இந்திய - இலங்கை மின்சார இணைப்பு -

இந்திய – இலங்கை மின்சார இணைப்பு

அக்டோபர் 27, 2019

அயலார் சமவாழ்வு உருவாக்கத்திற்கான மூலோபாயத் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு மேற்கம்பி இணைப்பின் மூலம் மின்சாரம் வழங்குதற்கான வழிகளை இந்திய அரசு ஆராய்ந்துவருவதாகத் தெரியவருகிறது. இதற்கு முன் கடலுக்குக் கீழால் மின்னிணைப்புகளை ஏற்படுத்துவது பற்றி ஆராயப்பட்டதெனினும் அதன் கட்டுக்கடங்காத செலவீனம் காரணமாக அத் திட்டம் கைவிடப்பட்டது.

மதுரை – அனுராதபுர மின்னிணைப்பு

நரேந்திர மோடியின், தென்னாசியாவை மையப்படுத்திய அயலார்-முதல் திட்டத்தின் பிரகாரம் இலங்கை போன்ற நாடுகளுடன் எல்லை கடந்த மின்வலுப் பரிமாற்றம் செய்வதற்கான ஆலோசனைகள் தற்போது இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்து சமுத்திர நாடுகளிலும் தென்னாசிய நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் பெருகிவருவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஒன்றாக இலங்கையுடனான மின்னிணைப்பு நோக்கப்படுகிறது.

‘ஒரு பட்டி, ஒரு வீதி’ (One Belt One Road) முயற்சியினூடாக, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் பாரிய ரயில்வேக்கள், துறைமுகங்கள், மின்னிணைப்புகள் உள்ளடங்கிய பாரிய உட்கட்டுமான நடவடிக்கைகளுக்காக பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்யச் சீனா முன்னெடுப்புகளைச் செய்துவருவதன் எதிரொலியாகவே இந்தியா இம் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்திய அரசின்கீழ் இயங்கும் ‘ இந்திய மின் விநியோக கூட்டுத்தாபனம்’ (Power Grid Corporation of India Ltd. – PGCIL), மதுரைக்கும் அனுராதபுரத்துக்குமிடையில், 30 கி.மீ. தூரம் கடலின் கீழான மின்னிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் 1,000 மெகா வாட் மின்சாரத்தை வழங்குவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்தது.

இருப்பினும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் அரசியல், பொருளாதார உறவை மேம்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்படும் இத் திட்டத்தின் நீண்டகால செயலாக்கம் பற்றி இலங்கை அரசு கேள்வி எழுப்பியிருந்தது. இம் முன்னெடுப்பு தொடர்பில் தமிழ்நாடு அரசும் தன் எதிர்ப்பை முன்னர் வெளிக்காட்டியிருந்தது.

இலங்கையின் அரச கூட்டுத்தாபனமாகிய ‘சிலோன் மின்சார சபை’ 35.8 கிகா வாட் ( 1 கிகா வாட் = 1000 மெகா வாட்) மின்சாரத்தை வழங்கக்கூடிய விநியோகக் கட்டமைப்பை ஏற்கெனவே கொண்டுள்ளது. அதே வேளை, இந்தியாவின் தற்போதய விநியோக கட்டமைப்பு 360.45 கி.வாட் கொள்ளளவையும், தேவையானால் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் 99,000 மெ.வாட் மின்வலுவை வழங்கக்கூடிய நிலையில் இருக்கிறதென்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களில் இந்தியா தன் மின் விநியோக வலையமைப்பை சீர்படுத்தி, மாநிலங்கள், பிரதேசங்கள் எங்கும் தேவைக்கேற்ற பரிவர்த்தனையைச் செய்யக்கூடிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் பலனாக, அயலவர்களான நேபாளம், பூட்டான், பங்களாதேசம், சிறீலங்கா ஆகிய நாடுகளும் தேவையானால் இவ் வலையமைப்பில் இணைந்துகொள்ள வாய்ப்புக்களுண்டு என ‘பவர் எக்சேஞ் இந்தியா லிமிட்டட்’ நிறுவனத்தின் முதன்மை முகவர் பிரபாஜித் சர்க்கார் தெரிவித்தார்.

வங்காளதேசமும், நேபாளமும் ஏற்கெனவே இந்தியாவிடமிருந்து மின்வலுவைப் பெறும் நாடுகளாகும். அதே வேளை, மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளை இந்திய உபகண்டத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளது. மின்விநியோகம், பெற்றோலியம், திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (Liquefied Natural Gas) தளங்கள் ஆகியவற்றின் மூலம் எல்லை கடந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் இந்தியா பல ராஜதந்திர முயற்சிகளில் இறங்கியிருந்தது.

Please follow and like us:
error0