India

இந்திய தேர்தல் 2024: மோடியின் தோல்வி

தேர்தல் என்றால் தமிழர்களுக்கு ஒரு பரபரப்புத்தான். மூவர்ணக் கொடிகளுடன் ‘வீட்டுக்கு நேரே போடு புள்ளடி’ என்று தெருக்கள் தோறும் திருவிழாக் கொண்டாடப் பழக்கப்பட்டவர்கள். இலங்கையில் வடக்கு கிழக்குக்கு அப்பால் நாம் அதிகம் கொண்டாடுவது இந்திய தேர்தலையே. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் எனவும் கொள்ளலாம்.

நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகிய 2024 ஆண்டு தேர்தலில் பாரதம் vs இந்தியா களமிறங்கியிருந்தது. இராமாயண, மகாபாரத இந்தியாவை மீண்டும் சிருஷ்டிக்கப்போவதாக உடுக்கடித்துவந்த சங்கிகளுக்கும் நவீன உலகில் மதிக்கப்படும் ஒரு நாடாக இந்தியாவை உருவாக்க முயற்சிக்கும் சாதாரண இந்தியர்களுக்கும் நடைபெற்ற இப்போட்டியில் ஆட்சி சங்கிகளிடம் போனாலும் மோடி இதில் நெத்தியடி வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். தேர்தலுக்கு சற்று முன்பாக அயோத்தியில் இஸ்லாமிய ஆலயம் இருந்த இடத்தில் இராமர் கோவிலைக் கட்டி வாக்குத் தேடிய மோடிக்கு அயோத்தியே புறந்தள்ளிவிட்டதென்றால் அது நெத்தியடி தானே.

மொத்தம் 593 தொகுதிகளில் 293 பா.ஜ.க. கூட்டணிக்கும், 232 காங்கிரஸ் கூட்டணிக்கும் 18 இதர கட்சிகளுக்கும் கிடைத்திருக்கின்றன. இவற்றில் மோடியின் தோல்விக்குக் காரணமானவையெனக் கூறப்படும் மூன்று மிகப்பெரிய மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம். மோடியின் சங்கிகள் எப்படி இந்து / முஸ்லிம் வெறுப்பைத் தமது அரசியலுக்குச் சாதகமாகப் பாவித்து வெற்றி பெற்றார்களோ அதே போல இந்த மூன்று மாநிலங்களிலும் சாதி / குல அரசியல் சங்கிகளை அடித்துத் துரத்திவிட்டது. இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் தினை விதைத்தவன் தினையத்தான் அறுத்தாகவேண்டும் என்பதை மோடிகளுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி நமக்கு நெருக்கமானவையும் விருப்புக்குரியவையுமானதாகையால் அவற்றைச் சற்று உற்று நோக்கலாம்.

இவ்விரு மாநில / பிரதேசங்களிலும் தமிழ்நாட்டில் 39, புதுச்சேரியில் 1 என மொத்தம் 40 தொகுதிகள் உண்டு. அவை அனைத்தும் இந்தியா (காங்கிரஸ்) கூட்டணிக்குப் போய்விட்டமை அண்ணாமலை, அமித் ஷா, மோடி, பா.ம.க. கோஷ்டிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொடுத்திருக்கிறது. அண்ணாவைத் தேவையில்லாமல் வம்புக்கிழுத்த அண்ணாமாலையால் பா.ஜ.க. பிராண்டிற்கே இனித் தமிழ்நாட்டில் இடமில்லாமல் செய்யப்பட்டுவிட்டது. தி.மு.க. தன்னுடைய பண, புஜ பலங்களால் தனது இருப்பை மட்டுமல்ல தனது நண்பர்களின் இருப்பையும் தக்கவைத்துக்கொண்டது எதிர்பார்க்கப்பட்டது தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வெற்றி நாம் தமிழர் கட்சிக்குத்தான். 2019 இல் 3.85 % வாக்குகளைப் பெற்ற சீமானின் கட்சி இந்தத் தடவை 8.2% வாக்குகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. 6 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 தொகுதிகளில் 1 இலட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் அக்கட்சிக்கு சீமானை விட்டால் குறிப்பிடக்கூடிய அதிரடிப் பேச்சாளர்கள் என்று எவருமில்லை. தி.மு.க. வைப் போல பண பலமோ, அ.இ.அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.க. போன்ற கட்சிகளைப் போல சாதிப் பலமோ இல்லாததோடு அரசாங்கங்களின் பழிவாங்கல் காரணமாகக் கட்சி சின்னம் பறிக்கப்பட்டும் இவ்வளவு சாதித்திருக்கிறதென்றால் அடுத்த தேர்தலில் அதற்கென்றொரு இடமிருக்குமென எதிர்பார்க்கலாம்.

இதில் கற்றுக்கொண்ட இன்னுமொரு விடயம், தமது சொந்த நலன்களுக்காக வேலி பாய்ந்த எடப்பாடி, சரத்குமார், ராமதாஸ் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கற்றுக்கொடுத்த பாடம்.

என்னவோ சட்டசபைத் தேர்தல் அளவுக்கு இதுவெல்லாம் உசுப்பேத்தாதுதான். பங்காளிகளின் துணையுடன் எவ்வளவு காலம் மோடிஜி ஆட்சி நடத்தப் போகிறாரோ தெரியவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டுக்குள் பாரதத்திற்கு இடமில்லை என்பதை மீண்டுமொருதடவை நிரூபித்தமைக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தடவை நன்றி சொல்லியாகவேண்டும். Cheers!