Spread the love

கொலை செய்தவரும் செய்யப்பட்டவரும் முகநூல் மூலமே இக் கொலையைத் திட்டமிட்டிருந்தார்கள்

கெளரவ் பன்சல் கிழக்கு டெல்ஹி, கர்க்கார்டூமா பகுதியில் மொத்த ரேஷன் கடை ஒன்றை வைத்திருந்தார். ஜூன் மாதம் 9ம் திகதி பிற்பகல் அவர் காணாமற் போயிருந்தார். மறுநாள், டெல்ஹியின் புறநகர்ப் பகுதியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் மரமொன்றில் தொங்கிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு , ஒரு இளையவர் உட்பட, மூன்று பேரை டெல்ஹி பொலிஸ் கைது செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவரே இவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து தன்னைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டதாகக் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து டெல்ஹி பொலிசார் தெரிவித்துள்ளனர்.



கொலை செய்யப்பட்ட பன்சால் தன்னை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு, தன்னைக் கொலை செய்வதற்காகப் பணம் கொடுத்ததாகவும், ‘தான் கொலை செய்யப்பட்டால் காப்புறுதிப் பணம் தனது குடும்பத்துக்குக் கிடைக்கும்’ என பன்சால் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளையவர் கூறியதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளையவர் தனது மரக்கறி வியாபாரியான நண்பர் மனோஜ் (21), மனோஜின் நண்பர்களான, பைகள் தைக்கும் சுராஜ் (18), சுமித் (26) ஆகியோரை இத் திட்டத்தில் இணைத்துக்கொண்டதாகவும் விசாரணையின் போது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக வருமானமேதுமின்றி இருந்தார்களெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் கடந்த சில மாதங்களாகப் பணமுடையில் இருந்தாரென்றும், இரண்டு கடன்களை அவர் திருப்பிக் கொடுக்கவேண்டி இருந்ததென்றும், அதில் ஒன்று, 6 இலட்சம் ரூபாய்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

35 வயதுள்ல பன்சாலுக்கு, மனைவியும், 9,7 வயதுகளில் இரண்டு ஆண் பிள்ளைகளும் உண்டு. பன்சால், குற்றம் சாட்டப்பட்ட இளையவரை 20 நாட்களுக்கு முன்னர் தான் முதன் முதலில் முகநூலின் மூலம் நட்பாகியிருந்தார் எனவும், பின்னர் தனது திட்டத்தைத் தெரிவித்தபோது அந்த இளையவர் முதலில் மறுப்புத் தெரிவித்திருந்தார் எனவும் விசாரணையின்போது தெரியவந்திருந்தது. பின்னர் பன்சால் 80,000 ரூபாய்களைத் தருவதாகக் கூறி இளையவரை ஒப்புக்கொள்ள வைத்தார் எனத் தெரியவருகிறது.

குற்ரம் சாட்டப்பட்டவர் இக் கொலைக்கான அனைத்து திட்டமிடல்களையும் பன்சாலுடன் முகநூலின் மூலமேயே செய்திருந்தார் என இவ் வழக்கை விசாரித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக ‘தி இண்டியன் எக்ஸ்பிரெஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  இந்திய வம்சாவளியினரே அமெரிக்காவின் சராசரி பணக்காரர்கள்