India

இந்தியா | குழந்தைகளைப் பணயம் வைத்தவரின் மனைவியை அடித்துக் கொன்ற கிராமத்தினர்

கணவனைப் பொலிஸ் சுட்டுக் கொன்றது

ஜனவரி 31, 2020

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 குழந்தைகளைப் பணயமாக வைத்து மிரட்டிக்கொண்டிருந்த ஒருவரது மனைவியைக் கிராமத்தவர் கற்களால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தநது குழந்தைக்குப் பிறந்தநாள் வைக்கப்போவதாகப் பொய் சொல்லி 23 குழந்தைகளை அழைத்த ஒருவர் அக்குழந்தைகளைப் பணயமாக வைத்து மிரட்டியதாகவும் பொலிசார் அவரது வீட்டைச் சூழ்ந்து சரணடையுமாறு எச்சரித்தும் அவர் மறுத்ததனால் அவரைப் பொலிசார் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரது மனைவியைக் கிராமத்தவர் துரத்திக் கற்களால் எறிந்ததில் காயப்பட்ட அவர் மருத்துவ மனையில் மரணமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

6 மாதங்கள் வயதுடைய ஒரு குழந்தை உட்பட, 23 குழந்தைகளும் காயங்கள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 300 கி.மீ. தூரத்திலுள்ள பரூக்காபாத் மாவட்டத்திந் கசாரியா கிராமத்தில் நடந்துள்ளது.

இச் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் 40 வயதுடைய சுபாஷ் பாதம் எனவும், இன்னுமொரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அவர் பிணையில் விடப்பட்டிருந்தார் எனவும் அறியப்படுகிறது.

10 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பணயக் கைதிகளாகக் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தனர் எனவும், அதன்போது தப்பியோட முற்பட்ட சுடப்பட்டவரின் மனைவியைக் கிராமத்தவர் பிடித்துக் கற்களால் அடித்ததாகவும் பொலிசார் தலையிட்டு அவரைக் காப்பாறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவரது உயிரைக் காப்பற்ற முடியவில்லை எனவும் பரூக்காபாத் பொலிஸ் சுப்பெறிண்டன்ற் அனில் குமார் மிஷ்ரா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை விடுதலை செய்வதற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ. 10 மில்லியன் ($140,000) பணமும், தன்னைக் கொலைக் குற்றத்த்லிருந்து விடுதலை செய்யவேண்டுமெனவும் சுடப்பட்டவர் கேட்டிருந்ததாக மிஷ்ரா மேலும் தெரிவித்துள்ளார்.