இந்தியா போவதற்கு முன் ரணில் – த.தே.கூட்டமைப்பு பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறியப்படுகிறது. இன்று (செவ்வாய்) பிற்பகல் இப் பேச்சுவார்த்தை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 20, 21 ம் திகதிகளில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதியின் இந்திய வரவின்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளையும் சந்திப்பார் எனத் தெரிகிறது. இதற்கு முன்னர் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து அரசியல் தீர்வு பற்றி உரையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி ரணில் விக்கிரமசிங்க யோசித்து வருவதாகவும் இது குறித்து டிசம்பர் முதல் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னர் கூறப்பட்டது. இருப்பினும் அதற்கு முன்னர் இராணுவத்தின் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதோடு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டுமென கூட்டமைப்பினர் தெரிவித்திருந்ததாகத் தெரிகிறது. இதன் பலனாக சில தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டும் சொற்பமான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுமிருந்தனர். இருப்பினும் அது தமக்குத் திருப்தியைத் தரவில்லை எனத் த.தே.கூ. தெரிவித்திருந்தது.
இதே வேளை ரணில் விக்கிரமசிங்கவின் வரவின்போது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் 2018 இல் பிற்போடப்பட்ட மாகாணசபைத் தேர்தல்களை உடநடியாக நடத்தவும் அழுத்தம் கொடுக்கும்படி கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத இதர தமிழ்க் கட்சிகளும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன.
தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பது தொடர்பகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமருடம் பேசுவார் என எதிர்பார்கப்படுகிறது.