India

இந்தியா | மத்திய அரசின் கீழ் இயங்கும் மாநில ஊடகங்கள் தினமும் 15 நிமிட சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப உத்தரவு!


இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒளிபரப்பு ஸ்தாபனமான பிரசார் பாரதி, தினமும் 15 நிமிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் செய்திகளை ஒளிபரப்பும்படி, ‘பொதிகை’ உட்பட்ட , மாநிலங்களில் இயங்கும் தனது பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுல்ள்ள பல அரசியல் தலைவர்கள் இவ்உத்தரவை மீளப்பெறும்படியும், மாநிலங்களில் சமஸ்கிருதத் திணிப்பை நிறுத்தும்படியும் கூறி தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வுத்தரவின்படி, தூர்தர்ஷன் எனப்படும் இந்திய மத்திய அரசுக்குச் சொந்தமான ஊடகத்தின் கீழ் மாநிலங்களில் இயங்கும் மாநில மொழி ஊடகங்கள் தினமும் காலை 7:15 முதல் 7:30 வரையோ அல்லது அதற்கடுத்த அரை மணித்தியாலத்திலோ, செய்திகளைச் சமஸ்கிருதத்தில் ஒளிபரப்ப வேண்டும். அத்தோடு இச் சானல்கள், வாரந்தோறும் செய்தி மஞ்சரிகளையும் சமஸ்கிருதத்தில் ஒளிபரப்ப வேண்டும்.

இவ்வுத்தரவு தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகளாலும் தலைவர்களாலும் பலமாக எதிர்க்கப்பட்டு வருகிறது. து.மு.க. தலைவர் எம்.கே.ஸ்டாலின், தொல். திருமாவளவன் போன்றோர் இது குறித்து தமது கண்டனச் செய்திகளைச் டுவீட் செய்து வருகின்றனர்.

இது ஆர்.எஸ்.எஸ்., சங்-பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று; இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என தொல் திருமாவளவன் டுவீட் செய்துள்ளார். 2011 குடிசன மதிப்பின்படி இந்தியாவில் 24,000 மக்களே தாம் சமஸ்கிருதத்தைப் பேசுவதாகவும், அவர்களில் 803 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் எனவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். “803 பேருக்காகத் தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தில் செய்திகள் ஒளிபரப்பப்படவேண்டுமாகில், 7.5 கோடி தமிழ் பேசும் மக்களுக்காக இந்தியா முழுவதிலும் 15 நிமிடங்களுக்கு தமிழிலும் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



“மத்திய அரசு தமிழ் நாட்டில் கட்டாயமாகச் சமஸ்கிருதத்தில் செய்திகள் ஒளிபரப்பப்படவேண்டுமென்று பா.ஜ.க. அரசு எதிர்பார்க்குமனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் வாழும், உத்தர பிரதேசம், குஜராத், டெல்ஹி ஆகிய மாநிலங்களில் தமிழிலும் செய்திகள் ஒளிபரப்பப்பட வேண்டும்” என டி.ரவிக்குமார் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன், இது பற்றிய தனது டுவீடில், “(சமஸ்கிருதத்தில் செய்திகளைக்) கேட்க 5 பேர்கூட இல்லாத இடத்தில் ஏன் ஆறு முழ சங்கை ஊத வேண்டும்?” எனக் கேட்டுள்ளார்.

“உலகில் எங்குமே சமஸ்கிருதம் ஒரு மொழியாகப் பேசப்படாத் போது ஏன் செய்திகள் அம்மொழியில் வாசிக்கப்பட வேண்டும்? இது இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பாதகம் விளைவிக்கும் செயல்” என தி.மு.க. தலைவர் எம்.கே ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, மைசூரிலிரிந்து வெளியாகும், இந்தியாவின் முழுவதிலும் இயங்கும் ஒரே ஒரு சமஸ்கிருத மொழியிலான பத்திரிகை ‘சுதர்மா’ வாசகர்களின்றித் திண்டாடுகிறது.