இந்திய குடியுரிமையைப் பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளைக் கணக்கிடும் முயற்சியில் தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் அகதி முகாம்களிலும் வெளியிலும் வாழும் ஈழத் தமிழரது வாழ்நிலைகளைக் கண்டறிய தமிழ்நாடு அரசினால் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழ, இவர்களில் எத்தனை பேர் இந்தியக் குடியுரிமையையைப் பெறுவதற்கு விரும்புகிறார்கள் என்பதை முதலில் கணக்கிடும் முயற்சியில் ஈடுபடவிருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் கூடிய இந்தக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் முறையற்ற வாழ்நிலைகளைப் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என தமிழக மாநில முதல்வர் முன்னர் அளித்திருந்த வாக்குறுதிக்கமைய இவ்வாலோசனைக்குழு தற்போது தனது பணிகளை ஆரம்பித்திருக்கிறது. அதற்கமைய முதலில் இந்த ஆய்வு நடைபெறவிருக்கிறது.
ஜூலை 1, 2021 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 18,937 குடும்பங்களைச் சேர்ந்த 58,668 தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அதே வேளை, 13,553 குடும்பங்களைச் சேர்ந்த 34,123 தமிழர்கள், தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாலோசனைக்குழு ஈழத்தமிழர்களிடையே தனது கருத்துக்கணிப்புகளை எடுத்ததன் பின்னர் விரும்பியவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவதற்கு ஏற்ற வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 இல் மாற்றங்களைக் கொண்டுவருமபடி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்குமென ஆலோசனைக் குழு உறுப்பினரும் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீரசுவாமி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்களை மூன்று வகைகளாகப் பிரிக்க முடியுமெனவும் அவர்களை சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தினால் இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மற்றும் இந்திய மண்ணில் நாடற்ற ஈழத்தமிழர்களுக்குப் பிறந்தவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் வீரசுவாமி தெரிவித்துள்ளார்.
இவர்களில் எவர் எப்படியான பத்திரங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எப்படியான கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளமுடியுமென இந்திய உள்ளக அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.