இந்திய உளவு நிறுவன (RAW) தலைவருடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை

இந்திய உளவு நிறுவனமான றோவின் தலைவர் சமாந்த் குமார் கோல் அவர்கள் நவம்பர் 21 அன்று இலங்கையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்து உரையாடியதாகச் செய்திகள் வந்துள்ளன. இப் பேச்சுவார்த்தையின்போது எப்படியான விடயங்கள் பேசப்பட்டன எனக் கேட்கப்பட்டபோது “அது நாட்டின் பாதுகாப்பு நிர்வாகத்துக்கு மட்டுமே கூறபப்டவேண்டிய விடயம்” என ஜனாதிபதி குறிப்பிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இலங்கை மீது அதிகரித்து வரும் சீனாவின் தலையீடு தொடர்பாக அமெரிக்காவும் இந்தியாவும் மிகுந்த கரிசனை கொண்டிருப்பதாகவும் இந்து சமுத்திரப் பிரதேசத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது பற்றிப் பேச்சுவார்த்தை இருந்திருக்கலாமென ஊகங்கள் எழுந்துள்ளன. அத்தோடு சர்வதேச நிதியத்தின் $US 2.9 பில்லியன் கடனுதவி பெறும் பொருட்டு ஏற்கெனவே சீனா, இந்தியாவிடமிருந்து பெற்றுள்ள கடன்களை மீளொழுங்கு செய்ய இலங்கைக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்படுவது மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அழுத்தங்கள் கொடுப்பது எனப் பலவிடயங்களும் பேசப்பட்டிருக்கலாமெனவும் ஆனால் இந்து சமுத்திரப் பாதுகாப்பே பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்திருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து மூன்று வாரங்களாக நடைபெற்ற இச் சந்திப்பின்போது ஜனாதிபதியின் மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரி சாகல ரத்நாயக்கா மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உளவு மற்றும் இரகசிய விடயங்கள் தொடர்பில் வாராவாரம் நடைபெறும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாடுவது வழக்கம் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.