இந்திய தேசிய தினம்: தமிழ்நாட்டின் விடுதலை வீரர்களை உதாசீனம் செய்த மத்திய அரசு
தனியான ஊர்வலங்களுடன் கொண்டாடும் தமிழக அரசு
வ.உ.சிதம்பரம்பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மகாகவி பாரதியார் உட்பட, இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியிருந்த பல மாவீரர்களைப் புறந்தள்ளிவிட்டு டெல்ஹியில் மத்திய அரசினால் நடத்தப்படும் தேசியதினக் கொண்டாட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் தனியானதொரு கொண்டாட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்.
டெல்ஹியில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்குகொள்வதற்காக தமிழக அரசினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த அலங்கார ஊர்தியில் வ.உ.சி, , வேலு நாச்சியார், மருது பண்ண்டியர்கள் போன்றோரது உருவங்கள் நிறுவப்பட்டிருந்தன. ஆனால் மத்திய அரசு இவ்வூர்தி பங்குபற்றுவதை அனுமதிக்கவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரத்தியேக வேண்டுகோளையும் மத்திய அரசு நிராகரித்திருந்தது. இதனால் தமிழ் விடுதலை வீரர்களைக் கெளரவிக்கும் வகையில் நான்கு அலங்கார ஊர்திகளுடன், தமிழ்நாட்டில் தனியாக, நாளை (26) இக்கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.
‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு’ என்ற பதாகையின்கீழ் ஒழுங்குசெய்யப்பட்ட இப்பேரணியில் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்த்தில் பங்கெடுத்த வீரர்களது உருவச் சிலைகளைத் தாங்கிய நான்கு அலங்கார வண்டிகள் பங்குபற்றுகின்றன. வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்ரமணிய பாரதியார், ராணி வேலு நாச்சியார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள் ஆகியோரது உருவச்சிலைகள் இவ்வண்டிகளில் வைக்கப்பட்டுப் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளன.
1806 இல் நடைபெற்ற வேலூர் புரட்சியில் ஆரம்பித்து நாடு முழுவதும் பரவிய இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது எனவும், இவ்வூர்வலம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் எங்கும் செல்லுமெனவவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களால் மேற்கொள்ளப்படும் நாதஸ்வரம், தவில், வீணை ஆகியவற்றுடனான மங்கல இசையுடன், பரதநாட்டியம் முதலிய நடனங்களுடன் கூடிய வண்டி முன்னால் செல்ல அதற்கடுத்ததாக, ராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது இராணுவத் தளபதி குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன, புலித்தேவன் ஆகியோரையும்,1806 இல் வேலூரில் ஆரம்பித்த சிப்பாய்க் கலகத்தையும் ஞாபகப்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியும் , அடுத்ததாக சுப்ரமணிய பாரதி, வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரது சிலைகளைக் கொண்ட ஊர்தியும், மூன்றாவது ஊர்தியில், தந்தை பெரியார், ராஜகோபாலாச்சாரியார், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களது சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.
1780 முதல் 1790 வரை சிவகங்கையில் ஆட்சி புரிந்த ராணி வேலுநாச்சியார், கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக முதலி போர் தொடுத்த அரசியாவார். தற்கொலைப் போராளியைக் கொண்டு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆயுதக்கிடங்கொன்றை வெடித்துச் சிதறவைத்தவர் ராணி வேலுநாச்சியாராவார்.
தமிழ்நாடு வாகனப் பேரணியை இந்திய தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கவேண்டுமென நேற்று (ஜன் 25), வழக்கறிஞர் பி.பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். ஆனால் அவர் தனது விண்ணப்பத்துடன், ஊர்வலத்தில் பங்கு கொள்வது குறித்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பித்திருக்காத காரணத்தால் அவர்து கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. (தி நியூஸ் மினிட்)