இந்தியா-வட இலங்கை பயண வசதிகள் மீளேற்பாடு செய்யப்படும்
டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் அறிவிப்பு
வட இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்குமிடையில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக்களை மீளேற்பாடு செய்வதன் மூலமாக இரு நாட்டு மக்களிடையேயும் தொடர்பாடல்களை ஏற்படுத்த அரச தரப்புகள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஜூன் 13 அன்று, இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி விமானநிலையத்துக்கும் பலாலி சர்வதேச விமானநிலையத்துக்குமிடையே விமானப் போக்குவரத்துகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதெனவும் அதே வேளைபுதுச்சேரி காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசந்துறை துறைமுகத்துக்குமிடையே கப்பல் (பாதை) போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படவுள்ளதெனவும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுக்கான அமைச்சர் மனுஸ்க் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
மலிவான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அயலவர்களுக்கிடையேயான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியுமென மனண்டேவியா தநது ருவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
கப்பற் போக்குவரத்தை மீள ஆரம்பிக்க சாகர்மலை அபிவிருத்தி நிறுவனத்துக்கும் இந்துசிறி கப்பல் சேவைகள் நிறுவனத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் அங்கஜன் ராமநாதன் கடந்த வருடம் தெரிவித்திருந்தார். இதன்மூலம் இருநாடுகளுக்குமிடையேயான பரஸ்பர உறவும் தொடர்பாடலும் பலப்படுத்தப்படுமென நம்பப்படுகிறது.
இத் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் இதை சம்பந்தப்பட்ட அமைச்சர் முழுதாக ஆராய்ந்தபின் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்துள் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் ஆரமபமாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.
பலாலி விமானநிலையத்தின் மீள்கட்டுமான வேலைகள் பூர்த்தியடைந்ததும் அங்கு குடிவரவு, சுங்க அலுவலகங்கள் நிறுவப்படுமெனவும் இப் பணிகள் பூர்த்தியடைந்ததும் பலாலி-புதுச்சேரி விமானப் போக்குவரத்து ஆரம்பமாகுமென அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். நவம்பர் 2019 வரை பலாலி-சென்னை விமானப் போக்குவரத்துக்களை மேற்கொண்டிருந்த அல்லயன்ஸ் எயர் நிறுவனம் கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக தனது சேவையை நிறுத்திக்கொண்டிருந்தது. (லங்கா நியூஸ் வெப்)