India

இந்தியா: ஷவேந்திர சில்வா தம்பதிகள் விசேட விமானத்தில் அழைப்பு!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவரானவரும் மருத்துவமனைகள், உணவிற்கான மனித வரிசைகள் ஆகியவற்றின்மீது குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியதன் மூலம் மனித உரிமைகளை மீறியவர் என ஐ.நா.வினால் போர்க்குற்றவாளிப் பட்டியலில் இடப்பட்டவருமான ஷவேந்திர சில்வாவையும் அவரது மனைவியையும் விசேட விமானம் மூலம் அழைத்துக் கெளரவித்திருக்கிறது.

உத்தரகாந்திலுள்ள டெஹ்ராடன் நகரில் இராணுவக் கல்லூரியில் படித்துப் பட்டம்பெறும் இராணுவத்தினரின் அணிவகுப்பிற்கு பிரதம விருந்தினராக அவர் இந்தியாவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக சில்வாவும் அவருடைய மனைவியும் டெல்ஹியிலிருந்து டெஹ்ராடனுக்கு ஏயர் இந்தியாவின் தனி விசேட விமானமொன்றில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது சில்வா தளபதியாகக் கடைமையாற்றிய 58 ஆவது பிரிவு பொதுமக்கள் மீது வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை வீசியும், பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்களைச் செய்தும், பலரைக் கடத்திக் கொலைசெய்தும் பல அட்டுழியங்களையும் செய்திருந்தது.

இகுற்றங்களுக்காக ஷவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழையமுடியாது என 2020 பெப்ரவரியில் அப்போதைய இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்திருந்தார். “ஐ.நா. மர்றும் மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள, சில்வா புரிந்த மனித உரிமை மீறல்கள் கொடூரமானவையும், நம்பக்கூடியவயுமாகும்” என அப்போது பொம்பியோ தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் இந்தியா அவரை அழைத்து கெளரவப்படுத்தியிருக்கிறது. (Image Credit: Tamil Guardian)