Spread the love

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காகத் திட்டமிடப்படாது இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினால், இலட்சக் கணக்கான ஏழை இடம்பெயர் தொழிலாளிகள் அல்லலுற்று வருகின்றனர். பட்டினியால் இறப்பவர்களும், பாதுகாப்புக் கெடுபிடிகளினால் துன்புறுபவர்களும், பலமைல் தூரங்களைப் பட்டினியுடன் நடந்து கடப்பவர்களும் என்று இத் தொழிலாளர்களின் துயரங்கள் சொல்ல முடியாதவை.

பணக்கார இந்தியாவும், நடுத்தரவர்க்க இந்தியாவும், உலகப் புள்ளிவிபரப் போட்டியில் பெருமை பெறுவதற்காக இவ்வேழைத் தொழிலார்கள் படும் இடர்களை மூடி மறைத்து வருகின்றது.

இத் தொழிலாலர்களின் கண்ணீர்க் கதைகளில் ஒன்று 15 வயதேயுடைய ஜோதி குமாரியினுடையது.

புதுடெல்ஹியின் புறநகர்ப்பகுதியான குருகிராமில், ஆட்டோ ரிக்‌ஷோ ஓட்டிப் பிழைத்துவந்தவர் ஜோதி குமாரியின் உடல் வலுக்குறைந்த தந்தை. கோவிட்-19 நோய்த்தடுப்பு முயற்சிகளால் அவரது தொழிலும் முடக்கப்பட்டது. தொழில் இல்லாது ஆட்டோ ரிக்‌ஷாவின் வாடகை கட்டமுடியாமையால் நடுத்தெருவில் விடப்பட்ட அவர் பட்டினியை எதிர்நோக்கியிருந்தார்.இதனால், அவரது மகள் ஜோதி குமாரி கிழக்கு இந்தியாவிலிருந்து மிதிவண்டியில் வந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். அவளது செயலைப் புகழ்ந்து உலகமே பாராட்டி வருகிறது.

“எனக்கு வேறு வழி இருக்கவில்லை. நான் மிதிவண்டியில் அப்பாவைக் கொண்டுவந்திருக்காவிட்டால் நாம் பிழைத்திருக்க முடியாது” என ஜோதி குமாரி தெரிவித்திருக்கிறாள்.

வருமானமேதுமின்றி புது டெல்ஹியில் வாழ்ந்திருக்க முடியாது. தொடர்ந்து இருப்பின் பட்டினியால் தன் தந்தை இறந்திருப்பார் என்கிறாள் அவள்.

இந்தியாவின் மத்திய அரசு உத்தரவிட்டபடி, அவ்சியமற்ற பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மில்லியன் தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று தினக்கூலியில் தொழில் புரிகின்றார்கள். ஊரடங்குச் சட்டத்தால் வர்களைப் பற்றிய எந்தவித மாற்றுத் திட்டங்களுமில்லாமல் மத்திய அரசு திடீரென்று ஊரடங்கை அறிவித்துவிட்டது. திடீரென்று வர்மானங்களை இழந்தவர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தெருக்களில் விடப்பட்டனர்.

ரயில் சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்ட நிலையில் இப்படியான பல இலட்சம் தொழிலாளர்கள் கால்நடையாகவும், நீர் நிலைகளில் நீந்தியும் தமது கிராமங்களுக்குப் போகிறார்கள். இப் பயணக்களின்போது நூறுக்கணக்கானோர் பட்டினியாலும் இதர காரணங்களாலும் மரணமாகியிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இவர்களது பரிதாப நிலைகுறித்து அக்கறைப்படுவதாயில்லை.

இந் நிலையில், ஜோதி குமாரி போன்றவர்கள் தம்மாலியன்ற வழிமுறைகளைக் கையாண்டு உயிர்வாழ்தலுக்காக முயற்சிக்கிறார்கள். மார்ச் மாதம் முதல் இந்தியா எங்கும் இப்படியான உயிர்தப்பும் முயற்சிகள் நடந்து வருவதும், பலநூற்றுக்காணக்கானோர் மரணமடைவதும் வழக்கமாகி விட்டது.

வெப்பம் அதிகரித்து வந்த நிலையிலும், ஜோதி குமாரி அவளது தந்தையை மிதிவண்டியின் பின் கரியரில் ஏற்றிக்கொண்டு 10 நாட்கள் பயணம் செய்திருக்கிறாள். அவ்வப்போ தெரியா மனிதர்கள் கொடுத்த உணவும் தண்ணீரும் உதவி செய்தன. ஒரே ஒரு தடவை ஒரு நல்லுள்ளம் தனது வண்டியில் இருவரையும் ஏற்றிச் சென்று அவளது கால்களுக்கு ஆறுதல் பெற்றுக்கொடுத்திருந்தது.

Related:  சங்கர் சாதிக் கொலை | பெண்ணின் தந்தையை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது


தந்தையும் மகளும் பீகாரிலுள்ள அவர்களது கிராமமான தர்பாங்காவிற்கு ஒரு வாரத்துக்கு முதல் வந்து சேர்ந்திருந்தார்கள். எட்டாம் தரம் படிக்கும் குமாரி, தந்தையைக் கவனிப்பதற்காக அவருடன் புது டெல்ஹியில் தங்கியிருந்தார்.

“தாங்க முடியாத வெப்பம். அது ஒரு மிகவும் கஷ்டமான பிரயாணம்தான். ஆனால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை” என்கிறாள் குமாரி.

தற்போது தந்தையும் மகளும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள். மாநிலங்களுக்கிடையிலான பயணிகளும் இந்நடைமுறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் 125,102 நோய்த் தொற்றுக்களும், 3,867 மரணங்களும் நடைபெற்றுள்ளன. இடப்பெயர்விநால் ஏற்பட்ட மரணங்கள் இதைவிட அதிகமாகவிருக்கலாம். அவையெல்லாம் புள்ளிவிபரப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் இந்தியாவுக்கு அவமானமாகிவிடும்.

அயல்நாடுகளின் கோவிட் துயர் துடைக்க பாரதப் பிரதமர் மோடி அள்ளிக்கொடுக்கப்போவதாக வந்த படத்தோடு ஒப்பிடுகையில் ஜோதிகுமாரி தந்தையோடு இருக்கும் படம் கவர்ச்சியாகவில்லைத் தான். ஏதோ எம்மால் முடிந்தது அவ்வளவுதான்.

இந்தியா மீண்டும் திறக்கப்படும்போது அத்தனை தொழிலாளர்களும் மீண்டும் நகரங்களுக்கு வந்தேயாகவேண்டும். இல்லாவிட்டால் சீதாராமனின் புள்ளிவிபரம் கவர்ச்சியில்லாமலாகிவிடும்.

இதன் மூலம் கிடைத்த நல்ல பெறுபேறு ஒன்று, இந்தியாவின் ‘சைக்கிளிங் ஃபெடெறேசன்’ Cycling Federation of India குமாரியின் அபாரத் திறமையைக் கண்டுவிட்டது. ஒலிப்பிக் போட்டிக்கு ஆட்களைப் பரிந்துரைத்து வருவது இக் கழகம். குமாரியை மீண்டும் டெல்ஹிக்குக் கொண்டுவந்து ஒலிம்பிக் பயிற்சிக்காக முயற்சி செய்யவிருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் மகள் ஐவானாவும் தனது ருவீட்டில் ” அன்புக்கும் சகிப்புக்குமான அழகிய உதாரணம்” எனக் கூறியுள்ளார்.இப் புகழ்ச்சிகளியெல்லாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, நான் புகழுக்காக இதைச் செய்யவில்லை. இயலாமையின் உச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவு அது என்கிறள் குமாரி. தொடர்ந்து வறுமையிலேயே வாடுவதற்கான இந்தியப் பண்பு அவளிடம் இருக்கிறது.

மோடி, குமாரியுடன் அடுத்த படத்தில் நெளிந்துகொண்டு நின்றால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

-சிவதாசன்

Print Friendly, PDF & Email