இந்தியா: கொலைகாரனைக் காட்டிக்கொடுத்த கிளி

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலையொன்றைப் பார்த்த அவ்வீட்டுக்கிளி கொலைகாரனைக் காட்டிக்கொடுத்த சம்பவம் இந்தியாவின் ஆக்ரா நகரில் நடைபெற்றிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட நீலம் சர்மாவின் கணவர் விஜேயும் பிள்ளைகளும் திருமண நிகழ்வொன்றிற்குச் சென்றிருந்த வேளை அவ்வீட்டிற்குச் சென்ற விஜேயின் மருமகனான அஷு சர்மாவும் அவரது நண்பரான றொணி மஸ்ஸியும் தனியே இருந்த நீலத்தை 14 தடவைகளும் அவரது நாயை 9 தடவைகளும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அவரது நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருக்கிறார்கள்.

அஷு அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து போபவர் மட்டுமல்ல பல நாட்கள் அங்கு தங்கியும் செல்பவர். அவரது MBA படிப்பிற்குக் கூட மாமனார் விஜே 80,000 ரூபாய்கள் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். உள்வீட்டுப் பிள்ளையான அவருக்கு குடும்பத்தினர் தமது பணம், நகைகளை வைத்திருந்த இடம் தெரிந்திருக்கிறது. பெப்ரவரி 20, 2024 அன்று கணவரும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாத நாளில் அவ்வீட்டிற்குச் சென்ற அஷுவும் நணபரும் நீலத்தையும் நாயையும் கொலை செய்துவிட்டு கொள்ளையைச் செய்திருக்கிறார்கள்.

கணவரும் பிள்ளைகளும் வீடு திரும்பியதும் மனைவி நீலமும் அவர்களது நாயும் இறந்துகிடக்கக் காணப்பட்டனர். அன்று முதல் அவர்களது கிளியும் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ, பேசவோ மறுத்துவிட்டது. கொலையைப் பார்த்ததனால் தான் சாப்பிட மறுக்கிறது எனச் சந்தேகம் கொண்ட கணவர் விஜே வீட்டுக்கு வந்து போகிறவர்கள் எனப்படும் 10 பேரின் பெயர்களைக் கிளியின் முன் கூறியிருக்கிறார். அஷுவின் பெயரைக் கூறியதும் அக்கிளி மிகவும் ஆக்ரோஷத்துடன் சிறகுகளை அடித்து அஷுவின் பெயரைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டது. இதனால் சந்தேகமுற்ற கணவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தபோது அவர்களும் கிளியின் முன்னால் அஷுவின் பெயரைக் கூறும்போது கிளி மிகவும் கோபத்துடன் நடந்துகொண்டது. இதைத் தொடர்ந்து அஷு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கொலைகாரர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையையும் அபராதத்தையும் அளித்து நீதவான் தீர்ப்பளித்திருந்தார்.

சட்டக் காரணங்களுக்காக கிளியின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. துர்ப்பாக்கியமாக அஷுவுக்கு வழங்கப்பட்ட நீதியைப் பார்க்க கிளியோ அல்லது விஜேயோ உயிருடன் இல்லை. 2020 நவம்பரில் விஜே மரணமாகி 6 மாதங்களின் பின்னர் கிளியும் இறந்து போனது.

கொலைகாரர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டுமென்று விஜே விரும்பியிருந்ததாகவும் அதற்காக அவரின் குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்திருப்பதாகவும் விண்ணப்பித்திருப்பதாகவும் சர்மா தம்பதிகளின் மகளான நிவேதிதா கூறியிருக்கிறார் (இந்தியா ருடே) (Photo by Jean-Philippe Delberghe on Unsplash)