இந்தியா: சிறைப் பதிவுகளில் சாதி பற்றிய குறிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
கையேடுகள் முற்றாக மாற்றியமைக்கவும் உத்தரவு

சிறைக் கையேடுகளில் (Prison Manuals) சாதி பற்றிய பாகுபாடு காட்டும் குறிப்புகள் முற்றாக அகற்றப்படவேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா, கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வழக்கிலிருக்கும் கையேடுகளின்படி சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பணிகள் அவர்களது சாதிப் பிரிவுகளுக்கு ஏற்ற வகையில்தான் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சிறைச்சாலையில் துப்புரவாக்கும் பணிகள் சாதியில் கடை நிலையில் இருப்பவர்களெனக் கருதப்படுபவர்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். சாதிகளில் உயர்ந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு சமையல் போன்ற பணிகள் வழங்கப்படுகின்றன. இப்பாரபட்சமான நடைமுறை இந்திய அரசியலமைப்பிற்கு முரணானது எனக்கூறி உச்ச நீதிமன்றம் அதை மாற்றும்படி உத்தரவிட்டிருக்கிறது.
இந்நடைமுறையை நீக்கும் வகையில் சிறைச்சாலை கையேடுகள் மாற்றப்படவேண்டுமென சுகன்யா சாந்தா எனும் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.வை. சந்திரசூட், ஜே.பி. பார்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் மேற்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். இவ்வூடகவியலாளர் எழுதிய “From Segregation to Labour, Manu’s Caste Law Governs the Indian Prison System” என்ற நூல் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியது.
மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலுமுள்ள சிறைகளின் கையேடுகளில் சாதி பற்றிய நிரல் முற்றாக நீக்கப்படவேண்டுமென்பதோடு தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருக்கும் சாதி பற்றிய குறிப்புகளும் மூன்று மாதங்களுக்குள் நீக்கப்படவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைக் கையேடுகள் மாநில விவகாரங்களுக்குள் அடங்கும் எனக்கூறி இப்பாரபட்ச நடைமுறையை மத்திய அரசு இதுவரை அங்கீகரித்து வருகிறது. ஆனால் அது அரசியலமைப்பு சாசனத்தின் 14, 15, 17, 21 மற்றும் 23 ஆம் கட்டளைகளின் பிரகாரம் அனுமதிக்க முடியாத ஒன்று என சுகன்யா சாந்தா வாதாடியிருந்தார். (Image Credit: Verdictum)
