IndiaNews & AnalysisSri Lanka

இந்திய உயர் ஸ்தானிகர், த.தே.கூ. இன்று சந்திப்பு

அதிகாரப் பகிர்வு, வட-கிழக்கு அபிவிருத்தி பற்றிப் பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் இன்று, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இரா சம்பந்தன், மாவை சேநாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட இச் சந்திப்பின்போது, அதிகாரப் பகிர்வு, வடக்கு-கிழக்கு அபிவிருத்தி பற்றிப் பேசப்பட்டது.

கோவிட்டுக்குப் பின்னான அபிவிருத்தி, இந்திய வீடமைப்புத் திட்டம், புனர் வாழ்வு, கல்வி, சுகாதாரம், தொடர்பாடல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம், வடக்கு கிழக்கு உட்பட்ட, இலங்கையின் சகல இன மக்களும் சமத்துவத்தோடு வாழ இந்தியா தொடர்ந்தும் முயற்சிகளை எடுத்துவருமென இந்திய தரப்பில் வாக்குறுதியளிக்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து நாட்டிலுள்ள தற்போதைய நிலைமையையும், உருவாக்கப்படும் அரசியலமைப்பில் அதன் பங்கு பற்றியும் கூட்டமைப்பினர் ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தனர்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுற்படுத்துவதன் மூலம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வைப் பெற்றுத் தந்து, தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றின் மீதான அபிலாட்சைகளை நிறிவேற்றி, இலங்கையைப் பலமாக்குவதே இந்தியாவின் நோக்கம் என பாக்லே மேலும் தெரிவித்தார். (டெய்லி மிரர்)