இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் (IIT-M) தலைகுனிவு – பட்டினி போட்டு நாய்களைக் கொல்லும் பரிதாபம்!


உலகப் பிரபலம் பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் சென்லை வளாகத்தில் தெருநாய்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் நிகழ்வு அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

அக்டோபர் 22, வெள்ளியன்று இக்கல்லூரியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று நாய்கள் மீட்கப்பட்டபோது அவை அனைத்தும் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் பட்டினியால் வாடி எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தன. ஆர்.ஏ. புரத்திலுள்ள மிருக வைத்தியசாலையில் அவை பரிசோதிக்கப்பட்டபோது அவை சரும, குடல் வியாதிகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனவெனக் கூறப்படுகிறது. இம் மூன்று நாய்களும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன எனவும் இவற்றில் இரண்டின் நிலைமை 24 மணித்தியாலங்களின் பின்னரே உறுதிப்படுத்தப்பட முடியுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்றாவது நாயை சென்னையிலுள்ள பொதுப்பணி அமைப்பொன்று பொறுப்பேற்றுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் (சென்னை) தலைகுனிவு

அக்டோபர் 2020 முதல் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு தடுப்பூசிகள் ஏற்றல் மற்றும் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தேற்றல் ஆகிய பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைச் செய்வதெனத் திட்டமிட்டிருந்தது எனவும், ஆனால் காப்பாற்றப்பட்ட இந் நாய்களுக்கு அப்படியான மருந்துகள் எதுவும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் இந் நாய்களைப் பரிசோதித்த மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர் மீதான அச்சம் காரணமாக இந்நாய்கள் ஆரம்பத்தில் சாப்பிட மறுத்துவிட்டன எனவும், பின்னர் கைகளால் உணவூட்டியபோது அவை சிறிதளவு சாப்பிட்டன எனவும் வைத்தியசாலைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மூன்று நாய்களை விட, மேலும் 10 நாய்கள் IIT-M கட்டிடத்தில் ஒரு கூட்டுக்குள் விட்டுப் பூட்டப்பட்டிருந்தன எனவும், அப்படியிருந்தும், அவற்றின் வாய்கள் இறுகக் கட்டப்பட்டிருந்தன எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவை மனிதரைத் தாக்கும் என்பதால் வாய்கள் கட்டப்பட்டதாக IIT-M நிர்வாகம் தெரிவித்திருந்ததெனினும் இந்நாய்கள் எதுவும் மிகவும் பணிவானவையாக இருந்தனவென மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மிருகநலச் செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான அழுத்தம், ஊடகச் செய்திகள் காரணமாக தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் IIT-M வளாகத்திலுள்ள ‘நாய்ப் பூங்காவைப்’ பார்வையிட்டார் எனவும் அப்போது அங்கு 57 நாய்கள் இறந்த விடயம் பற்றி நிர்வாகம் ஒப்புக்கொண்டதுடன், 29 நாய்கள் தத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாய்கள் வளாகத்தில் விடுவிக்கப்பட்டதாகவும், 87 நாய்கள் தற்போது கூட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சருக்குக் கூறியதாகத் தெரியவருகிறது. அக்டோபர் 2020 இலிருந்து இதுவரை 185 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 15 அன்று, சென்னை மிருகநலச் செயற்பாட்டாளர் கே.பி. ஹரிஷ், நாய்களின் இறப்புக்குக் காரணமானவர்களெனக் குற்றஞ்சாட்டி, IIT-M கல்லூரிப் பதிவாளத் ஜேன் பிரசாத் மற்றும் நிர்வாகத்தின் மீது சென்னை ஆணையாளரிடம் வழக்குப் பதிந்துள்ளார்.

அதே வேளை 29 நாய்களைத் தத்துக் கொடுத்திருப்பதாக நிர்வாகம் கூறுவதை நம்ப முடியாமலுள்ளது, அத்தனை நாய்களைத் தத்துக் கொடுப்பது என்பது இலகுனான காரியமில்லை என ‘இந்தியக் கால்நடைகளுக்கான மக்கள்’ அமைப்பைச் சேர்ந்த அருண் பிரசன்னா எனபவர் தெரிவித்துள்ளார். அதே போல 14 நாய்களைத் தாம் வளாகத்தில் திறந்து விட்டது என்பதையும் தம்மால் நம்ப முடியவில்லை எனவும் சுமார் மூன்று மணித்தியால வளாகப் பரிசோதனையின்போது ஒரு நாயையேனும் தாம் காணவில்லை எனவும் பிரசன்னா தெரிவித்துள்ளார். இதந் காரணமாக தத்தெடுக்கப்பட்ட நாய்கள் பற்றி அறிக்கை ஒன்றை IIT-M நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியம் கட்டளையிட்டுள்ளார்.

இறந்ததாகக் கூறப்படும் 57 நாய்களின் உடல்களும் மரண பரிசோதனைகள் செய்யப்படாமலேயே புதைக்கப்பட்டுவிட்டன எனவும் அமைச்சரின் தலையீட்டால் ஒரே ஒரு நாய் மீது மட்டும் மரண பரிசோதனை செய்யப்பட்டது எனவும் பிரசன்னா மேலும் தெரிவித்தார்.

IIT-M வளாகத்தில் நாய்களைக் கூடுகளுக்குள் வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிசெய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு செப்டெம்பர் 17 அன்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. (தி நியூஸ்மினிட்)