World History

இந்திய அடிமை வியாபாரத்தால் அழுக்கடையும் யேல் பல்கலைக்கழகம்!

அமெரிக்காவிலுள்ள உலகப் புகழ் புகழ் பெற்ற (Ivy League) பல்கலைக்கழகங்களில் ஒன்றான யேல் பல்கலைக்கழகத்திற்கு இப்படியொரு அவமான வரலாறு இருக்குமென எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. காலனித்துவ காலத்து கிழக்கிந்தியக் கம்பனி உரிமையாளரும் அடிமை வியாபாரத்தில் முன்னோடியுமான எலிஹு யேல் என்பவரது பெயரை இப்பல்கலைக்கழகம் சூட்டிக்கொண்டதற்கு ஒரு காரணமிருக்கிறது.

அடிமை வியாபாரம், இனத் துவேஷம், மனித வதை போன்ற விடயங்களில் ஈடுபட்ட பல காலனித்துவ காலத்து மனிதர்களது பெயர்களையும், அடையாளங்களையும் அகற்றும் முயற்சி கனடா உட்படப் பல நாடுகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரொறோண்டோவிலுள்ள றையேர்சன் பல்கலைக்கழகம் தனது பெயரை ரொறோண்டோ மெற்றோபோலிட்டன் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றித் தனது அவமானத்தைக் கழுவிக்கொண்டது. இவ்வரிசையில் யேல் பல்கலைக்கழகம் கடந்த மாதம் தனது அவமான வரலாற்றிற்காகப் பகிரங்க மன்னிப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப் பல்கலைக்கழகத்தின் பெயருக்குரியவரான எலிஹு யேல் இந்தியாவில் ஒரு பேசு பொருளாக எடுக்கப்பட்டுள்ளார்.

17ம் நூற்றாண்டில் அப்போதைய மதறாஸில் வர்த்தகம் / ஆட்சி செய்துகொண்டிருந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் மகா கனம் பொருந்திய தலைவர் / ஆளுனராக இருந்தவர் யேல். அப்போது அவர் தானமாகக் கொடுத்த சுமார் 1,162 பவுண்டுகள் ($1,486) பணத்தைப் பெற்றுக்கொண்டு இப்பல்கலைக்கழகம் அவரது பெயரைச் சூடிக்கொண்டது வரலாறு. இக்காலத்தில் இப்பணத்தைக்கொண்டு எதையுமே செய்ய முடியாதெனினும் அக்காலத்தில் இப்பணத்தைக் கொண்டே பல்கலைக்கழகத்தின் முழுக்கட்டிடமும் கட்டப்பட்டது. அதுவும் அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டதாக இருக்கலாம்.

இப்பல்கலைக்கழகத்தின் அழுக்கு நிறைந்த வரலாறு கடந்த மூன்று வருடங்களுக்குள் தான் வெளியானது. அடிமைத் துன்புறுத்தல் விடயங்களில் இப்பல்கலைக்கழகத்தின் ஈடுபாடு, வரலாறு பற்றி இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான் டேவிட் பிளைற்றின் தலைமையில் ஒரு குழு செய்த ஆய்வே பல்கலைக்கழகத்தின் அழுக்கான வரலாற்றை இப்போது பகிரங்கப்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் பிளைற்றினால் எழுதப்பட்ட யேலும் அடிமைத்தனமும் – ஒரு வரலாறு என்ற 448 பக்க நூலின் வெளியீட்டின்போதே இப் பகிரங்க மன்னிப்பு கோரப்படிருகிறது.

யேலுக்கு (மத்தி) அடிமைக் குழந்தை சேவகம் (Credit: Getty Images)

அடிமை வியாபாரம் இரண்டு திசைகளில் நடைபெற்றது. ஒன்று அத்லாந்திக் சமுத்திரத்திநூடாகவும் மற்றது இந்திய சமுத்திரத்தினூடாகவும் நடைபெற்றன. ஏறத்தாள சம அளவிலேயே இவ்வியாபாரம் நடைபெற்றிருந்தாலும் கிழக்கிந்தியக் கம்பனியின் இந்திய துணைக்கண்ட வியாபாரம் 19 ஆவது நூற்றாண்டிலேயே மும்முரமடைந்தது. 100 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற இவ்வடிமை வியாபாரத்தில் அத்லாந்திக் சமுத்திரத்தினூடாக ஏறத்தாழ 12 மில்லியன் அடிமைகள் கடத்தப்பட்டனர். அதே வேளை இந்து சமுத்திரத்தினூடாக அதவிடவும் அதிகமான அடிமைகள் கடத்தப்பட்டனர் எனவும் தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா என இந்திய அடிமைகளது வர்த்தகப் பிரதேசம் பரந்ததாக இருந்தது என பேராசிரியர் யானியெல்லி கூறுகிறார்.

கனெக்டிகட்டிலுள்ள நியூ ஹேவெண் நகரில் 1701 இல் கட்டப்பட்ட யேல் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாவது அதி உயர்ந்த உயர்கல்வி நிலையங்களில் ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிகள் பலரும், இதர பல பிரபலங்களும் இங்கு கற்றிருக்கிறார்கள். 1713 இல் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுனர் எலிஹு யேல் இறையியல், இலக்கியம், மருத்துவம், கட்டிடக்கலை, முதலாம் கோர்ஜ் மன்னரின் படம், சிறந்த ஆடைகள், இதர பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டங்கள் ஆகியவற்றை இப்பல்கலைக்கழகத்திற்குத் தானம் செய்திருந்தார்.

எலிஹு யேல் ஏப்ரல் 1649 இல் பொஸ்டன் நகரில் பிறந்து மூன்று வயாதாகவிருக்கும்போது தனது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறியவர். 1672 இல் கிழக்கிந்திய கம்பனியில் கிளார்க் ஆகப் பதவி பெற்று அப்போதைய மதராஸ் பட்டினத்தின் ‘கோட்டை’யிலுள்ள (Fort St. George) வெள்ளைக் காலனியில் குடியேறினார். படிபடியாகப் பதவியில் உயர்ந்து 1687 இல் அக் கம்பனியின் ஆளுனராக நியமனம் பெற்றார். இக்கோட்டையில் தான் தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலகம் இருக்கிறது.

தனிப்பட்ட தேவைகளுக்காகப் பணச்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றங்களுக்காகப் பதவி நீக்கப்பட்ட யேல் 1699 இல், அவரது 51 ஆவது வயதில் இங்கிலாந்து திரும்பினார். பெரும் தனவந்தரான அவர் அப்போதிருந்தே பல தான தருமங்களைச் செய்தார் எனக் கூறப்படுகிறது. 1680 இல் சென்னையில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக பெருந்தொகையானவர்களுக்கு வேலைப் பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் இதைச் சாதகமாகப் பாவித்து யேல் பல்லாயிரக்கணக்கான அடிமைகளை விற்று அவ்வியாபாரத்தினாலேயே அவரால் பெருமளவு பணத்தைச் சேகரிக்க முடிந்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்போது ஒரு கப்பலில் 10 அடிமைகள் வீதம் ஐரோப்பிய கப்பல்கள் அடிமைகளைக் கொண்டுபோகவேண்டுமென அவர் நிர்பந்தித்தார் எனவும் 1687 இல் மட்டும் 685 அடிமைகளை அவர் ஏற்றுமதி செய்தார் எனவும் வரலாற்றாளர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் இந்தியா முகலாயரது ஆதிக்கத்திற்குள் வந்தபோது அவர்களே கிழக்கிந்தியக் கம்பநியை மூடிவிட் உத்தரவிட்டார்கள் என்றும் அப்படியிருந்தும், ஒரு வருடத்தின் பின்னர் யேல் தனது அடிமை ஏற்றுமதியை மடகாஸ்கார் தீவிலிருந்து இந்தோனேசியாவிற்கு தொடர்ந்தார் எனவும் கூறப்படுகிறது.

‘கோட்டையில்’ இருந்து பெறப்பட்ட ஆவணங்களின்படி கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் அவர் அப்போது அடிமை வியாபாரத்தில் ஈடுபாட்டிருந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது ஒரு படத்தில் அவருக்கும் அவரது சகாக்களுக்கும் மது வழங்கும் ஒரு கருப்புக் குழந்தையுடனான சித்திரமே அவர் மீதும் பல்கலைக்கழகத்தின் மீதும் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு ஆதாரமாக இருக்கின்றது.

எப்படியிருப்பினும் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், சமத்துவத்தை பேணுதல், வரவேற்பு, உள்ளிணைப்பு, மரியாதை செய்தல் போன்றவற்றை முன்னெடுத்தல், பெரும்பாலும் கறுபின மக்களைக் கொண்ட நியூ ஹேவெண் நகரின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தல் ஆகிய விடயங்களில் தாம் கவனம் செலுத்துவோம் எனவும் ஆனால் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கான உத்தேசம் இல்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. (Image Credit: Getty Images; Source: BBC)