இந்தியா | மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்ரான் சுவாமி தடுப்புக் காவலில் மரணம்

இந்திய ஒன்றிய அரசின்மீது குவியும் கண்டனங்கள்

இந்தியாவின் பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான, 84 வயதுடைய அருட் தந்தை ஸ்ரான் சுவாமி திங்களன்று, மும்பாய் மருத்துவமனையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மரணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மூத்த குடியினர், ஒடுக்கப்பட்ட மக்கள், விழிம்புநிலை மக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துச் செயற்பட்டுவந்த தந்தை ஸ்ரான் சுவாமி, எல்கார்-பரிஷாத் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புகளைப் பேணிவந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக மும்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வந்தார் எனவும் பார்க்கின்சன் வியாதி உட்படப் பலவிதமான வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோணாத் தொற்று ஏற்பட்டதெனவும் தற்போது கூறப்படுகிறது.

தந்தை சுவாமியின் மரணம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே வேளை, பாரதீய ஜனதா அரசின் மீது மக்கள் அளவற்ற வெறுப்பைக் கொட்டி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியைப் பிறப்பிடமாகக் கொண்ட தந்தை ஸ்ரான் சுவாமி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்தவர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது மரணம் நிகழ்ந்தது நீதிக்கு இழைக்கப்பட்ட அநியாயம் எனத் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் முதல்வர்கள் எம்.கே.ஸ்டாலின், பிரணாயி விஜயன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தந்தை சுவாமி பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டபோது நடைபெற்ற இம் மரணம் ஒரு கொலையெனவே கருதப்படவேண்டும் எனவும் இதற்கு பா.ஜ.க. அரசே பொறுப்பேற்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தை சுவாமியின் மரணத்துக்குக் காரணமானவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்படி கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்ஸிஸ்ட்) தமிழ்நாடு கிளை, மாநில ரீதியான ஆர்ப்பாட்டமொன்றை ஜூலை 8 இல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.