் சித்தாந்தங்கள் சீன கம்யூனிஸ சித்தாந்தங்களாக இருந்தமையால், ஜேவிபி இனர் இந்தியாவை வெறுப்பது ஒரு அங்கமாக இருந்தது.
ஆனால் பூகோள ரீதியாக பார்த்தால், அருகாமையில் உள்ள ஒரு நாடு ஆபத்துக்கு உதவ தேவை என்பதை, இன்றைய ஜேவிபி உறுதியாக நம்புகிறது என நினைக்கத் தோன்றுகிறது. இங்கே ஜேவிபினருக்கும், என் பி பி இனருக்கும் இடையே ஒரு சிறியதொரு பனிப்போர் நடப்பதாகவே தெரிய வருகிறது. ஆனாலும் ஜியோ பாலிடிக்ஸ் நிலைமையின்படி இந்தியாவை எதிர்த்துக்கொண்டு இலங்கை, ஒருபோதும் தலை தூக்க முடியாது என்பதை அனேகர் அறிந்து வைத்துள்ளனர்.
இந்தியா அருகாமையில் உள்ள நாடு மட்டுமல்ல, சர்வதேச தரத்தில் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் முக்கியமான விடையங்களில் கால் பதித்துள்ள ஒரு பலமான நாடு என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
அதாவது உலக நாடுகளில் தொழில்நுட்பங்கள், விஞ்ஞான ஆராய்ச்சி, அரசியல் ஆலோசனைகள், கணினித்துறை, இணைய துறை ஆகியவையை விட அநேக துறைகளில், இந்தியாவின் பங்கு உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு கை கொடுத்தே இருக்கின்றது.
யூதர்களின் பங்கு உலக நாடுகளில் எவ்வளவு தூரம் உள்ளதோ, அதேபோல இந்தியாவின் பங்கும் உலக நாடுகளில் தடம் பதித்துள்ளன.
இலங்கை, பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பாதுகாப்பு ரீதியாகவும் வீழ்ந்த போதெல்லாம், முதலில் ஓடி வந்து கை கொடுத்த நாடு இந்தியா என்பது, இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள், இந்தியாவை எதிர்த்துக்கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற பாடத்தை கடந்த கால அனுபவங்கள் ஊடாக அறிந்துள்ளார்கள்.
இந்தியா ஒருபோதும் இலங்கையை ஆக்கிரமிக்கப் போவதில்லை. ஆனால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு, இலங்கை இருக்க வேண்டும் என்பதில், கண்ணும் கருத்துமாக என்றென்றும் இருக்கும். அது தவறும் பட்சத்தில், இந்தியா எந்த முடிவையும் எடுக்கும். இதை நாம் மறக்கக்கூடாது.
அனுர இந்தியா சென்று, திரும்பி வருவதற்குள் சீனாவின் கம்யூனிச கட்சியின் முக்கிய குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்தது, சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல.
சீனா, இலங்கைக்குள் இருந்தவாறு, இந்தியாவை கண்காணிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதற்காகத்தான் சீனாவின் ஆய்வு கப்பல்கள், இலங்கைக்கு அடிக்கடி வந்து போயின. இதை அங்கீகரித்த அனைத்து அரசியல் தலைமைகளும், தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம், அதை விரும்பாத இந்தியாவின் பின்புல வேலை தான் என்பது அந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
அதனால் தான், கடைசி நேரத்தில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது, எந்த ஒரு நாட்டின் ஆய்வுக் கப்பல்களையும், இலங்கைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என ஒரு முடிவை எடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்தக் காலம் இந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி முடிவடைய உள்ளது. அதுவரை எந்த ஒரு நாட்டின் ஆராய்ச்சி கப்பல்களும், இலங்கைக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் அடுத்து அனுராவின் அரசு, என்ன செய்யப் போகிறது என்பதை டிசம்பர் 31 க்கு பிறகு தான் தெரியும். ரணில் கொண்டு வந்த முடிவை தொடர்வதா அல்லது விடுவதா என்பது அனுராவின் கையில் தான் உள்ளது.
இப்போது இலங்கைக்கு வந்துள்ள, சீனக் குழுவினர், கீழ்வரும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்கள்.
அதாவது பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள கடல்சார் ஆய்வு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார் என்பதுதான்.
இதை இலங்கையும், இந்தியாவும் எப்படி முகம் கொடுக்கப் போகிறது என்பது வெகு விரைவில் தெரியவரும். அதுவரை பொறுத்திருப்போம் ….
இக்கட்டுரை ஜீவன் பிரதாத்தின் முகநூலில் பிரசுரமானது. அனுமதியுடன் இங்கு மறுபிரசுரமாகிறது.
