Spread the love

இந்தியாவில், வேகமாகப் பரவி வரும் கொரோனாவைரஸ் நோய்த் தொற்றைச் சமாளிக்க, 20,000 தனிமைப்படுத்தும் வார்டுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் 16 படுக்கைகளை நிர்மாணிக்க இந்திய தேசிய ரயில்வே தீர்மானித்துள்ளது.

நாட்டின் மருத்துவ வசதிகள் போதாமற் போகலாமென்பதை மனதில் கொண்டு இத் தயாரிப்பு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் மூலம் 320,000 நோயாளிகளைத் தமைப்படுத்திப் பராமரிக்க முடியும்.பல விளையாட்டு மைதானங்களும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன.

இந்தியா தனது 1.3 பில்லியன் மக்களின் நடமாட்டத்தடையை அறிவித்து ஒரு வாரமாகிறது. இருப்பினும் புதிதாக 1,637 தொற்றுக்களும், 38 மரணங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

சாருசோஜை விளையாட்டரங்கம் தற்போது கோவிட் நோயாளிகளைப் பராமரிக்கும் தற்காலிக மருத்துவமனை படம்: அனுபம் நாத்/AP Photo


புது டெல்ஹியில், ஜவஹர்லால் ஸ்ரேடீயத்தைத் தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றுவதற்கு, முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அன்நகரில் வேகமாக வளர்ந்து வருகிறது.

அதே போல, ஹைதராபாத்திலுள்ள காச்சிபெளலி ஸ்ரேடியம் தற்போது 1,500 கட்டில்களைக் கொண்ட தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகளை இங்கு தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில், நோய்த் தொற்றுள்ளவர்கள் மிகக் குறைவாக இருந்தும், அங்குள்ள சாருசஜை ஸ்ரேடியம் 1,000 கட்டில்களைக் கொண்ட வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமூகத் தொற்றுக்கான (community transmissions) சாத்தியக்கூறுகள் அதிகமுண்டு என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். குறிப்பாக, பல்லாயிரக் கணக்கானவர்கள் வேலை நிமித்தம் வெளி மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள், நடமாட்டத் தடையையும் மீறித் தமது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லும்போது கொண்டு செல்லப்படும் கிருமிகள் அவர்கள் வாழும் சமூகங்களையம் தொற்றிக்கொள்ளும் அபாயமுண்டு.

ஜார்க்கந்த் மாவிலத்தில், எல்லைகள் மூடப்பட்டதும், தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் வேறு வழிகளின்றி ஆற்றை நீந்திக் கடந்து மேற்கு வங்கத்தை அடைவதாக உள்ளுர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது போன்று, ஹரியானா மாநிலத்திலும், உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த தொழிலாளர் காற்றடைக்கப்பட்ட ரப்பர் டியூப்களைப் பிடித்துக்கொண்டும், படகுகளிலும் இரவோடிரவாகத் தமது கிராமங்களுக்குச் செல்கின்றனர் எனக் காவற்துறைப் பேச்சாளர் சரன்ஜித் சிங் தெரிவித்தார். (மூலம் DPA News )

Print Friendly, PDF & Email
Related:  கழிவு நீரைப் பரிசோதிப்பதால் கொறோனாவைரஸின் இரண்டாம் வருகையை எதிர்வுகூறலாம்