Spread the love
21 நாட்களுக்கு நடைமுறையிலிருக்கும்

“இன்றிரவு முதல், இந்தியா முழுவதும் நடமாட்டத்தடை நடைமுறைப்படுத்தப்படும். இது கடந்த தடவை நடைமுறைப்படுத்தப்பட்ட ‘மக்கள் ஊரடங்கு’ நடவடிக்கையைவிடக் கடுமையாக இருக்கும். வீடுகளிலிருந்து வெளியே நடமாடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது” என ” கோவிட்-19 தொடர்பான பிரதான அம்சங்கள்” என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 1.3 பில்லியன் மக்களின் மீதான இந்த நடமாட்டத் தடை 21 நாட்களுக்கு நீடிக்கும்.

“நீங்கள் இருக்குமிடங்களிலேயே தங்கிக் கொள்ளுங்கள். வெளியே எங்கேயும் நடமாடாதீர்கள். இந்த வழியில் மட்டுமே நாம் சங்கிலித் தொடரான இந் நோய்த்தொற்றை முறிக்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.

மக்கள் தமக்கிடையே தூரங்களைப் பேணிக்கொள்வதன் மூலம் மட்டுமே நாம் நோய்த்தொற்றைத் தவிர்க்க முடியுமென நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வெளியே நடமாடினால், இக் கொள்ளை நோயை நீங்களே உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்தவர்களாவீர்கள். சமூகத் தனிமைப்படுத்தல் நோய் தொற்றியவர்களுக்கு மட்டுமே எனச் சிலர் நினைக்கிறார்கள். இது ஒவ்வொரு குடிமகனுக்கும், குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினருக்கும், ஏன் உங்கள் பிரதமரான எனக்கும் தான்” எனப் பிரதமர் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

“இங்குள்ள கேள்விகள் என்னவென்றால், ‘இதனாலெல்லாம் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்குமா? தீர்வு என்ன? இதற்கு மாற்றுவழியென்ன? பாதிக்கப்பட்ட இதர நாடுகளில் மக்கள் வாரங்களாகத் தமது வீடுகளிலிருந்து வெளியே போகவில்லை. அந்நாடுகளிலுருந்து வரும் செய்திகள் நம்பிக்கை தருவதாயுள்ளன. அங்கெல்லாம் அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு 100 வீதம் ஆதரவை மக்கள் கொடுத்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.



ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இப் புதிய நடமாட்டத்தடை நடைமுறையிலுள்ளபோது, சகல அத்தியாவசிய சேவைகளும் தயார்நிலையில் இருக்கும் எனவும் மக்களின் இயல்பு வாழ்வில் எந்தவித தடங்கல்களும் இருக்கமாட்டாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எப்படியான அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படுமென அவர் கூறாவிடினும், மாநில அரசுகளின் திட்டங்களின்படி, மளிகைக் கடைகளும், மருத்துவ சேவைகளும் தடையின்றி சேவைகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் இவ் விடயத்தில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்தியாவில், இதுவரை 523 கோவிட்-19 நோய்த் தொற்றுக்கள், 10 மரணங்கள், 40 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை எனப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்றம்ப் தரும் யோசனை - பரிசோதனைகளைக் குறைக்கும்படி உத்தரவு!